இப்போதெல்லாம் “அடிக்கடி டயர்டா இருக்கு. முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்குமோனு தோணுது டாக்டர்! ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க” என்று பலர் கேட்கிறோம். இப்படி மாத்திரைகள் மூலமாக வைட்டமின்களை அதிக அளவு எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் வைட்டமின்கள் நம் உடலின் பல இயக்கங்களுக்கு மிகவும் அவசியம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக வைட்டமின் C நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்றும், கண் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வைட்டமின் A சிறந்தது என்றும், வைட்டமின் B நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள அவசியம் என்பது நமக்கு தெரியும். வைட்டமின்களை எடுத்துக்கொள்வதால் நமது ஆயுட்காலம் கண்டிப்பாக அதிகரிக்கும் தான். ஆனால் இது உணவின் மூலமாக அவற்றை எடுத்துக்கொள்ளும் போது மட்டுமே!!

Credit: Medical News Today
உணவின் மூலம் வைட்டமின்களின் நல்ல, பயனுள்ள கூறுகளைப் பெற முடியும். ஆனால் மாத்திரைகள் மூலம் அப்படி பெற முடியாது!!
ஆய்வுகள்
அமெரிக்காவில் 20 வயதை தாண்டிய 27,000கும் மேற்பட்டவர்களைக் கொண்டு 1999 முதல் 2010 வரை ஆய்வு செய்துள்ளனர். அதில் பங்கேற்பாளர்கள் ஆண்டு கடந்த 24 மணி நேரத்தில் என்ன சாப்பிட்டார்கள் என்பதையும் கடந்த 30 நாட்களில் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டார்களா என்றும் கேட்டறிந்துள்ளனர். அதன் பிறகு பல வருடங்கள் அவர்கள் உடல் நிலையை கண்காணித்ததில் ஆய்வு காலத்தில் சுமார் 3600 பேர் இறந்துள்ளனர். அதில் 945 பேர் இதய பிரச்சனையாலும் 805 பேர் புற்றுநோயாலும் இறந்துள்ளனர்.
இந்த ஆய்வில் போதுமான அளவு வைட்டமின் K அல்லது மக்னீசியம் எடுத்து கொண்டவர்களுக்கு இறப்புக்கானஆபத்து மிக குறைவு என்பதையும், போதுமான அளவு வைட்டமின் A, K ஜின்க் அல்லது காப்பர் எடுத்து கொண்டவர்களுக்கு இதய பிரச்சனைகளால் ஏற்படும் இறப்புக்கு ஆபத்து மிக குறைவு என்பதையும் கண்டறிந்துள்ளார்கள். ஆனால் வைட்டமின்களை எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்று அதாவது உணவில் இருந்தா அல்லது மாத்திரைகள் மூலமாகவா என கவனிக்கும் போது உணவில் இருந்து பெறும் போது மட்டுமே இறப்புக்கான ஆபத்து குறைவு. மாத்திரைகள் வடிவில் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ஆபத்துக்கள் அதிகரிக்க ஆரம்பித்தன!
வைட்டமின் D
வைட்டமின் D நம் உடல் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. 5 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தினமும் 10 மில்லிகிராம் வைட்டமின் D தேவை. ஏனெனில் இது தான் எலும்புகள் உறுதியாக இருக்க கால்சியத்தை உறிஞ்ச நமக்கு உதவுகிறது .சூரிய ஒளியில் வைட்டமின் D அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் குளிர் மழை காலங்களில் இதை பெறுவது கடினம். நார்வே போன்ற சூரிய ஒளி அடிக்கடி கிடைக்காத நாடுகளில் உள்ளவர்கள் வேண்டுமானால் வைட்டமின் D மாத்திரைகள் எடுத்து கொள்ளலாம். ஆனால் நமக்கு மாத்திரைகள் தேவையே இல்லை.

Credit: The New york Times
உடலில் வைட்டமின் D அதிகமாகும் போது, கால்சியம் சத்து உடலில் அதிகமாகி சிறுநீரகத்தில் படிந்து, கற்களை உண்டாக்கி விடும். இதனால் அடிவயிற்றில் வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் சிறுநீரகமே கூட செயலிழக்க நேரிடும். வைட்டமின் D உணவின் மூலமாக கிடைக்க மீன் எண்ணெய், முட்டை, இறைச்சி, ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
வைட்டமின் ஏ
வைட்டமின் A ஒரு ஆன்டி ஆக்ஸிடண்ட். இது நமக்கு கண் சார்ந்த பல பிரச்சினைகளை போக்கும். ஆனால் சில ஆய்வுகள் இது அதிகமாகும் போது தீமையை தரும் என்கின்றன. இவற்றை அதிக அளவு எடுத்து கொள்வது சில வகை புற்றுநோயை உருவாக்கும். ஆம்! அடிக்கடி புகை பிடிக்கும் ஆண்களை கொண்டு பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் தொடந்து வைட்டமின் A மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பல ஆண்களுக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதவர்களை விட நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
வைட்டமின் ஏ அதிகமாக உடலில் சேரும் போது பசியின்மை, வாந்தி, தோல் பிரச்சனைகள், தலைவலி, முடி உதிர்தல், தூக்கமின்மை ஏற்படும். உடலில் இருந்து வெளியேற்றப்பட முடியாமல் கல்லீரலிலே தங்குவதால், கல்லீரல் செயல்பாட்டையே பாதிக்கும். அதனால் மாத்திரைகளுக்கு பதில் கேரட், பப்பாளி, மஞ்சள் நிற குடமிளகாய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கீரை இவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் A குறைபாட்டைத் தவிர்க்கலாம்.
வைட்டமின் C
வைட்டமின் C சளியைப் போக்க உதவும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய பல ஆய்வுகளின் படி வைட்டமின் C மிக மிக குறைந்த அளவு தான் சளிக்கு மருந்தாக உள்ளதாம். 2000 மில்லிகிராமுக்கு மேல் அதிகமாக எடுத்துக்கொள்வது சிறுநீரக கற்களை உருவாக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதனால் மாத்திரைகளை முற்றிலும் விட்டுவிட்டு உணவின் மூலம் மட்டுமே வைட்டமின் C ஐ எடுத்துக்கொள்ளுங்கள். சிட்ரஸ் வகைகளான ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி மற்றும் பப்பாளி, கீரை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் C குறைபாட்டை போக்கலாம்.
வைட்டமின் B3
அல்சைமர் மற்றும் இதய நோய்களைத் தவிர்க்க வைட்டமின் B3 எடுத்துக் கொள்வது தான் சிறந்தது. ஆனால் 25,000 கும் மேற்பட்ட இதய நோயாளிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் பல ஆண்டுகளாக வைட்டமின் B3 எடுத்துக்கொண்டவர்கள் இதயநோயோ இறப்புக்கான விகிதமோ குறையவே இல்லை. அதனால் இவற்றை மாத்திரைகளாக எடுத்துக் கொள்வது அவசியமே இல்லை. முட்டை, பால், நெய், சோயா பீன்ஸ், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் B3 அதிகம் உள்ளது என்பதால் அவற்றை சாப்பிடலாம்.
ப்ரோபயாட்டிக்ஸ்
பால் போன்ற உணவுப் பொருள்களில் இருக்கும் நமக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியாக்கள் தான் ப்ரோபயாட்டிக்ஸ் (Probiotics). இவை தயிரில் மிக அதிக அளவு இருக்கின்றன. அதே சமயம் ப்ரோபயாட்டிக்ஸ் எனப்படும் இவை சில நேரங்களில் மட்டுமே நன்மை அளிக்கின்றன. சில சமயம் எதுவுமே செய்வதில்லை. இவற்றின் பண்புகள் குறித்து இன்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். அதனால் இதற்காக மாத்திரைகளை தேவையில்லாமல் உபயோகிக்காதீர்கள்.

Credit: nof
கால்சியம்
அதிக அளவு கால்சியம் நாள் ஒன்றுக்கு 1,000 மில்லிகிராம்கள் என அதிகமாக எடுத்து கொண்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாம். ஆனால் உணவின் மூலம் எடுத்து கொள்வதால் எந்த பிரச்சனைகளும் இல்லை. மத்தி மீன், பால் பொருட்கள், கீரை வகைகளில் கால்சியம் அதிகமாக உள்ளது.
ஜிங்க்
வைட்டமின் C போல இல்லாமல் ஜிங்க் உண்மையிலேயே சளிக்கு எதிராகப் போராடுகிறது. சாதாரண சளிக்கு ஜிங்க் அடங்கிய உணவுகள் நல்ல மருந்தாகும். அத்திப்பழத்தில் ஜிங்க் அதிகம் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இதற்கு மாத்திரைகள் கூட எடுத்து கொள்ளலாம் என்கிறார்கள் சில ஊட்டச்சத்து நிபுணர்கள்.
வைட்டமின் E
வைட்டமின் E புற்றுநோயை தடுக்க வல்லது என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. சுமார் 36,000 ஆண்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வைட்டமின் E எடுத்துக்கொண்டவர்களுக்கு தான் ப்ரோஸ்டேட் (prostate) புற்றுநோய்க்கான ஆபத்து அதிகமாக ஏற்பட்டுள்ளது. மிக அதிக அளவு வைட்டமின் E இறப்பை கூட ஏற்படுத்துமாம். இன்றைய இளம் தலைமுறையினர் பலர், முகப்பரு பிரச்னை வந்தால் தாங்களாகவே வைட்டமின் E மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது நிச்சயம் நல்லதல்ல. வைட்டமின் E வேண்டுமென்றால் கீரைகள் அதிக அளவு சாப்பிடுங்கள்.
போலிக் அமிலம்
போலிக் அமிலம் (Folic Acid) என்பது B9 வைட்டமின். இது உடலில் புது செல்கள் உருவாக மிகவும் அவசியமானது. கர்ப்பமாக உள்ள பெண்களும், குழந்தை பெற்று கொள்ளத் தயாராகும் பெண்களும் இதனை தினமும் 400 மைக்ரோகிராம் அளவு எடுத்துக்கொள்ளலாம் என்று சுகாதார நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் கரு வளரும் போது உடலுக்கு இந்த ஊட்டச்சத்து மிகவும் தேவைப்படும்.
வைட்டமின் K
ரத்தம் உறைதலுக்கு வைட்டமின் K மிகவும் அவசியம். ஆனால், இது உடலில் அதிகமாகும்போது அளவுக்கதிகமாக ரத்தம் உறைந்து ரத்தக் கட்டிகளை உண்டாக்கிவிடும். இந்த ரத்தக் கட்டிகள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்திவிடும். இதனால் திடீர் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம். அதனால் கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், சோயா எண்ணெய் இவற்றை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் K குறைபாடுகளை தவிர்க்கலாம்.
உண்மையில் உணவின் மூலமாக வைட்டமின்களை எடுத்துக் கொள்ளும் போது எந்த ஆபத்தும் கிடையாது. ஆனால் உணவில்லாமல் வேறு வடிவில் “சப்ளிமென்ட்டாக” எடுத்துக் கொள்வது நிச்சயம் ஆபத்து தான். ஏனெனில் உணவின் மூலம் வைட்டமின்களின் நல்ல, பயனுள்ள கூறுகளை பெற முடியும். ஆனால் மாத்திரைகள் மூலம் அப்படி பெற முடியாது. உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்தும், மாத்திரைகள் மூலம் கிடைப்பதும் ஒன்றல்ல என்கிறார்கள் சில ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Credit: First Cry parenting
ஆனால் சில சமயம் நோய்களுக்கு ஏற்ப மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளில் பரிந்துரைப்பார்கள். கர்ப்பமாக உள்ள பெண்கள் போலிக் அமிலம் மற்றும் இரும்பு மாத்திரைகள் உண்ண வேண்டும் என பரிந்துரைப்பார்கள். இது மிகவும் அவசியமான ஒன்றாகும். இப்படி பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்வது தவறல்ல. நாமாக ஊட்டச்சத்து வேண்டும் என எடுத்து கொள்ள கூடாது. வாரம் ஒருமுறை எடுக்க வேண்டிய மாத்திரையை தினமும் உட்கொள்கிறவர்களும் உண்டு. அதே சமயம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.
வைட்டமின்கள் நம் உடலுக்கு செய்ய வேண்டியதை செய்ய குறிப்பட்ட அளவு இருந்தாலே போதும். வயதிற்கேற்ப தேவைப்படும் வைட்டமின்கள் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எல்லா வைட்டமின்களும் இருக்கும் படி நமது உணவுப் பழக்கவழக்கத்தைக் முறைப்படுத்தி சமவிகித உணவு உட்கொள்வது மட்டுமே ஊட்டச்சத்து பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாகும்.