இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் பின்னோக்கி நடப்பவர்களுக்கு நினைவுத்திறன் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. நடத்தப்பட்ட சோதனையில், பின் பக்கமாக நடந்துவிட்டு பின்பு சோதனையை மேற்கொண்டவர்கள் முன்னோக்கி நடந்தவர்களை விட அதிக ஞாபக சக்தியுடன் இருந்திருக்கிறார்களாம்.
100 அடி பின்னோக்கி நடப்பது 1000 அடி சாதாரண நடைக்குச் சமமாம்!
இந்த சோதனைக்காக 114 பேர் கொண்ட தன்னார்வலர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு பெண்ணின் பை திருடப்படும் காணொளி ஒன்று காட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதன் படி ஒரு குழு எப்போதும் போல முன்னோக்கியும் ஒரு குழு பின்னோக்கி ஒரு 30 அடி (10மீட்டர் )நடக்குமாரும் கூறியுள்ளனர். மேலும் ஒரு குழு நடக்காமல் இருந்த இடத்திலேயே நிற்கவும் கூறியுள்ளனர். அதன் பிறகு காட்டப்பட்ட காணொளியில் இருந்து 20 கேள்விகள் கேட்கப்பட்ட போது பின்னோக்கி நடந்த குழு மற்ற குழுக்களை விட அதிகமாக இரண்டு கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளது.

வினோத ஆராய்ச்சிகள்
ரோஹம்ப்டன் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் சிலர் இதே விளைவை இது போன்ற ஐந்து வேறுபட்ட சோதனைகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். ஒரு சோதனையில் இதே போன்று ஆனால் சிறு வித்தியாசத்துடன் கொடுக்கப்பட்ட பட்டியலில் எத்தனை வார்த்தைகளை அவர்களால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது என்று சோதனை செய்திருக்கிறார்கள்.
மேலும் சில சோதனைகளில் பங்கேற்பாளர்கள் முன்னோக்கி நடப்பது போன்றும், பின்னோக்கி நடப்பது போன்றும் அல்லது ஒரு நகரும் ரயிலில் காணொளி காண்பது போலவும் கற்பனை செய்யுமாறு கூற, அவர்களும் அது போல செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் முன்னோக்கி அல்லது பின்னோக்கி நடப்பது போன்ற உணர்வை உருவாக்க முயன்று இருக்கிறார்கள். அதன் பிறகு கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் சொல்லி வைத்தது போல பின்னோக்கி நடப்பவர்கள் தான் அதிக சரியான பதிலை அளித்துள்ளனர். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. நமது நினைவாற்றலுக்கான நேரம் மற்றும் இடத்திற்கு இடைப்பட்ட தொடர்பு ஆகியவை முக்கியமானது என்று இந்த சோதனையிலிருந்தது தெரியவந்திருக்கிறது.
ஆனால் நிஜமாகவே பின்னோக்கி நடக்கும் போதும் அல்லது பின்பக்கமாக நடப்பது போல் வெறும் கற்பனை செய்யும் போதும் எப்படி நினைவாற்றல் அதிகரிக்கிறது? என்பதை உண்மையில் விஞ்ஞானிகளாலேயே கண்டுபிடிக்க முடியவில்லையாம். ஆனால் இது போன்ற தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் சரியான காரணத்தை விரைவில் கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஒருவேளை அப்படி கண்டுபிடித்த பின்பு அதை நமது அன்றாட வேலைகளுக்கு ஏற்பப் பயன்படுத்தலாம்.

உண்மையிலேயே பின் பக்கமாக நடக்கும் போது வேறு பல நன்மைகளும் நடக்கின்றன தெரியுமா! ஆமாம் நீங்கள் 100 அடி பின்னோக்கி நடப்பது 1000 அடி சாதாரண நடைக்குச் சமமாம்.
கிடைக்கும் பலன்கள்
- சாதாரணமாக நடக்கும் போது நாம் பெரிதாக எந்த முயற்சியும் எடுத்து நடப்பதில்லை. ஆனால் பின்னோக்கி நடக்கும் போது நமது மனம் நன்கு கவனித்து செயல்படும். இதனால் உடல் விழிப்புணர்வு மேம்படும். உங்களது யோசிக்கும் திறனைக் கூர்மையாக்கும்.
- உடலின் சமநிலையும் அதிகரிக்கும்.
- நம் கால்களில் குறைவாக உபயோகிக்கும் தசைகள் மற்றும் எலும்புகள் பின்னோக்கி நடக்கும் போது நன்கு வலுவாகும்.
- மூட்டு வலி, முதுகு வலி இருப்பவர்களுக்கு இந்தப் பயிற்சி நல்ல பலன் தருகிறதாம் .
- பின்னோக்கி நடப்பதால் கண் பார்வையும் காது கேட்கும் திறனும் கூட மேம்படுவதாக சொல்லப் படுகிறது.
- உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினமும் கொஞ்ச நேரம் பின்னோக்கி நடங்கள். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். மேலும் இந்தப் பயிற்சி நம் உடலுக்குப் புதியது என்பதால் வேகமாக கலோரிகள் குறையுமாம்.
இந்தப் பயிற்சியை தினமும் ஒரு 10 – 15 நிமிடங்கள் செய்தாலே போதும். ஆனால் முதலில் சற்று கவனமாக சில நிமிடங்களுக்கு செய்து விட்டு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.