28.5 C
Chennai
Saturday, February 24, 2024

தடுப்பூசி 101: தடுப்பூசி என்றால் என்ன? செயல்படும் விதம், எப்படி சோதனை செய்யப்படுகிறது?

Date:

நமது நியோதமிழில் வெளிவரும் ‘How does it work?’ தொடரின் ஒரு விளக்க கட்டுரை இது

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு போடப்பட்டு வந்த தடுப்பூசிகள்… இந்த கொரோனா காலத்தில் பெரியவர்களுக்கும் கூட தேவைப்படுகிறது. கொரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்க எல்லா நாடுகளும் போராடுகின்றன. பெரும் பொருட்செலவிலும், தீவிர ஆராய்ச்சியாலும் கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசிகள் நம் உடலில் என்ன வேலை செய்கின்றன? எப்படி செய்கின்றன?

தடுப்பூசி என்றால்  என்ன
Credit: New Atlas

தடுப்பூசிகள்

ஒரு குறிப்பிட்ட நோய்க்காகப் போடும் தடுப்பூசி, அந்த நோயை அடையாளம் காணவும் அதனை எதிர்த்துப் போராடவும் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குப் பயிற்சி கொடுக்கிறது. அதாவது ஒரு போர் நடப்பதற்கு முன்பு இராணுவத்தை ஆயத்தப்படுத்தும் பயிற்சி வகுப்பு போன்றது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், போர் தொடங்கும் வரை காத்திருக்காமல் போர்க்களத்தைப் பார்ப்பதற்கு முன்பே எதிரிகளைக் கண்டுபிடித்து உடல் வெளியேற்றக் கற்றுக்கொடுக்கிறது. இதனால் நோயின் அறிகுறிகள் கூட வெளிப்படாது. கேட்பதற்கு எளிமையானதாகத் தெரியும் இந்த வழிமுறை உண்மையில் எளிதானது கிடையாது. உடலின் இயற்கையான பாதுகாப்பு அம்சங்களால் நடைபெறும் மிகவும் சிக்கலான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி.

தனக்கு எதிரான ஆன்டிபாடிகளை மனித உடலில் உருவாக்கத் தூண்டும் எந்த ஒரு பொருளும் ஆன்டிஜென் தான்!

நோய் எதிர்ப்பு மண்டலம் 

பொதுவாக வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற நோய்க் கிருமிகள் நமது உடலில் நுழைந்து விட்டால், அது உடனே நம் உடலைத் தாக்கி அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் அவை எண்ணிக்கையில் பெருகிப் பரவ ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் தான் பெரும்பாலும் நமக்கு நோய் ஏற்படுகிறது.

மனித உடலில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உடலில் பல நிலைகள் உள்ளன. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சில பகுதிகள், புதிதாக நுழைந்தவற்றிடம் இருந்து, உடனடியாக உடலைப் பாதுகாக்க ஆரம்பிக்கும் அல்லது அவற்றைத் தாக்க ஆரம்பிக்கும்.

Did you know?
இத்தாலியில் தடுப்பூசிக்கு எதிராக பல ஆண்டுகளாக பல இயக்கங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் தடுப்பூசிகளை பல ஆண்டுகளாக மக்கள் புறக்கணித்து வந்திருக்கிறார்கள். கொரோனா உயிரிழப்பு அங்கு அதிகம் ஏற்பட இதுவும் ஒரு காரணம்!

உதாரணமாக, நமது தோல். இது மனித உடலில் இருக்கும், கிருமிகளுக்கு எதிரான முதல் பாதுகாப்பாகும். நமது தோலே நம் உடலில் எந்தவொரு தொற்றும் நுழையாதபடி பாதுகாக்கிறது. ஆனால் தோலில் ஏதாவது சிராய்ப்புகள் அல்லது வெட்டுக்கள் இருந்தால் கிருமிகளுக்கு அதுவே போதும். உடலில் நுழைய ஆரம்பித்துவிடும். அதையும் தாண்டி மூக்கு, வாய் போன்ற திறப்புகள் வழியாகவும் உள் நுழையும்.

Fever
Credit: Healthline

காய்ச்சல்

சரி… அப்படி கிருமிகள் உள்ளே போய்விட்டால் அடுத்த கட்டமாக வாயில் சுரக்கும் உமிழ்நீர் அல்லது வயிற்றில் உள்ள இரைப்பை சாறுகள் போன்ற வேதிப்பொருட்கள் கிருமிகளை உடைக்கவோ அல்லது கொல்லவோ முயற்சிக்கும். மேலும் குளிரான சூழலில் மட்டுமே உயிர்வாழும் கிருமிகளைக் கொல்ல அல்லது பலவீனப்படுத்த உடல் வெப்பநிலையை உயர்த்தும். இதனால் தான் நமக்குக் காய்ச்சல் ஏற்பட்டு உடல் சுடுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 10 வழிகள் போதும்!

அடுத்து நமது நோய் எதிர்ப்பு செல்கள் பல்வேறு வகையான இரத்த வெள்ளை அணுக்களையும், ஆன்டிபாடிகளை உருவாக்கி கிருமிக்கு எதிராக எதிர் வினையாற்றத் தொடங்கும். ஆன்டிபாடிகள் என்பவை Y வடிவ புரதங்கள். இவை குறிப்பிட்ட ஆன்டிஜென்களை தேடி அவற்றை அழிக்க ஆரம்பிக்கும். கூடவே அவை மேற்கொண்டு பெருகாமலும் தடுக்கும். ஆன்டிஜென் என்பது ஒரு நோய்க்கிருமியின் ஒரு துண்டு அல்லது ஒரு துணை தயாரிப்பு. அதாவது ஒரு வைரஸின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு புரதத்தைப் போன்றது. தனக்கு எதிரான ஆன்டிபாடிகளை மனித உடலில் உருவாக்கத் தூண்டும் எந்த ஒரு பொருளும் ஆன்டிஜென் தான். நல்ல விஷயம் என்னவென்றால் ஒரு ஆரோக்கியமான நபரால் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும் என்பதால் பெரும்பாலும் நமது உடலே பல நோய்க் கிருமிகளை எளிதாக அழித்துவிடும்.

எந்த கிருமி நோயை ஏற்படுத்துமோ அதன் பலவீனமான பதிப்பு (Version) தான் தடுப்பூசி!

தடுப்பூசியின் முக்கியத்துவம்

துரதிர்ஷ்டவசமாக, நமது உடல் புதிதாக சில வகை கிருமிகளை எதிர்கொள்ளும்போது, ஆன்டிபாடி மூலம் எதிர்வினை நடக்கப் பல நாட்கள் ஆகலாம். எடுத்துக்காட்டாக அம்மை வைரஸ் போன்ற மோசமான ஆன்டிஜென்களுக்கு, இந்த சில நாள் காத்திருப்பே மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆன்டிபாடிகள் வேலை செய்ய ஆரம்பிப்பதற்குள் இறப்பு கூட நேரிடலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்காகத் தான் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

செயல்படும் விதம்

தடுப்பூசிகள் இறந்த அல்லது பலவீனமான ஆன்டிஜென்களால் தயாரிக்கப்படுகின்றன. அதாவது எது நோயை ஏற்படுத்துமோ அதன் பலவீனமான வெர்ஷன். அதனால் அவற்றால் நோயை ஏற்படுத்த முடியாது. அதே சமயம் அது என்னதான் பலவீனமானதாக இருந்தாலும் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பொறுத்தவரை எதிரி எப்படி இருந்தாலும் எதிரி தான்.

தடுப்பூசியில் உள்ள ஆன்டிஜென்களே அவை அவற்றைத் தேடி அழிக்கத் தேவைப்படும் ஒரே மாதிரியான வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகள் உருவாக்கும் படி நம் உடலை தூண்டும்.அதனால் நம் உடலும் அவற்றை அழிக்கும் ஆன்டிபாடிகளை வேகமாக உருவாக்கி அழித்து விடும்.

Human immune sysytem
Credit: USA Today

ஒருவேளை உடல் எதிர்வினையாற்ற நேரமானால் கூட அதுவரை பலவீனமான கிருமியால் நமக்குப் பாதிப்பு இருக்காது. நோய்க் கிருமிகள் அழிந்தவுடன், பல ஆன்டிபாடிகள் உடைந்து விடும், ஆனால் இந்த தரவுகள் இருக்கும் நினைவக செல்கள் எனப்படும் Memory Cells உடலில் அப்படியே இருக்கும்.ஒருவேளை மீண்டும் அந்த ஆன்டிஜென் உடலுக்குள் வந்தால் நினைவக செல்கள் ஆன்டிபாடிகளை வேகமாக உருவாக்கி உடனே கிருமிகளைத் தாக்கி நோய் ஏற்படாமல் காப்பாற்றும். இது தான் தடுப்பூசியின் தத்துவம்!

தடுப்பூசி கண்டுபிடிக்க தாமதமாக என்ன காரணம்?

நமது நோய் எதிர்ப்பு அமைப்பு என்ன ஆன்டிஜென்களைக் கண்டறிந்து பதிலளிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது தான் ஒரு பயனுள்ள தடுப்பூசியை உருவாக்குவதற்கான முக்கியமான விஷயமாகும்.

தடுப்பூசிகள், நம் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு மோசமான கிருமிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுத்து, எப்படிப்பட்ட கொள்ளை நோயையும் இல்லாமல் செய்துவிடுகின்றன!

இதற்கு பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். எலி மற்றும் குரங்குகளின் சோதித்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது. சில தடுப்பூசிகள் விலங்குகளில் வேலை செய்யும். மனிதர்களில் பலனளிக்காமல் போகலாம். சில தடுப்பூசிகள் பக்கவிளைவை ஏற்படுத்தலாம். இப்படி செயல்படும் விதமே தடுப்பூசியை கண்டுபிடிக்க தாமதத்திற்கும் காரணம்.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!