புகைபிடிப்பது மதுவை விடக் கொடிய பழக்கம். ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் எனத் தெரிந்தும் விட முடியாமல் தவிப்பவர்கள் பலர். எந்தப் பழக்கமாக இருந்தாலும் மனம் முடிவு செய்துவிட்டால், தவறைச் செய்யும் போது செய்யாதே என மூளை கட்டளையிடும். அதன் மூலம் பழக்கத்தை விட்டு விட முடியும். ஆனால், மூளைக்கும் கட்டுப்படாதது புகைப்பழக்கம்.
தற்போது சில உணவுகள் புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புகைபிடிப்பவர்கள் மட்டுமன்றி பழக்கம் இல்லாதவர்கள், பழக்கத்தை விட்டவர்கள் என 680 பேரிடம் ஐரோப்பிய மருத்துவ இதழுக்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நுரையீரல் செயல்பாடுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. புகைப்பழக்கத்தை மருந்தின் மூலம் நிறுத்திய பின், 10 ஆண்டுகள் கழிந்த பின்பும் நுரையீரல் செயல்பாடுகள் சீராக இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது.
ஆய்வின் முடிவில் மருந்துகளை விட தக்காளி, வாழைப்பழம், ஆப்பிள் ஆகிய மூன்றும் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட உதவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்
தக்காளி
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகளில் மிக முக்கியமானது தக்காளி. தக்காளியில் அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. லைகோபைனும் அதிகமாக உள்ளது. இது நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.
வாழைப்பழம்
வாழைப்பழத்திலும் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உள்ளன. வாழைப்பழம் உடலுக்கு அளிக்கும் நன்மைகள் ஏராளம். இந்த வாழைப்பழம் நுரையீரலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிளும் நுரையீரலுக்கு நல்லது. ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரலுக்கு நலம் அளிப்பதோடு சுவாசப் பிரச்சினைகளையும், மூச்சுத் திணறலையும் நீக்குகிறது. இது போன்ற திறன் கொண்ட காய்கறிகள், பழங்களும் நுரையீரல் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும்.
தக்காளி, வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளத் தொடங்கிய பின் புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், இவை நுரையீரலில் நச்சுக்களை வெளியேற்றத் தொடங்குவதோடு நுரையீரலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்குவதாகவும் கூறுகிறார்கள்.