கோபமும் காமமும் உயிர்க்குணங்கள் என்கிறார் நக்கீரர். அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? பார்க்கப்போனால் மன அழுத்தத்திற்கு நம்முடைய கோபமே முழுமுதற் காரணமாயிருக்கும். இதை வேறுமாதிரியும் சொல்லலாம். நம் முடிவுகள் தான் நம்மை உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்யும். முடிவெடுப்பது நம்முடைய மனநிலையினைப் பொறுத்தது. தெளிவான, மகிழ்ச்சியான மனநிலையில் எடுக்கும் முடிவு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இதையே கோபத்தின் போதும் குழப்பமான நிலையின் போதும் செய்தால்? விளைவு விபரீதம் தான். இந்தக்கோபத்தைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள் உள்ளன. அவற்றினைப்பற்றி கீழே காணலாம்.

- பேசுவதற்கு முன்னால் சிந்திப்பது சிறந்தது. அவசரத்தில் கொட்டிவிடும் வார்த்தைகளை அள்ளுவது முடியாத காரியம். காலம் முழுவதும் நம்மை வருந்த வைத்துவிடும் ஆற்றல் நாம் கோபத்தில் பேசும் வார்த்தைகளுக்கு உண்டு. எனவே பேசுவதற்கு முன்னர் உங்களுடைய சொல் எதிரானாவர்களை என்ன செய்யும் என்பதைப் புரிந்துகொள்ள முற்படுங்கள்.
- வேலைகளுக்கு இடையே சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிட ஓய்வு மன அழுத்தத்தைக் குறைத்துவிடும். பிரச்சினைகளுக்கும் முடிவுக்கும் இடையேயான காலத்தை முடிந்தளவு அதிகரிக்கவும். போதிய இடைவெளி எல்லா வேலைகளுக்கும் அவசியம். ஒரே நோக்கில் மனது செயல்படும்போது சோர்வடையலாம். அதன் தொடர்ச்சியாக கோபம் வெளிப்படும்.
- மூன்றாம் நபராய் இருங்கள். உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தூரத்தில் வைத்துப்பாருங்கள். அதில் சம்பத்தப்படாத வேறொருவர் அதனை எப்படி அணுகுவார் என்ற கோணத்தில் சிந்தியுங்கள். பிரச்சனையின் தீவிரத்தால் ஏற்படும் பதற்றம் கூட கோபமாய் மாறலாம்.

- உங்களைப்பற்றி மட்டுமே சிந்தனை செய்யாதீர்கள். நீங்கள் தலைமைப்பொறுப்பில் இருப்பவராக இருந்தால் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அடக்கி ஆளுதலுக்கும், தலைமை வகிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. உங்களைப்பற்றிய மேன்மையான சிந்தனைகள் மற்றவர்களை தாழ்த்தி நினைக்கத் தோன்றும். இது மேலும் சூழலைச் சிக்கலாக்கும். சக ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் போதிய வாய்ப்பளியுங்கள். அவர்களுடைய எண்ணம் எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்வது சிறந்தது. ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் நல்ல ஆரோக்கியமான மன நிலைமையினைத் தரும்.
- உடலுக்கும் மனதிற்குமான சம்பந்தம் மிக முக்கியமானது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுதல் மூலம் மனதினைச் சமநிலையில் வைக்கலாம். எனவே முடிந்தளவு உடற்பெயர்ச்சி செய்ய முயற்சியுங்கள். மூச்சுப்பயிற்சி, யோகா ஆகியவை சிறந்தது.
- மனக் கசப்புகளை மறக்கப் பழகுங்கள். பிரச்சினைகளால் வந்த மோசமான விளைவுகளைப்பற்றி தொடர்ந்து சிந்திப்பதை நிறுத்துங்கள். அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

- தீர்வுகளை நோக்கி நகருங்கள். செய்த தவறுகளைப் பற்றிச் சிந்திக்காமல் அதற்கு உண்டான தீர்வுகளைச் சிந்திப்பதில் ஆர்வம் காட்டுங்கள். வயதில் மூத்தவர்களையும், அனுபவம் வாய்ந்தவர்களையும் அருகினில் வைத்துக்கொள்ளுங்கள்.
- மனதுவிட்டு சிரியுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்கும் மாமருந்து சிரிப்பு மட்டுமே. தினமும் உடற்பயிற்சி போலவே சிரிப்பதற்கும் நேரம் ஒதுக்குங்கள். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிடத் தவறாதீர்கள்.

- இறுதியாக எந்த சூழ்நிலையிலும் இரவு உறக்கத்தை விடாதீர்கள். குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத் தூக்கம் அவசியம். தூக்கமின்மை உடற்சோர்வையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தவல்லது.