நம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஸ்பெயின் நாட்டில் மருத்துவர் ஒருவர், காலை எழுந்தவுடன் திடீரென தனது இரு கைகளின் மணிக்கட்டிலும் வித்தியாசமான வலியைக் உணர்ந்தார். அந்த வலியானது, மருத்துவருக்கு அதிகப்படியாக செல்போனை உபயோகப்படுத்தியதால் ஏற்பட்டது.

குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் மோகம்!
ஸ்மார்ட்போன்கள் நம் எல்லோருடைய வாழ்விலும் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று மணி நேரத்திற்கும் மேலாக செல்போன் பயன்பாட்டில் தங்களது நேரத்தை செலவழிக்கின்றனர்.
பெரும்பாலும், மக்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். அவற்றில் ஒரு நாளில் கணிசமான நேரத்தினை மற்றவர்களுக்கு Message அனுப்புவதில் செலவழிக்கின்றனர். இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 க்கும் மேற்பட்ட முறை தங்கள் செல்போன் திரைகளைப் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்றால் என்ன?

வாட்ஸ்அப்பிடிஸ் பற்றி முதல் செய்தி கடந்த 2014 ஆம் ஆண்டில் தி லான்செட் எனும் மருத்துவ இதழில், 34 வயதான மருத்துவர் மூலம் வெளியானது. அவர் தனது மணிக்கட்டு மூட்டுகள் மற்றும் கட்டைவிரல் இரண்டிலும் அதிகபடியான வலி ஏற்பட்டதை உணர்ந்தார்.
மருத்துவர், தொடர்ச்சியாக 6 மணி நேரத்திற்கும் மேலாக செய்தி அனுப்பும் போது தனது கட்டைவிரலின் தசை நாண்களில் வீக்கம் இருப்பதை கண்டறிந்தார். பொதுவாக, அதிக நேரம் செல்போன்கள் பயன்படுத்தும் போது தசைநார் அலர்ஜி மற்றும் காயம் ஏற்படலாம். இதன் காரணமாக, கட்டைவிரலை நகர்த்துவதில் வலி மற்றும் சிரமம் ஏற்படுவதாக எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகப்படியான ஸ்மார்ட்போன் உபயோகத்தால் ஏற்படும் உடல் தொடர்பான பிற பிரச்சினைகள்!
டி குவெர்னின் டெனோசினோவிடிஸ் என்பது கையடக்க மின்னணு சாதனங்களின் அதிக அளவு பயன்பாடு காரணமாக கட்டைவிரலின் தசை நாண்களின் வீக்கம் இருக்கும் மற்றொரு நிலை ஆகும். இது, பிளாக்பெர்ரி கட்டைவிரல் (BlackBerry Thumb), குறுஞ்செய்தி கட்டைவிரல் (Texting Thumb) அல்லது (Gamer’s Thumb) விளையாட்டாளரின் கட்டைவிரல் என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக, ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கார்பல் டன்னல் (Carpal Tunnel) நோய்க்குறியின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். இது கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுத்தர மற்றும் மோதிர விரலின் பாதியில் வலி, கூச்ச உணர்வு, எரியும் உணர்வு மற்றும் உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

மேலும், அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு கட்டைவிரலின் அடிப்பகுதியில் உள்ள மூட்டுகளின் கீல்வாதத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) – மீள்வது எப்படி?

வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) சிகிச்சையானது மற்ற மருத்துவ சிகிக்சை போலவே உள்ளது. மேலும், இதனை குணப்படுத்துவதை விட தடுப்பு முறையே (வரும் முன் காப்பதே) சிறந்த தீர்வாகும்.
உங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கு முக்கியமான செயலிகள் (App) வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நீங்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்பதனை எளிதாக அளவிட முடியும்.
இந்த செயலியை பயன்படுத்தி உங்களது செல்போன் பயன்பாட்டின் அளவை குறைக்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, 15-20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக உங்கள் செல்போனை பயன்படுத்த வேண்டாம். ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் போது, கை வலியைத் தவிர்க்க உங்கள் மணிகட்டை நேராக வைத்திருங்கள், உங்கள் செல்போனினை இரு கைகளிலும் பிடித்து பயன்படுத்த முயற்சிப்பது நல்லது.

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது, உங்கள் கட்டைவிரலில் உள்ள அழுத்தத்தை குறைக்க மற்றவருக்கு செய்திகளை பகிரும் போது விரல்களை அழுத்தி மெசேஜ் செய்வதனை காட்டிலும், வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது சிறந்த வழிமுறையாகும்.
உங்களிடம் வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) உடல் உபாதையின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், மேற்கூறியவற்றை பின்பற்றி அவற்றை தவிர்க்கலாம் அல்லது உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகுவது சிறந்த வழிமுறையாகும். இந்த அதிவேக விஞ்ஞான கண்டுபிடிப்பு சாதனங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்டவை.
ஆனால், நமது உடற்கூறுகள் இந்த விஞ்ஞான பரிணாம வளர்ச்சியால் தங்களை உருவமைத்து கொள்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். ஆகையால், நாம் தற்போதுள்ள கால சூழலில் நமது உடல் அமைப்புகளை கருத்தில் கொண்டு கவனத்துடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனங்களை பயன்படுத்துதல் இன்றியமையாததாகின்றது.