மகிழ்ச்சி என்பது எப்போதும் பெரிய பெரிய விஷயங்களாக தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. பல நேரங்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு சந்தோஷத்தைத் தருகின்றன. உண்மையில், நண்பர்களுடன் பேசுவது, சிறு குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது, ஏன் சிலருக்கு மழையில் நனையும் போது கூட மகிழ்ச்சி கிடைக்கிறது. உங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? நீங்கள் எப்போதும் பிஸியாக இருக்கும் உங்கள் தினசரி வாழ்க்கையில் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி கீழே கொடுக்கப்பட்ட செயல்களை செய்யுங்கள். உங்கள் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு நிச்சயம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

நேர்மறைக்கு முன்னுரிமை அளியுங்கள்
உங்கள் அன்றாட வாழ்வில் உங்களுக்கு பிடித்த சில செயல்களை செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். பிடித்த செயல்களை ஒருபோதும் ஒதுக்கி வைக்காதீர்கள். அதாவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களுக்கு எப்படியாவது நேரம் ஒதுக்குங்கள். அது பிறருக்கு பாதிப்பில்லாத செயலாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்களுடைய நாள் உங்களுக்குப் பிடித்ததாக மாறும். இதனால் நீங்கள் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மகிழ்ச்சியான மூன்று விஷயங்களை எழுதுங்கள்!
தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு அன்று உங்களுக்கு நடந்த மூன்று நல்ல விஷயங்களை எழுதுங்கள். அதைப் பற்றிய விவரங்களையும் விரிவாக எழுதுங்கள். அப்படி இருப்பதாக தோன்றவில்லை என்றாலும் விடாதீர்கள். யோசித்து எழுதுங்கள். அது எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி..எழுதுங்கள்.. இந்தப் பழக்கத்தால் நாளடைவில் நிச்சயம் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். காரணம் எல்லாவற்றிலும் நீங்கள் நல்லதை பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள். உங்கள் எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இது போதுமே! மகிழ்ச்சி உங்களை தேடி வந்துவிடும். மார்ட்டின் செலிமன் (Martin Seligman) என்ற உளவியலாளர் தான் இந்த வழிமுறையை உருவாக்கியவர். மேலும் முகநூல் நிறுவனத்தில் முதன்மைச் செயற்பாட்டு அலுவலராக உள்ள ஷெரில் சாண்ட்பெர்க் (Sheryl Sandberg) இந்த வழியை அவர் பின்பற்றுவதாக கூறியுள்ளார்.
நேரத்தை மிச்சப்படுத்த பணத்தை செலவு செய்யுங்கள்
நேரத்தை மிச்சப்படுத்த பணத்தை செலவு செய்பவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக Proceedings of the National Academy of Sciences என்ற பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வின் போது சிலர் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவே குறிப்பிட்ட ஒரு தொகையை செலவிடுகிறார்களாம். இதனால் அவர்கள் ஒரு திருப்திகரமான மனநிலையை அடைவதாக தெரிவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக மிகவும் பிஸியான ஒரு நாளில் சமைக்காமல் உணவை ஆர்டர் செய்யலாம். நேரத்தை சேமிக்க ஏதேனும் வழி இருந்தால் அதைச் செய்யலாம். இதனால் உங்கள் மன அழுத்தம் குறையும்.
மாலை நேர திட்டம்
பொதுவாக மாலை நேரம் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் எப்படியும் கிடைக்கும் நேரத்தை வீணாக்கத் தான் செய்வோம். அதோடு உங்கள் அலுவலகம் போல் நீங்கள் முடித்தே ஆக வேண்டும் என்ற பெரிய வேலைகளும் இருக்காது. உற்பத்தி நிபுணர் மற்றும் ஆசிரியரான லாரா வெண்டேர்கம் (Laura Vanderkam) இது பற்றி கூறுகையில் “வேலை முடிந்து வந்ததும் களைப்பாக இருப்பதால் நம்மால் எதையும் செய்ய முடியாது என்று தான் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் பல மணி நேரத்தை வீணாக்குகிறோம். அதனால் தினமும் மாலை எதாவது ஒரு எளிதான செயலை செய்ய பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.” என்கிறார்.அதாவது உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது, நண்பர்களுடன் பேசுவது, உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது, நல்ல நாவல்கள் படிப்பது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
புகைப்படம்

இந்த வழியை “Solve For Happy” என்ற புத்தகத்தை எழுதிய மோ கவ்டட் (Mo Gawdat) கூறியுள்ளார். இவர் X நிறுவனத்தின் தலைமை அலுவலராக இருந்தவர். தினமும் அவர் அலுவலகம் செல்லும் போது அழகான ஒன்றைத் தேடி அதனை புகைப்படம் எடுப்பாராம். எனவே அப்போது அவர் மனம் எந்த கவலை தரும் விஷயத்தையும் நினைப்பதில்லை. இதனால் இவர் அலுவலகம் செல்லும் போது எந்த மனஅழுத்தமும் இல்லாமல் செல்வார். இதுவும் ஒரு வித தியானம் தான் என்று அவர் கூறுகிறார்.
சக பயணியுடன் பேசுங்கள்
Journal of Experimental Psychology என்ற பத்திரிகை வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில் பயணங்களின் போது சக பயணியுடன் பேசி கொண்டே செல்பவர்கள் மகிழ்ச்சியாக பயணிப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் இது போல் புதிய நபருடன் பேசுவது சரியல்ல என்றும் நேரத்தை வீணடிப்பது என்றும் பலர் நினைக்கிறார்கள். சில நேரங்களில் இது உண்மை என்றாலும் பிரச்சனை இல்லை என்னும் பட்சத்தில் நீங்கள் பேசலாம். இது உங்கள் மன அழுத்தத்தை போக்கி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
உங்கள் எண்ணங்களை அப்படியே எழுதுங்கள்
தினமும் காலை உங்கள் மனதில் வரும் எண்ணங்களை குறிப்பு போல எழுதுங்கள். உங்கள் பிரச்சனைகளையும் தான். அதாவது உங்கள் மனதில் ஓடும் எதுவாக இருந்தாலும் சரி. அப்படியே எழுதுங்கள். இது போல் எழுதும் போது சில விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் பயம், கவலை உங்களை விட்டு போய் விடும். உண்மையில் உங்கள் பிரச்சனை ஒன்றும் தீரப்போவதில்லை. ஆனால் அந்த விஷயங்கள் திரும்ப திரும்ப மனதில் வந்து வந்து உங்கள் நாளை நிச்சயம் வீணடிக்காது. இல்லையெனில் நாள் முழுவதும் அதைப்பற்றியே யோசிப்பீர்கள். இது உண்மையா என்றால் உண்மை தான் என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் டிம் பெரிஸ் (Tim Ferriss). இது போல் தினமும் காலை எழுதும் பழக்கத்தை அவர் எப்போதும் கடைபிடிப்பதாகவும் அதனால் அவர் குழப்பம் இன்றி மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.