டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் உலகமெங்கிலும் வெகு காலமாகவே இருந்து வருகிறது. பலருக்கு இவை இல்லாமல் அந்த நாள் முழுமையடைவதில்லை. சமீப காலமாக மக்களிடையே கிரீன் மற்றும் பிளாக் டீ ஆகியவையும் பிரபலமடைந்து வருகின்றன. உடல் எடையை குறைக்க பெரும்பாலான மக்கள் க்ரீன் டீ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆனால் உண்மையில் கிரீன் டீ உடல் பருமனை குறைக்கும் மகத்துவம் பெற்றதா? அதற்கு முன்னால் கிரீன் டீ என்பது என்ன என்று பார்த்து விடலாம்.

சாதாரண தேயிலையில் இருந்து தான் இந்த கிரீன் டீயும் தயாரிக்கப்படுகிறது. அதாவது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டீத்தூள் பலகட்ட தயாரிப்பு முறைகளை கடந்து வந்ததாகும். ஆனால் கிரீன் டீ தயாரிப்பு முறை மிக எளிமையானது. இதில் கெட்டசின்ஸ் (Catechins) என்னும் உயிரி ஆற்றல் மூலக்கூறுகள் அதிகம் உள்ளன. இவை உடல் நலத்திற்கு நன்மை பயப்பனவாக இருக்கின்றன. கெட்டசின்ஸ்களில் பலவகை இருக்கிறது. கிரீன் டீயில் இருப்பது EGCG எனப்படும் கெட்டசின்ஸ் ஆகும். இவை உடலுக்கு சுறுசுறுப்பை தரவல்லவை.
கிரீன் டீயும் கேன்சரும்
கிரீன் டீ கேன்சரைக் குணமாக்கும் என்னும் செய்தியும் அதிகம் வாட்சப்களில் உலவுகிறது. நம்மாட்களுக்கு ஒன்று பிடித்துவிட்டால் போதும் சர்வரோக நிவாரணி அதுமட்டும்தான் என நம்பிவிடுவார்கள். அந்தக்கதைதான் இங்கேயும். உண்மையில் கிரீன் டீயில் கேன்சரைத் தடுக்கும் எந்த விசேஷ குணமும் இல்லை. கடந்த 2009 ஆம் ஆண்டு பெரும் மருத்துவக்குழு ஒன்று கிரீன் டீ கேன்சரை தடுக்குமா? என்ற ஆராய்ச்சியில் இறங்கி உதட்டைப் பிதுக்கியது தான் மிச்சம்.
இதேபோல் இருதய நோய்களை கிரீன் டீ குணமாக்கும் எனவும் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். சரி உடல் எடையையாவது குறைக்குமா? அங்கேயும் ஒரு சிக்கல் இருக்கிறது.

உடற்பயிற்சி சரியான உணவுக்கட்டுப்பாடு இல்லாமல் வெறும் கிரீன் டீ மட்டும் குடித்தால் உங்கள் பர்ஸின் எடை வேண்டுமானால் குறையலாம். மற்றபடி எடை குறைய வாய்ப்பு குறைவுதானாம். அதே நேரத்தில் ஆசிய மக்களுக்குத்தான் இந்த கொசுறு எடைக்குறைப்பும் நடக்கிறது. ஒருவேளை சுற்றுச்சூழல் காரணிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
குடிக்கலாமா வேண்டாமா?
கிரீன் டீ குடித்தால் நல்லது என பல விளம்பரங்கள் டிவிக்களில் படையெடுத்திருக்கின்றன. அவர்கள் சொல்லும் தரவுகளில் பெரும் வித்தியாசம் இருக்கிறது உண்மைதான் என்ற போதிலும் கிரீன் டீ உடல்நலத்திற்கு எந்த வகையிலும் ஆபத்தானது அல்ல என்பதே மருத்துவர்களின் ஆலோசனை. ரொம்ப சிம்பிள். கிரீன் டீ குடிக்க வேண்டுமென்றால் குடிக்கலாம். அது உங்களின் விருப்பம் மட்டுமே.
Also Read: சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 15 நன்மைகள்!
கோடைக்காலத்தில் தேங்காய்ப் பாலை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!