இந்தியாவில் 328 மருந்துகளுக்குத் தடை – உங்கள் வலிநிவாரணி தப்பித்ததா ?

0
69

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் 328 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. தடை விதித்துள்ள மருந்துகளில் சேரிடான் (வலி நிவாரணி), க்ளூகோநாம் பிஜி (ஆன்டி பயோடிக்), டாசிம் ஏஇசட் உள்ளிட்ட புகழ்பெற்ற மருந்துகளும் அடங்கும். அதே சமயம் டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் தடையில் இருந்து தப்பித்துள்ளன.

Credit : GNS

மத்திய அரசு 2016 – ஆம் ஆண்டு, 349 மருந்து பொருட்கள் உட்கொள்ளத் தகுதியற்றவை எனக் கூறி அவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதித்தது. ஆனால், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், 2017 – ஆம் ஆண்டு, மருந்துகள் குறித்த ஆலோசனைக் குழுவான டிடிஏபி (DTAB) இது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

இதன் படி, மருந்துத் தொழில்நுட்ப ஆலோசனைக் கழகம் ஆய்வு மேற்கொண்ட போது 328 மருந்துகளில் வேதிப் பொருட்களின் சேர்க்கை விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனவும், இவைகள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு தற்போது பிக்ஸ்டு – டோஸ் காம்பினேஷன் ( fixed-dose combination- FDC) எனப்படும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மருந்துகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்படும் 328 மருந்துகளைத் தடை செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

Credit : Financial Express

ஒரே மருத்துவ குணம் கொண்ட 2 அல்லது 3 மருந்துகளை சேர்ந்து கொடுத்தால் அதன் சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவத் துறையில் நம்பப் படுகிறது. இதனால் சளி, காய்ச்சல், சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இரண்டுக்கும் அதிகமான மருந்துகளைச் சேர்த்து கூட்டு மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்கப் படுகின்றன.

இப்படி இரண்டுக்கும் அதிகமான மருந்துகள் சேர்க்கப்படுவதால், அவற்றின் பக்க விளைவுகளும் அதிகரித்து உடல்நலக் கேடு ஏற்படுகிறது. இதனால் பல வெளிநாடுகளில் இத்தகைய கூட்டு மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தன. இப்போது அப்படி விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 6000 பிராண்ட் மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்திய மருந்துப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் சங்கத்தில் இருந்து, இந்தத் தடையால் மருந்துச் சந்தையில், வருடத்திற்கு 1600 கோடி ருபாய்  வரை இழப்பு ஏற்படலாம் என்றும், நாங்கள் சட்டத்தை மதித்து நடந்து கொள்வோம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று காலையிலிருந்து கூட்டு மருந்துகள் மீதான இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் தடையால் இவற்றை உருவாக்கவோ பயன்படுத்தவோ, சோதனை செய்யவோ கூடாது. தடை செய்யப்படும் மருந்துகளின் எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடை செய்யப்பட்டிருக்கும் 328 மருந்துகளின் பட்டியலைக் காண இங்கே சொடுக்கவும்.