மழைக்காலத்தில் தொற்று நோய்கள் மட்டுமன்றி புதிய நோய்கள் உருவாவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இப்போது நாம் சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை. ஆரோக்கியமான உணவுகளைக் கூட தவறான நேரத்தில் சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
எனவே மழைக்காலத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களை இப்போது காணலாம்.
மழை பெய்யும் நேரத்தில் சூடான எண்ணெயில் வறுத்த உணவுகள் சுவையை அளித்தாலும் ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. செரிமானத்தை பாதிப்பதோடு வயிற்றுப் புண், வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

வெள்ளை அரிசி
மழைக்காலத்தில் வெள்ளை அரிசி சாப்பிடுவது குடலில் வீக்கம் மற்றும் நீர்த்தேக்கத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைதல், செரிமான மண்டலத்தில் சிக்கல் போன்றவை ஏற்படவும் வாய்ப்புள்ளது பழுப்பு அரிசி சாப்பிடுவது பலனளிக்கும்.
பருவ மழைக்காலங்களில் கடல் உணவுகளான மீன், இறால் மற்றும் நண்டு போன்றவற்றைச் சாப்பிடுவது வயிற்றில் தொற்று நோய்களை உண்டாக்கும் சில சமயம் விஷமாக மாறக் கூட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இந்தக் காலத்தில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
இறைச்சி
இறைச்சி உணவுகள் செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் மழைக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. சூப் வகைகளை சாப்பிடலாம். இவை எளிதில் செரிமானம் அடைவதோடு பிரச்சினைகளை ஏற்படுத்தாது.
கீரைகள்
மழைக்காலங்களில் கீரைகளைச் சாப்பிட்டால் அவற்றில் இருக்கும் பூச்சிகள் மற்றும் இதரக் கிருமிகள் வயிற்றைப் பதம் பார்த்து விடும். முட்டைகோஸ், காலி பிளவர், ப்ரோக்கோலி போன்றவற்றையும் தவிர்த்து விடலாம்.
பழச்சாறு
மழைக்காலங்களில் வீட்டில் தயாரித்த பழச்சாறுகளை குடிப்பதே நல்லது. தரமில்லாத பழச்சாறை குடிப்பது மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
வெட்டி வைத்த பழங்கள்
நறுக்கப்பட்ட பழங்கள் திறந்த வெளியில் வைக்கப்பட்டால் அறவே தவிர்த்து விடலாம். காற்றில் உள்ள ஈரப்பதம் மூலம் அவற்றில் பரவும் பாக்டீரியாக்கள் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும்.

எண்ணெய்
மழைக்காலத்தில் கடுகு மற்றும் எள் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவது தொற்று நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மிதமான எண்ணெய்களான சோளம் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
காளான்
மழைக்காலங்களில் காளான்கள் மூலம் பரவும் பாக்டீரியாக்கள் அவற்றைச் சாப்பிடத் தகுதியற்ற பொருளாக மாற்றுகிறது. குறிப்பாக சாலட்களில் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.