இப்போதெல்லாம் எப்போது என்ன நோய் வரும் என்றே கண்டுபிடிக்கவே முடிவதில்லை. ஒரு பக்கம் மருத்துவத்துறை வளர்ச்சி என்றாலும் மறுபக்கம் நாளுக்கு நாள் புதிய புதிய நோய்கள் புதுப்புது பெயர்களுடன் வந்து நம்மை பயமுறுத்திக்கொண்டு தான் இருக்கின்றன. நோய்களுக்கு ஏற்ப மருந்து சாப்பிட்டாலும் அவ்வளவு எளிதில் சரி ஆவதும் கிடையாது. கூடவே மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய்களும் அவ்வப்போது தலை காட்டுகின்றன. சிலருக்கு அடிக்கடி ஏதாவது உடல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். அதிலும் காலநிலை மாறும் போதெல்லாம் உடனே காய்ச்சல், சளி என ஏதாவது வந்து கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் காரணம் சிஸ்டம் சரியில்லை என்பது தான். அதாவது நோய் எதிர்ப்பு மண்டலம் சரிவர தன் பணியை செய்யாதது தான். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது அவர்களை நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும். அதனால் முதலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டும்.
ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் 4000 – 11,000 என்ற அளவில் வெள்ளை அணுக்கள் இருக்கும்.
நோய் எதிர்ப்பு மண்டலம்
நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது செல்கள், திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகள் இவற்றால் உருவான உடலை பாதுகாக்கும் கட்டமைப்பாகும்.
Credit: Medical news Today
நம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் (White Blood Cells) தான் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. இது நம்மை நோக்கி வரும் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடக் கூடியது. பொதுவாக உடலில் ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் 4000 – 11,000 என்ற அளவில் வெள்ளை அணுக்கள் இருக்கும்.
வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால், கிருமிகளுக்கு எதிராகப் போராடும் சக்தியை நம் உடல் இழந்துவிடும். அப்படி எதிப்பு சக்தி குறையும் போது தான் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் திரும்பத் திரும்ப வருகிறது.
பால்,தயிர் போன்ற பொருள்களில் காணப்படும் நம் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் “ப்ரோபயாட்டிக்” (Probiotics) என்று அழைக்கப்படும். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்சைமான இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) அதிகமாக சுரக்க உதவுகின்றன.
அறிகுறிகள்
நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டவருக்கு எப்போதும் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், சளி மற்றும் தொண்டைப் புண் போன்ற பாதிப்புகளும் சுற்றுப்புற தூசிகள், மாசுக்கள் போன்றவற்றால் உடனே சரும அழற்சி, சுவாசப் பாதை அழற்சி போன்றவையும் ஏற்படும்.
Credit: Men’s Health
வழிகள்
- போதிய அளவு தூக்கமும், மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் மனித உடலுக்கு அவசியம். போதிய தூக்கம் இல்லையெனில் நம் உடலில் கார்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் அளவு அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்.
- உணவே மருந்து என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனால் இயற்கையான உணவுக்கான காய்கறிகள், பழங்கள், பருப்புகள், கீரைகள், பயிறுகள் போன்றவற்றை அதிக அளவு தினம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- காலை நேர சூரிய ஒளி உங்கள் மீது தினமும் படும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் வைட்டமின் டி உங்களுக்கு போதுமான அளவு கிடைக்கும். வைட்டமின் டி உங்கள் உடலில் குறைவாக இருந்தால் அது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
- பூண்டு உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில் கூட தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. எனவே தினசரி உணவில் பூண்டை பயன்படுத்துங்கள்.
- நாம் சாப்பிட கூடிய சிறிய சிறிய உணவுப் பொருளில் கூட அதிக அளவில் வெள்ளை சர்க்கரையை சேர்க்கின்றனர். சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது அது சில மணிநேரங்களுக்கு வெள்ளை ரத்த அணுக்களை தற்காலிகமாக கோமா நிலைக்கு தள்ளிவிடும். எனவே, எளிதில் நோய்கள் உங்களை தாக்கக் கூடும். வெள்ளை சர்க்கரையை குறைத்துக் கொண்டாலே நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
- தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்யும் போது அனைத்து உடல் உறுப்புகளும் வலுப்பெற்று ரத்த ஓட்டமும் சீராகும் என்பதால் நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுப்பெறும்.
- அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதோடு உடல் வெப்பத்தையும் சீராகப் பராமரிக்கிறது.
- பால் உணவுகளை சாப்பிடுங்கள். பால், தயிர் போன்ற பொருள்களில் காணப்படும் நம் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் “ப்ரோபயாட்டிக்” (Probiotics) என்று அழைக்கப்படும். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்சைமான இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) அதிகமாக சுரக்க உதவுகின்றன.
- வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பதற்கேற்ப மனம் விட்டு சிரிக்கப் பழகுங்கள். அப்படி சிரிக்கும் போது உடலில் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்கள் அளவு குறைந்து நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும்.
- மனித உடலுக்கு எதிரிகளான புகைப் பிடிப்பது, மது அருந்துதல்,போதை பழக்கம் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
Credit: 123RF
வரும் முன் காப்பதே நலம் என்பதால் இந்த எளிய வழிகளை மேற்கொண்டு நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.