தீவிரமாகும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு – விழிப்புணர்வு அவசியம் மக்களே

0
164

தமிழ்நாடு மற்றும் புதுவையில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் ஆகியவற்றின் தாக்கமும், பாதிப்பும் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும் உயிரிழந்துள்ளனர். அக்டோபர், நவம்பர் மாதங்கள்  பன்றி காய்ச்சல் வைரஸ் அதிகமாக பரவக்கூடிய காலமாகும்.

தமிழக அரசு டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 25 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு டெங்கு, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் வார்டுகளும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கும் இவை குறித்த விழிப்புணர்வுகள் இருப்பது கட்டாயமாகிறது. எந்த ஒரு நோய் வந்தாலும் ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்வதால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.

டெங்கு அறிகுறிகள்

  • தலைவலி
  • கண் பின்புற வலி
  • பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
  • குமட்டலும் வாந்தியும்
  • வயிற்றுக்கடுப்பு
  • அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
  • பசியின்மை
  • தொண்டைப்புண்
  • மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல்
  • நிணநீர்க்கணு வீக்கம்

 

பன்றி காய்ச்சல் அறிகுறிகள் 

பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலியாகும். ஒரு சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்று போக்கும் ஏற்படலாம். பன்றிக் காய்ச்சல் தொற்றினால் உயிர் இழப்பு பெரும்பாலும் ஏற்படுவது இல்லை. அலட்சியம் தான் உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்படாமல் தடுக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

இலவச ஆலோசனை பெற

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பன்றிக் காய்ச்சலை  குணமாக்க OSeltamivir என்கிற சக்தி வாய்ந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் உள்ளது. எந்தவிதமான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாமாகவே மருந்துகள் உட்கொள்ளக் கூடாது.

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டால் 044-24350496, 9444340496, 8754448477 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சிகிச்சை பெற ஆலோசனை பெறலாம். இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படும்.

முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனை செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.