கொரோனா வைரஸ் பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்!!

Date:

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவிப் பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது வரை உலகில் 78 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் சிலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு புறம் நோய் பரவும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மறுபுறம் கொரோனா குறித்த வதந்திகளும் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அது ஏற்படுத்தும் கோவிட்-19 (COVID-19) நோய் குறித்த கேள்விகளுக்கு உலக சுகாதார மையம் (WHO) விளக்கமளித்துள்ளது. அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

Contents hide
corona virus 1
Credit: jwatch

கொரோனா வைரஸ் என்றால் என்ன?

கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்ப வைரஸ்கள். இவை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நோயை ஏற்படுத்தும். மனிதர்களைப் பொறுத்தவரையில் பல கொரோனா வைரஸ்கள் சுவாச நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சுவாச நோய்த்தொற்று என்னும் போது கொரோனா வைரஸ்கள் சாதாரண சளி முதல் கடுமையான நோய்களாகிய MERS, SARS வரை கூட ஏற்படுத்தலாம். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், கோவிட்-19 ஐ மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது.

கோவிட்-19

கோவிட்-19 – இது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயின் பெயர். சீனாவின் வூகான் நகரத்தில் இது ஏற்படுத்திய மோசமான தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது.

நோய்வாய்ப்பட்டவரிடமிருந்து 1 மீட்டருக்கு (3 அடி) அதிகமான தூரத்தில் தள்ளி இருக்க வேண்டியது அவசியம்

கோவிட்-19 ன் அறிகுறிகள் என்னென்ன?

கோவிட்-19 ன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் வறட்டு இருமல் தான். சில நோயாளிகளுக்கு வலி, நாசி நெரிசல், மூக்கில் சளி ஒழுகுதல், தொண்டைப் புண் அல்லது வயிற்றுப்போக்கு கூட இருக்கலாம். இந்த நோயின் அறிகுறிகள் ஆரம்பத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். பிறகு படிப்படியாக அதிகரிக்கும். சிலருக்கு வைரஸ் தாக்கம் இருந்தாலும் எந்த அறிகுறிகளும் இருக்காது.அதனால் அவர்கள் உடல் ரீதியாக நன்றாகவே உணருவார்கள். பெரும்பாலான மக்கள் (சுமார் 80 சதவீத மக்கள்) எந்த சிறப்புச் சிகிச்சையும் இல்லாமலேயே நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள்.

கோவிட்-19 நோயால் தாக்கப்படும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் மட்டும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொள்கிறார். வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் அல்லது நீரிழிவு போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்குக் கடுமையான நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோயால் சுமார் 2% பேர் இறந்துவிட்ட நிலையில் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் கண்டிப்பாக உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும்.

கோவிட்-19 எப்படிப் பரவுகிறது?


ஏற்கனவே கொரோனா வைரஸ் இருப்பவர்களிடம் இருந்து தான் இந்த நோய் பரவுகிறது. கோவிட் -19 இருக்கும் நபர் இருமும்போதோ அல்லது சுவாசிக்கும்போதோ, மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவுகிறது. சில சமயம் இந்த துளிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும். நோய் பாதிப்பு இல்லாத நபர் இந்த துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டு விட்டு பின்பு அவரது கண், மூக்கு, வாய் என இவற்றில் ஏதாவது உறுப்பைத் தொடும் போது நோய் அவருக்கும் பரவி விடுகிறது. அந்த துளிகளை சுவாசம் மூலம் உள்ளிழுத்தாலும் நோய் பரவி விடும். இதனால் தான் நோய்வாய்ப்பட்டவரிடமிருந்து 1 மீட்டருக்கு (3 அடி) அதிகமான தூரத்தில் தள்ளி இருக்க வேண்டியது அவசியம்.

Washing hand
Credit: today

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா?

கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸ் காற்று வழியாகப் பரவுவதை விட, சுவாச துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோய் அறிகுறிகள் இல்லாத ஒருவரிடமிருந்து கோவிட்-19 பரவுமா?

நோய் அறிகுறிகள் இல்லாத ஒருவரிடமிருந்து கோவிட்-19 பரவுவதற்கான ஆபத்து என்பது மிகக் குறைவு. ஆனாலும் கோவிட்-19 இருக்கும் பலருக்கு ஆரம்பத்தில் பெரிதாக எந்த அறிகுறியும் தெரியாது என்பதால் பரவ வாய்ப்பும் உள்ளது.

நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், நோய் பரவாமல் தடுக்கவும் என்ன செய்ய வேண்டும்?

கோவிட்-19 இன்னும் சீனாவில் பலரைத் தாக்கிக்கொண்டே இருக்கிறது. பல நாடுகளிலும் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட பலர் லேசான அறிகுறிகள் இருக்கும் போதே குணமானாலும், அது இன்னொருவருக்குப் பரவி விட்டால் அவருக்கு அது அவரது உடல்நிலையைப் பொறுத்து அவருக்குக் கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

நாம் செய்ய வேண்டியவை:

  • ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கையில் இருக்கும் வைரஸ்கள் அழியும்.
  • சளி, இருமல், தும்மல் உள்ளவரிடம் இருந்து 1 மீட்டர் (3 அடி) தள்ளி இருக்கவும்.
    தேவையில்லாமல் கண், மூக்கு வாய் போன்றவற்றில் கைகளை வைக்க வேண்டாம்.
  • நாமும் சரி நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சரி, முழங்கையின் உள்பக்கத்தில் வாயையும், மூக்கையும் வைத்துத் தும்மினாலோ இருமினாலோ மற்றவர்களுக்குப் பரவாது. அல்லது டிஷ்யூ காகிதத்தால் வாயையும் மூக்கையும் மூடிக் கொள்ளவேண்டும். அதோடு டிஷ்யூ காகிதத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
  • உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருப்பது நல்லது. காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் தானாகச் சரி ஆகிவிடும் என்று எண்ணாமல் உடனே மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும்.
  • கொரோனா பாதிப்பு இருக்கும் இடங்களுக்குச் செல்லவே கூடாது.

கோவிட்-19 ஐத் தடுக்க அல்லது சிகிச்சையளிப்பதில் ஆன்டிபயாட்டிக்ஸ் உதவுமா?

ஆன்டிபயாட்டிக்ஸ் பாக்டீரியா தொற்றை மட்டுமே தடுக்கும் என்பதால் கொரோனா வைரஸுக்கு எதிராக அவற்றால் செயல்பட முடியாது.

கோவிட்-19 க்கு தடுப்பூசி, மருந்து அல்லது சிகிச்சை உள்ளதா?

இதுவரை கோவிட்-19 க்கு மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

முகக்கவசம் அணிய வேண்டியது அவசியமா?

சளி, இருமல் போன்ற சுவாச நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் மருத்துவ முகக்கவசம் அணியத் தேவையில்லை. கோவிட்-19 அறிகுறிகளைக் கொண்ட நபர்களுக்கும், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நபர்களைப் பராமரிப்பவர்களுக்கும் முகக்கவசங்கள் கட்டாயம் என்கிறது WHO.

கோவிட்-19 ன் Incubation period எத்தனை நாட்கள்?

ஒருவரை வைரஸ் தாக்கியதற்கும், நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிப்பதற்கும் இடைப்பட்ட காலமே Incubation period. இதுவரை கணித்ததிலிருந்து கோவிட்-19 நோய்க்கான Incubation period ஒன்று முதல் பதினான்கு நாட்கள். பொதுவாக ஐந்து நாட்களிலேயே பலருக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விடும்.

சமைக்கப்படாத இறைச்சி அல்லது விலங்கு பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்!!

கோவிட்-19 விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு வருமா?

கொரோனா வைரஸ்கள் விலங்குகளில் காணப்படும் ஒரு பெரிய குடும்ப வைரஸ்கள். மனிதர்கள் இந்த வைரஸ்களால் அரிதாகத் தான் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு மனிதரிடம் வைரஸ் பரவியவுடன் அது மற்றவர்களுக்கும் பரவ ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக, SARS-CoV சிவெட் பூனைகளுடன் தொடர்புடையது. MERS-CoV ட்ரோமெடரி ஒட்டகங்களால் பரவுகிறது. கோவிட்-19 ன் சாத்தியமான விலங்கு மூலம் எது என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும் பாதுகாப்பாக இருப்பதற்கு விலங்கு சந்தைகளுக்குச் செல்லும் போது, விலங்குகளுடனான நேரடி தொடர்பையும், விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும் இடங்களையும் தவிர்க்க வேண்டும். எல்லா நேரங்களிலும் நல்ல உணவு பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.விலங்குகளின் சமைக்கப்படாத இறைச்சி, பால் மற்றும் விலங்குகளின் உறுப்புகளைக் கையாளும் போது அவை மாசடையாதபடி கவனமாகக் கையாள வேண்டும். சமைக்கப்படாத இறைச்சி அல்லது விலங்கு பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Sneeze into your elbow
Credit: Medical news today

செல்லப் பிராணிகளிடமிருந்து கோவிட்-19 வருமா?

செல்லப்பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸை அவை பரப்பக்கூடும் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்?

கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் மேற்பரப்பில் (Surface) எவ்வளவு காலம் உயிர் வாழ்கிறது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது மற்ற கொரோனா வைரஸ்களைப் போலவே செயல்படுவதாகத் தான் தெரிகிறது. கொரோனா வைரஸ்கள் சில மணிநேரங்கள் அல்லது பல நாட்கள் வரை மேற்பரப்பில் தொடர்ந்து இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது சுற்றுச்சூழலின் வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற வெவ்வேறு நிலைமைகளைப் பொறுத்து வேறுபடலாம்.

ஒரு மேற்பரப்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்தால், வைரஸைக் கொல்ல எளிய கிருமிநாசினியைக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நோய் பரவியுள்ள பகுதியிலிருந்து வணிகப் பொருட்கள் அடங்கிய ஒரு பார்சலை பெறுவது பாதுகாப்பானதா?

பாதுகாப்பானது தான். ஏனெனில் COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் பார்சலில் இருந்தாலும் கூட, அது நகர்த்தப்பட்டு, பல இடங்களுக்கு பயணித்து, வெவ்வேறு நிலைமைகள் மற்றும் வெப்பநிலைக்கு உள்ளாவதால் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு தான்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!