கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, உங்கெங்கிலும் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது உரு மாறி வேறொரு வைரஸாக பரவி வருகின்றது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் மரபியல் கூறுகளில் மாற்றம் அடைந்து உருமாற்றம் பெறுவது இயல்பான ஒன்றுதான் என்கிறது மருத்துவ உலகம். புதிய வகை கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே இருக்கும் கொரோவை விட 70 சதவீதம் வீரியம் மிக்கதாகவும் வேகமாக பரவக்கூடியதாக உள்ளதாகவும் முதல் கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. SARS-COV-2 வைரஸின் புதிய வகை “VUI – 202012/01” என்று அழைக்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் வேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளை இங்கிலாந்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸின் அறிகுறிகள்
- தலை வலி
- பசியின்மை
- வயிற்றுப்போக்கு
- மனகுழப்பம்
- சோர்வு
- தசை வலி
- சருமத்தில் அரிப்பு அல்லது வெடிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், கவனக் குறைவாக இருந்துவிடாமல், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்வதோடு, பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள குறிப்பில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 17 முறை மரபியல் ரீதியாக மாற்றம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிவது, கைகளை கழுவது, சமூக இடைவெளி போன்றவற்றைக் கடைபிடித்தாலே கொரோனா மட்டுமின்றி, எளிதில் பரவும் எந்த வைரஸ் பாதிப்பிலிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.