பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள நாம் பற்பசைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த பற்பசைகளாலே பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது இன்னும் பலருக்கு தெரியவே இல்லை. நம் முன்னோர்கள் ஆரோக்கியமான பற்களைப் பெற எந்த பற்பசையையும் பயன்படுத்தவில்லை. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பதையே நம்பினார்கள். ஆனால் இன்றைக்கு விலை உயர்ந்த பற்பசைகளை பயன்படுத்தினால் கூட பற்கள் சொத்தையாகின்றன. எளிதில் ஆட்டம் கண்டு 50 வயதிற்குள் சிலருக்கு பற்கள் விழுந்து விடுகின்றன. இது எப்படி? தினமும் காலையில் நாம் பற்பசை என்ற பெயரில் பல ரசாயனங்களைக் கொண்டு தான் பற்களை தேய்க்கிறோம். அதிலும் நாம் எடுத்துக் கொள்ளும் பற்பசையின் அளவு தான் பாதிப்புகளை தீர்மானிக்கிறது.
பற்பசையில் உள்ள ரசாயனங்கள் நமது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு, நமது உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கின்றன. பொதுவாகவே நைட்ரோகிளிசரின் (இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தரப்படும் மருந்து), விட்டமின்கள் மற்றும் வலி மருந்துகள் போன்றவற்றை வேகமாக உடலுக்குள் செலுத்த அதிக நாக்கின் அடியில் தான் வைப்பார்கள். ஏனெனில் அங்கு உறிஞ்சும் வேகம் அதிகமாக இருக்கும். அதே போல் நமது வாயின் உள்பகுதி, பற்பசை அல்லது மவுத்வாஷில் உள்ள பொருட்களையும் எளிதாகவும் வேகமாகவும் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் நாம் பயன்படுத்தும் பற்பசையில் உள்ள ரசாயனங்கள் நம் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு மிக அதிகம்.
143 கிராம் பற்பசையில் 30 கிலோவிற்கும் குறைவான எடை உடைய குழந்தையை கொல்லும் அளவு ஃப்ளோரைடு இருக்கும்!
ஃப்ளோரைடு
இப்போது கிட்டத்தட்ட எல்லா பற்பசைகளிலும் பல் சிதைவைத் தடுக்க ஃப்ளோரைடு சேர்க்கப்படுகிறது. ஃப்ளோரைடின் அளவு அதிகமாகும் போது ஒரு சிலருக்கு பற்கள் முழுவதும் வெள்ளை திட்டுக்கள் போல ஏற்படும். தொடர்ந்து ஃப்ளோரைடு அதிகமாகும் போது பழுப்பு நிறமாகவும், கருப்பு நிறமாகவும் பற்களில் பள்ளங்களும், ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவும் ஏற்படும். மேலும் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள், நச்சுத்தன்மை, தோல் பிரச்சினைகள் மற்றும் குளுகோஸ் இன்சுலின் அளவுகளில் மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ரத்தத்தில் ஃப்ளோரைடு அளவு 95 ppb (Parts per billion) எட்டினால் கூட குளுகோஸ் அதிகரிப்பதும் இன்சுலின் குறைபாடும் ஏற்படும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு இது இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
பூமியில் இயற்கையாக கிடைக்கும் ப்ளோரைடு, கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகை இல்லை. சோடியம் ஃப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் தான் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக் கழிவுகளாக வெளியேறுபவை. சொல்லப்போனால் இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் கூட உபயோகப்படுத்தப்படுகிறது.

எச்சரிக்கை
ஒருவேளை பற்பசையில் இருக்கும் குறிப்பிட்ட அளவு ஃப்ளோரைடை ஒருவர் விழுங்கிவிட்டால் அது நிச்சயம் ஆபத்து தான். இதனால் தான் ஃப்ளோரைடு இருக்கும் எல்லாம் பற்பசைகளும் அதனை குறித்த எச்சரிக்கையை (Warning) நிச்சயம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) வலியுறுத்தி உள்ளது. ஒரு முறை பல் துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும் என்ற எச்சரிக்கைகள் கூட சில பற்பசைகளில் இடம்பெற்றிருக்கும். பலர் அதனை கவனிப்பதே இல்லை. அதிலும் குழந்தைகள் பற்பசை என்றால் அதன் உட்பொருட்களை கவனிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் குழந்தைகள் ஒழுங்காக துப்ப கூட மாட்டார்கள். ஆனால் குழந்தைகளுக்கான பற்பசைகளில் கூட ஃப்ளோரைடு கலக்கப்படுகின்றன என்பதே கசப்பான உண்மை. பற்பசைகளில் பல விதமான வண்ணங்களை கலந்து குழந்தைகள் விரும்பி கேட்கும் படி விளம்பரப்படுத்துபவர்கள், குழந்தைகள் அதனை விழுங்கிவிட்டால் அது ஆபத்து தான் என்பதை கூறுவதே இல்லை. பபிள்கம் (Bubble Gum) சுவையடைய 143 கிராம் பற்பசையில் 30 கிலோவிற்கும் குறைவான எடை உடைய குழந்தையை கொல்லும் அளவு ஃப்ளோரைடு இருக்கும். ஒரு கிலோகிராம் எடைக்கு 0.1 – 0.3 மில்லி கிராம் என்ற அளவு ஃப்ளோரைடே பல அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1000ppm அளவுக்கு மிகாமலும், சிறுவர்களுக்குக்கான பற்பசையில் 500ppm அளவுக்கு மிகாமலும் ஃபுளோரைடு இருக்க வேண்டும்.
மூலிகை பற்பசைகளில் 2.5% முதல் 5% அளவு வரை மட்டுமே மூலிகைப் பொருள்.மற்றவை எல்லாமே ரசாயனங்கள் தான்!
ரசாயனங்கள்
பற்பசைகளில் கலக்கப்படும் சாக்கரின் என்பது புற்றுநோயை உருவாக்கும் தன்மை உடையது என்கிறது FDA.
கறைகளைப் போக்க பயன்படுத்தப்படும் Abrasives பல பற்பசைகளில் கடுமையாக இருப்பதால் சென்சிட்டிவிட்டி பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
சோடியம் லாரில் சல்பேட் (SLS) என்பது பற்களை சுத்தம் செய்யவும் பற்பசை பயன்படுத்தும் போது நுரை வரவும் பயன்டுத்தப்படுகிறது. ஆனால் இதனை பயன்படுத்துவதால் வாய் உலர்ந்து போதல், வாய்ப்புண் மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இது கலக்கப்பட்ட சோப்புகளையே பயன்படுத்த கூடாது என்று ஆய்வாளர்கள் கூறும் போது SLS கலந்த பற்பசைகளை உபயோகிக்கவே கூடாது.

Triclosan என்ற பூச்சிக்கொல்லியும் பல பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. நுண்ணுயிரிகளை அழிக்க பயன்படுத்தப்பட்டாலும் இதனால் தோல் அரிப்பு, நோய் எதிர்ப்புமண்டலம் பாதிப்பு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இவை சில சமயங்களில் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு கிருமிகளை உருவாக்கிவிடுகின்றன. இதனால் நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது.
பற்களின் வெண்மைக்காக பற்பசைகளில் ஹைட்ரேடட் சிலிகா சேர்க்கப்படுவதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படுகிறது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தும் போது கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்புமண்டலமும் பாதிக்கப்படும்.
பற்களில் கால்சியம் பாஸ்பேட் உப்புகள் படிவத்தை தடுக்க டெட்ராசோடியம் பைரோபாஸ்பேட் சேர்க்கப்படுகிறது. ஆனால் இது உயர் pH உணர்திறன் பாதிப்பு உள்ளவர்களை பாதிக்கும் ஒன்றாக மாறிவிடும்.
இன்னும் சில பற்பசைகளில் நிகோடின் கூட கலக்கப்படுகின்றன என்கிறது சில ஆய்வுகள்.
அதே போல் சில பற்பசைகளில் அலங்கார பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இது எளிதில் வாய்க்குள் சென்றுவிடும்.இன்னும் சில பற்பசைகளில் கச்சா எண்ணையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதில் ஒரு நாளைக்கு இரு முறை பல் தேய்பவர்கள் நிலைமை மோசம்.
மூலிகை பற்பசை என்று விற்கப்படுபவைகளும் முழுவதும் மூலிகையால் ஆனவை அல்ல. 2.5% முதல் 5% அளவு வரை ஏதாவது ஒரு மூலிகைப் பொருளைக் கலந்திருப்பார்கள்.மற்றவை எல்லாமே ரசாயனங்கள் தான். இப்போதெல்லாம் பற்பசைகளிலும் ஃபிளேவர்கள் வந்துவிட்டன. அவை கூட பாதிப்புகளை தான் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக புதினா ஃபிளேவர் தோல் பாதிப்பு மற்றும் வாய் புண்களை ஏற்படுத்தும்.

பற்பசை அளவு
இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் விளம்பரங்களை பார்த்துவிட்டு பிரஷ் முழுக்க பற்பசையை வைத்து உபயோகப்படுத்துவது தான். உண்மையில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி அளவு பற்பசை, மற்றவர்களுக்கு ஒரு பட்டாணி அளவு பற்பசை என்பதே பரிந்துரைக்கப்படும் அளவு. பிரஷ்ஷின் அளவில் மூன்றில் ஒரு பங்கு பற்பசை போதுமானது. அதே போல 2 முதல் 3 நிமிடங்கள் பல் தேய்த்தாலே போதும். பிரஷ் முழுக்க பற்பசையை வைத்து உபயோகப்படுத்தும் போது சிலருக்கு உணவை கடிக்கும் போதே பல் உடையும் பிரச்சனைகள் கூட ஏற்படும்.
பொதுவாக உடலின் எதிர்ப்பு சக்தி தேவையற்ற இரசாயனப் பொருட்களை எதிர்த்து வெளியேற்றிவிடும் என்றாலும் சிறிய அளவில் உடலை பாதிக்கும் இரசாயனம் அன்றாடப் பயன்பாட்டில் தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேரும் போது அது ஆபத்தாகிவிடும். அதன் பாதிப்பு வெளிப்படும் போது நிச்சயம் பெரியதாக இருக்கும்.
தீர்வு
பற்பசைகளை தவிர்த்து விட்டு மூலிகை பல் போடி அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. பற்பசைகளை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்றால் வண்ணமயமான பற்பசையை விட வெள்ளை நிற பற்பசையையும், ஃபுளோரைடு குறைவான பற்பசையையும் வாங்குங்கள். ஜெல் பற்பசைகள் பற்களின் தேய்மானத்துக்குக் காரணமாகும் என்பதால், க்ரீம் பற்பசைகளே சிறந்தவை.
அதே போல் பற்பசையில் பற்களை பாலீஷ் செய்வதற்கு கலக்கப்படும் Abrasives எனும் பொருள் பற்கள் சொத்தையாகக் காரணமாகும் ரசாயனங்கள் கொண்டது. ஆகவே, இதன் அளவு குறைந்ததாக இருக்கும் பற்பசையை பார்த்து வாங்குங்கள். நீங்கள் வாங்கும் பற்பசையில் முடிந்தவரை ரசாயனங்கள் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.