தூக்கம் இன்மைதான் இன்றைய உலகளாவிய பிரச்சினை. வயது, உடலமைப்பு, சுற்றுச்சூழல் என தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் ஏராளம். அவற்றால் ஏற்படும் இன்னல்களும் தாராளம். தூங்கும்போது நம்முடைய உடல் எப்படி இருக்கிறதோ (Posture), அதுவே நம்முடைய உடல் உபாதைகளைக்கும் தீர்வுகளுக்கும் காரணமாகின்றன.

பொதுவாக நாம் அனைவரும் நமக்கு சவுகரியம் தரும் மூன்று விதத்திலேயே படுக்கை கொள்கிறோம். முதுப்புறம், வயிற்றுப்புறம் மற்றும் பக்கவாட்டில். ஆனால் “குடிமகன்கள் படுக்கும் விதம்” பற்றி ஓலைச்சுவடிகளில் கூட குறிப்புகள் இல்லாததால் அதனை இங்கே குறிப்பிட அவசியமில்லாது போகிறது. மனிதன் இப்படித்தான் படுக்க வேண்டும் என எந்தவித கோட்பாடுகளும் இல்லை. மேலும் ஒவ்வொரு படுக்கை முறையிலும் நன்மையும் தீமையும் இருக்கின்றன. அதை உணர்ந்து யார் யார் எப்படி படுக்கவேண்டுமோ அப்படி படுப்பது உத்தமம். உதாரணமாக பெண்கள் குப்புறப் படுப்பதானால் மார்புகளில் தொய்வு ஏற்படுகிறது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வயது முதிர்வு, பருத்த மார்பகங்கள், மோசமான மார்புகச்சைகள், புகைப்பிடித்தல் என பல காரணங்கள் உள்ளன. மேலும் பக்கவாட்டில் படுப்பவர்களுக்கு கைகள் அடிக்கடி உணர்வற்று போதல், தோள்பட்டை வலி போன்றவை ஏற்படலாம். குப்புறப் படுப்பவர்களுக்கு பின்னாளில் முதுகுவலியும் கழுத்து வலியும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மல்லாந்து படுப்பவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் அல்லது குறட்டை தொந்தரவுகள் இருக்கலாம்
மேற்கூறிய விதத்தில் சவுகரியமாக படுப்பவர்கள் கீழ்க்கண்டவாறு படுக்கையை உறுதி செய்வதன் மூலம் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
பக்கவாட்டில் படுப்பவர்கள்
பக்கவாட்டில் படுப்பவர்களில் சிலர் தனது கைகளையும் கால்களையும் குறுக்கிக் கொள்வர். இது குறட்டையை வீம்பாக சண்டைக்கு அழைக்கும் யுக்தி. இது முதுகுத்தண்டையும் சிரமத்திற்கு உள்ளாக்கும். ஆகவே பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் போல இடது புறம் படுப்பது சிறந்தது. அப்போதும் கைகள் அழுத்தத்திற்கு உள்ளாகாதவாறும் கால்களை நீட்டியும் நெராக படுக்க வேண்டும். தலையணை உயரத்தை மாற்றி நமது தலை, முதுகெலும்போடு நேராக இருக்கும்படி தூங்கவேண்டும். கடினமான தலையணை உங்கள் முகத்தசைகளில் அழுத்தம் கொடுத்து சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.

குப்புறப் படுப்பவர்கள்
எத்தகைய மென்மையான மெத்தையில் படுத்தாலும் கழுத்துப் பகுதி நேராக இருப்பதே நல்லது. மசாஜ் செய்யும்போது படுப்பது போல் முகத்தை அழுத்திப்படுக்கலாம். ஆனால் மூச்சு விடுவதற்கு ஏற்றவாறு தலையணை அமைதல் வேண்டும். அடிவயிற்றில் தலையணை வைப்பதன் மூலம் முதுகெலும்பின் மீது ஏற்படும் தாக்கம் குறையும். இந்த விதத்தில் நீண்ட நாட்கள் படுப்பவர்கள் ஒற்றைத் தலைவலிக்கு ஆளாவார்கள். பின் தலைப்பகுதி அவ்வப்போது வலியெடுக்கும். எனவே அடிக்கடி இப்படிப் படுப்பதை குறைத்துக்கொள்ளுங்கள். இதனால் மார்பகங்கள், இரைப்பை, இதயம், ஆண் பிறப்புறுப்பு என அனைத்து உறுப்புகளுமே அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.
மல்லாந்து படுப்பவர்கள்
இப்படிப் படுப்பவர்கள் நல்ல உறக்கத்தில் நீண்டநேரம் நீடித்து இருப்பர். காரணம் எந்த உறுப்பும் எந்த அழுத்தத்திற்கும் உள்ளாவதில்லை. ஆனாலும் தலையணையின் உயரம் நிச்சயம் உங்கள் கழுத்துக்கு நல்லதல்ல. நாம் அனைவருமே மொபைல் போன்களை நின்றுகொண்டோ உட்கார்ந்து கொண்டோதான் கழுத்தை சாய்த்து பயன்படுத்துகிறோம். அதேபோன்று உறங்கும்போதும் கழுத்தைத் துன்புறத்துவது நல்லதல்ல. பாவமில்லையா கழுத்து!. கால்முட்டிக்கு அடியில் மெல்லிய, தலையணை வைப்பது உண்மையான குட்நைட்டாகும். எனினும், மொபைல் போன்களை முகத்திற்கு நேராக வைத்து பயன்படுத்துவதற்கு பழகுங்கள். நடக்கும்போதல்ல..!

வெறும் தரையே மென்மெத்தை!
டைல்ஸோ, சிமெண்டோ, பாறைக்கல்லோ தரை எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, வெறும் தரையில் மென்மையான துணி விரிப்பு மற்றும் மெல்லிய தலைத்துணி கொண்டு மல்லாந்து படுப்பது முதுகுவலியிலிருந்து விடுபடுதல், கைகால் அசதி நீங்குதல், நல்ல செரிமானம், நல்ல சுவாசம் என அனைத்து நன்மையையும் அள்ளித்தரும். சிலருக்கு மட்டும் குறட்டை வரலாம். மிகவும் குளிர்ந்த, வெப்பமான, தரையில் படுக்க வேண்டாம். ஆரம்பத்தில் இப்படி படுப்பது சிரமமாக இருக்கலாம். பயிற்சியின் மூலம் அதிகாலையில் புத்துணர்ச்சியோடு எழுவீர்கள். பாய் அல்லது வேறு வித படுக்கை விரிப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக நம்முடைய பாய் போன்றே ஜப்பானியர்கள் பயன்படுத்தும் Tatami வகை விரிப்புகள் உலகப்பிரசித்தி பெற்றவை. யோகா பாய்கள் கூட பயன்படுத்த கூடியவைதான். மனித உடல் நீண்ட நேரம் ஒரேவாட்டமாக இருக்க பழக்கப்பட்டதல்ல என்பதால் இரவில் எப்படிப் படுத்தாலும், உடல் உணர்வற்றுப்போவதை தடுக்க தானாவே வேறுவித Position ல் சென்றுவிடுவதும் இயற்கைதான்.
Also Read: அதிகநேரம் தூங்கும் பெண்களுக்கு இந்தவகை புற்றுநோய் வரலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!