2018 ஆம் ஆண்டு, அமெரிக்க மருந்துப்பொருட்கள் தர நிர்ணய அமைப்பான U.S. Drug Enforcement Administration (DEA) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் பயன்படுத்தமுடியாத காலாவதியான மருந்துப்பொருட்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. சுமார் 3.7 மில்லியன் பவுண்ட் எடை அளவுள்ள மருந்துகளை மக்கள் DEA விற்கு அளித்திருப்பதாக வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அரசின் இந்த திட்டம் மூலம் காலாவதியான மருந்துகளை உட்கொள்ளுவதால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து மக்களைக் காக்கலாம் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்தது.

எப்போதுமே நமக்கு இருக்கும் ஒரு அச்சம் நாம் வாங்கும் பொருட்களின் தரம் பற்றியதாக இருக்கும். குறிப்பாக காலாவதி தேதியை பார்க்கும் பழக்கம் பொதுவாகவே அதிகரித்துள்ளது. அதுவும் மருந்துப்பொருட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். Manufacturing Date எனப்படுவது நிறுவனத்தில் அப்பொருள் தயாரிக்கப்பட்ட தேதியாகும். Expiry Date ஆனது மருந்தின் வீரியம், நோய்த் தடுக்கும் சக்தி குறையாமல் இருக்கக்கூடிய கால அளவைக் குறிக்கிறது. சரி, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளுவதால் என்ன மாதிரியான சிக்கல்கள் வரும்?
1979 ஆம் ஆண்டு மருந்துப்பொருட்களுக்களின் குடுவைமேல் அதன் காலாவதி தேதியை குறிப்பிடவேண்டும் என்னும் சட்டத்தை அமெரிக்க அரசாங்கம் முதன்முதலில் கொண்டுவந்தது. அதன்பின்னரே உலகம் முழுவதும் இந்த முறை பரவியது. மருந்துப் பொருட்களுக்கான காலாவதி தேதி என்பது உணவுப்பொருட்களின் காலாவதி தேதியைப் போன்றது அல்ல. குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் கேட்டுப்போவதைப் போல மருந்துப்பொருட்கள் கெட்டுப்போகாது.
40 வருடம் பழையது
கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயன்படுத்தாமல் விடப்பட்ட பழைய குடோன் ஒன்றில் இருந்து 40 வருடம் பழைமையான மருந்துப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். அவற்றில் 84% பயன்படுத்தக்கூடிய விதத்தில் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

“காலாவதியான மருந்துகளினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாரையும் நான் இதுவரையில் சந்தித்ததே இல்லை” என்கிறார் கலிபோர்னியா மாகாண விஷ முறிவு தடுப்புப் பிரிவுத் தலைவர்.
அமெரிக்கா செய்த வேலை
போர்க்காலங்கள் மற்றும் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளில் மக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளை சேகரித்து வைக்க அமெரிக்கா ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம் அவசரத் தேவைகள், நோய்த்தொற்று ஏற்படும் காலங்களுக்கு எனத் தனியாக மருந்துகளை ஒதுக்கிவைப்பது. தேவைப்படும் காலங்களில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது. சரி, அவற்றுள் காலாவதியானவை இருந்தால்? அதற்கு அவர்கள் ஒரு ஆய்வினை சுட்டிக்காட்டுகிறார்கள்.
2006 ஆம் ஆண்டு மேற்கூறியது போல் 122 வகையான மருந்துகளை சாதாரண அறை வெப்பநிலையில் சேமித்து வைத்தனர். காலாவதி காலம் முடிந்து நான்கு வருடம் கழித்து மீண்டும் மருந்துகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இப்படி 2012 ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்கா சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சப்படுத்தியது.
ஆபத்தே இல்லையா?
அப்படியென்றால் தேதி முடிந்த மருந்துகளை உட்கொள்ளலாமா? என்றால் வேண்டாம் என்கிறது மருத்துவர் குழு. ஏனெனில் நிலைத்தன்மை குறைவான இன்சுலின், நைட்ரோ கிளிசரின், நீர்ம ஆண்டிபயாடிக்குகள் போன்றவைகளை குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பயன்படுத்துவது தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே நேரத்தில் அதுகுறித்த பயமும் தேவையில்லை. ஏனெனில் சர்ச்சைக்குரிய விஷயத்தினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிட்டாலே நம்மால் பல பிரச்சினைகளை எளிதில் தீர்த்துவிட முடியும்.