நீண்ட காலமாகவே இருந்து வரும் கேள்வி தினமும் முட்டை சாப்பிடலாமா? வேண்டாம். ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள். வாரத்திற்கு நான்கு முட்டைகளுக்கு அதிகமாகவோ அல்லது 300 கிராம் கொழுப்பு சத்தை எடுத்துக்கொள்வதோ இதய நோயை உருவாக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்ட ஆய்வு
அமெரிக்காவின் சிகாகோ மாகணத்தில் இயங்கிவரும் Northwestern University Feinberg School of Medicine ல் பணியாற்றிவரும் மருத்துவ ஆராய்ச்சியாளரான விக்டர் சாங் (Victor Zhong) இதற்கான பிரம்மாண்ட ஆய்வினை மேற்கொண்டார். அமெரிக்காவின் மிகப்பெரிய ஆறு கல்வி நிறுவனங்கள் மூலமாக 29,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஒரு நாளைக்கு 300 கிராம் கொழுப்பை உண்பவர்களுக்கு இதய நோய் வரும் சாத்தியம் 3.2% அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதனால் ஆயுட்காலம் 4.4% அளவிற்கு குறையும் என்கிறார் சாங்.
தினமும் பாதி முட்டை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு 1.1% அதிகமாம். இதனால் ஆயுட்காலமனது 1.9% வரை குறையும் என்கிறது ஆய்வு.
புகைப்பழக்கம், மது, சரியான உணவுக் கட்டுப்பாடு இல்லாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் வர அதிக வாய்ப்பு இருப்பதாக சாங் ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.

இரண்டாவது ஆய்வு
அமெரிக்காவின் கலராடோ மருத்துவ பல்கலைக்கழகத்தைச் (University of Colorado School of Medicine) சேர்ந்த மருத்துவர்கள் ராபர்ட் (Dr.Robert) மற்றும் எக்கல் (H. Eckel) ஆகியோர் மேற்கொண்ட ஆய்வும் கிட்டத்தட்ட இதே மாதிரியான முடிவினை முன்வைக்கிறது. அளவுக்கு அதிகமாக கொழுப்பு உணவினை எடுத்துக்கொள்வது இதய இயக்கத் தசைகளுக்கு உகந்ததல்ல எனவும் இதனால் நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முட்டையில் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் 186 மி.கி அளவு கொழுப்பு இருப்பதால் அதிகமாக முட்டையைப் பயன்படுத்துவதை தவிர்த்தல் நலம். மேலும் உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் மிக முக்கியம் என்கிறது இரண்டு ஆய்வுகளுமே.