மனிதனின் மூளை, நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் மற்றும் ரத்த உற்பத்திக்கும் வைட்டமின் பி12, உடலுக்கு தேவையான சத்துக்களுள் முக்கியமானது. வைட்டமின் பி-யில் நான்கு வகைகள் உள்ளன. அவை பி1, பி6, பி7, பி12. இந்த நான்கில் மிக முக்கியமான ஒன்று வைட்டமின் பி12. “சயனோகோபாலமின்” (Cyanocobalamin) எனவும் இது அழைக்கப்படுகிறது.
உடலில் இரத்த சிவப்பு அணுக்கள் உருவாவதிலும், நரம்பு மண்டலம் சீராக இயங்குவதற்கும் வைட்டமின் பி12 முக்கியமானது. பால் கொடுக்கும் தாய்மார்கள் வைட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுப் பொருட்களை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கும் வைட்டமின் பி12 ஆனது முக்கியமானதே. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் அசைவ உணவு குறைவாக எடுத்துக்கொண்டால் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
வைட்டமின் பி12 பற்றாக்குறையானது நரம்பு மண்டலத்தில் சிக்கலை உண்டாக்கிவிட கூடியது. அதனால் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி சரிசெய்து கொள்வது நல்லது. இந்த குறைபாடு அதிகமாகும்போது “அனீமியா” எனப்படும் ரத்தசோகை, மறதி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

பாலூட்டும் தாய்மார்கள், அதிகமாக விரதம் இருப்பவர்கள், சைவ உணவை மட்டும் பெரும்பாலும் உண்பவர்கள், மது அருந்துபவர்கள், மருந்துகள் உட்கொள்பவர்கள், ஐம்பது வயதைத் கடந்தவர்கள் இந்த வைட்டமின் பி12 குறைபாடு மூலம் பாதிக்கப்படலாம்.
பொதுவாக வைட்டமின்கள், உடலில் குறைபாடாகவும் இருக்கக் கூடாது, அதே வேளையில், அளவுக்கு அதிகமாகவும் இருக்கக் கூடாது. வைட்டமின் பி 12- ஆனது நீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், நம் உடலில் தேவைக்கு அதிகமாகக் இருந்தாலும், உடலிலேயே தங்காமல் சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் எளிதாக வெளியேறிவிடும்.
வைட்டமின் பி12 பற்றாக்குறை அறிகுறிகள்:
1. சோர்வு, பலவீனம்:
நமது உடலில் தானாகவே இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி நடக்காவிட்டால் உடலில் உள்ள பிற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் சரிவர கிடைக்காது. இதனால் உடல் விரைவில் சோர்வடையும் இதனால் பலவீனமாகவும் இருக்கும். இது மேலும் இரத்த சோகையையும் உண்டாக்கிவிடும்.
2. வாய்ப்புண்:
வைட்டமின் பி12 பற்றாக்குறையினால் வாய்க்குள் புண்கள் உருவாகும்.
3. மூச்சுத்திணறல்:
வைட்டமின் பி12 பற்றாக்குறையினால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி குறைவதால் மூச்சுத்திணறல் ஏற்படும். அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி கட்டாயமாக பரிசோதித்து கொள்வது நல்லது.
4. பார்வை குறைபாடு:
வைட்டமின் பி12 குறைபாட்டால் பார்வை குறைபாடு உண்டாகும்.
5. காதுகளில் இரைச்சல்
காதுகளில் இரைச்சல், சத்தம் வருவது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
6. தோல் தொடர்பான பிரச்னைகள்
வைட்டமின் பி12 பற்றாக்குறையால் சருமம் வெளிரி போய் மஞ்சள் நிறத்தில் பொலிவின்றி காணப்படும்.
7. மன அழுத்தம்:
வைட்டமின் பி12 பற்றாக்குறையால் உளவியல் பிரச்சினைகளாகிய, மன அழுத்தம், எரிச்சல் உணர்வு போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஞாபக மறதி போன்ற பிரச்னைகளும் இதனால் ஏற்படும்.
8. மறதி:
நினைவாற்றல் குறைந்து போவது, புரிதலில் தெளிவின்மை மற்றும் முடிவெடுத்தலில் தடுமாற்றம் ஆகிய மனத்திறன் குறைபாடுகள்.
9. நாக்கு வெந்து போவது:
புண்ணுடன் நாக்கு வெந்து சிவப்பாகி விடுவது.

ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை மற்றும் கடல் உணவுகளில் வைட்டமின் பி12 சத்துக்கள் நிறைந்திருக்கின்றது. இறைச்சி உணவுகளை அவ்வப்போது சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், கொழுப்பு சத்து குறைந்த பால், யோகர்ட், சீஸ், ஈஸ்ட், செரல்ஸ் போன்ற சைவ உணவுகளிலும் வைட்டமின் பி12 சத்து கிடைக்கின்றது.
Note: வைட்டமின் பி12 சத்துகள் நிறைந்த மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இருக்கின்றன. தகுந்த மருத்துவரின் ஆலோசனையுடன் ஊசியாகவோ மருந்தாகவோ எடுத்துக்கொள்ளலாம்.