இயற்கை அழகு நிறைந்த மரங்கள், செடிகள் என அனைத்தும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்கின்றன. அதுபோல் மனிதனும் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப தனது உணவு, உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், இந்த ஆண்டு நாம் அனைவரும் கோடையோடு, கொரோனாவையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வழக்கத்தை விட இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமோ என்பதில் தொடங்கி, கோடையில் நோய் எதிர்ப்புத் திறன் கூடுமா என்பது வரையிலான சந்தேகங்கள் ஏராளம். எனவே, கோடை காலத்திற்கு ஏற்ப மனிதன் தனது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் செய்யத்தக்க முக்கிய 8 எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கோடையில் காரமில்லாத, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், கோடையில் அதிக காரமான உணவுகளைச் சாப்பிடும்போது உடல் மேலும் சூடாகி, அதிக வறட்சி ஏற்படும். இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் போன்ற உடல் நல பிரச்சனைகள்ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவுகள், காய்கறிகள், இட்லி, இடியாப்பம், மோர் சாதம், பருப்பு வகைகள் மற்றும் நீர்ச் சத்து நிறைந்த பழவகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
தண்ணீர் அதிகமாக குடியுங்கள்
கோடைக்காலத்தில் தினம்தோறும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மற்ற காலங்களில் குடிக்கும் தண்ணீரின் அளவை விட கோடையில் அதிகமாகக் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோன்று, கோடையில் வெளியே சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்வது நல்லது. ஏனெனில், கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான முக்கிய மருந்து தண்ணீர்தான்.
நடைப்பயிற்சி
கோடையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. நடைப்பயிற்சி உடல் உள்ளுறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தைக் கொடுப்பதோடு, போதுமான ஆக்ஸிஜனையும் எடுத்துக் கொண்டு நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதேசமயம், கோடையில் எளிதான உடற்பயிற்சிகள் மேற்கொள்வது சிறந்தது. குறிப்பாக, நீச்சல் பயிற்சி, அக்வா ஏரோபிக்ஸ், தண்ணீர் ஜாக்கிங், யோகா போன்றவைகள் மேற்கொள்ளலாம். ஏனெனில், கடினமாக உடலை வருத்தி உடற்பயிற்சிகள் செய்யும்போது நீர்ச்சத்து இழப்பு ஏற்படக்கூடும்.
இயற்கை குளிர் பானங்கள்
வெப்பம் அதிகமுள்ள காலங்களில் அதிக வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதைத் தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற ஆரோக்கியமான இயற்கை பானங்களை அருந்தவேண்டும். தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம். ஏனெனில், நீராகாரம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு செரிமானத்தையும் தூண்டும். அதேசமயம், கோடைகாலத்தில் அதிக கேஸ் கொண்ட குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்திட வேண்டும்.
மதிய நேர பயணம்
பெரும்பாலும் அதிக வெயில் கொளுத்தும் மதிய நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, காலை 11 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். அதற்கேற்ப நமது பணிநேரத்தை மாற்றம் செய்து கொள்ளுதல் வேண்டும்.
எண்ணெய் குளியல்
கோடையில் வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இது உடலைக் குளிரச் செய்வதோடு உள்ளிருக்கும் கழிவுகளையும் அகற்றும். கோடைக்காலத்தில் வரக்கூடிய வியர்க்குரு, வேனல் கட்டிகள், கொப் புளங்கள் போன்ற பிரச்னைகளும் வராமல் தடுக்கும்.
கோடையில் சரும பாதுகாப்பு
சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்களால் கோடைக்காலங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படும். எனவே, பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடிய படி செல்வது நல்லது. குளிர்ச்சி தரும் கூலிங்கிளாஸ், தலையில் தொப்பி அணிந்து செல்ல வேண்டும்.
கோடைக்கால ஆடைகள்
கோடையில் நம்மை குளிர்விக்கும் மெல்லிய பருத்தியால் ஆன ஆடைகளை அணிவது நல்லது. அதேபோன்று, தளர்வான, மென்மையான நிறங்களை கொண்ட ஆடைகள் லினன் மற்றும் சணல் இழை ஆடைகள் அணியலாம்.
எனவே, மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினாலே கோடைக்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம். கோடைகாலத்திற்கு ஏற்ப நம்மையும் நாம் மாற்றி கொள்ளும்போது கோடையும் நமக்கு ஓர் மகிழ்ச்சியான வசந்தகாலமாகும். கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் இந்நேரத்தில் மக்கள் முழு பாதுகாப்புடன் முகக்கவசங்களையும் அணிந்துகொண்டு சமூக இடைவெளியையும் கடைப்பிடித்துக்கொள்வது நல்லது.