பொதுவாக நமது உடலுக்கு எல்லா சத்துக்களுமே தேவை. ஒவ்வொரு சத்துக்களும் நம் உடலுக்கு வெவ்வேறு வகைகளில் வலு சேர்த்து, நம்மை ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. நீங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கிறீர்களா? உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். புரதச்சத்து குறைபாடு இருப்பின் நம் உடலில் வரும் சில அறிகுறிகளைக்கொண்டே நாம் சரி செய்து கொள்ள முடியும்.
உடலில் போதுமான அளவுக்கு புரதச்சத்து இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும். உடலின் வளர்ச்சிக்கும், தசைகள் கட்டமைப்புக்கும், பராமரிப்புக்கும் புரதம் மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் உடலில் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்று இங்கே பார்க்கலாம்.
புரதச்சத்து குறைபாடு அறிகுறிகள்:
1. நீங்கள் மிக எளிதாக உடல்நலம் பாதிக்கப்படுவது புரதச்சத்து குறைபாட்டால் தான். உடலில் போதியளவு ஊட்டச்சத்து இல்லை என்றால், நோய் எதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து, எளிதாக நோய்கள் தொற்றிக்கொள்ள வழிவகுக்கும்.
2. தசைகளின் வளர்ச்சிக்கும் தசைகளின் வலிமைக்கும் புரதம் இன்றியமையாதது. புரதச்சத்து குறைந்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டால், உடலில் புரதம் குறைவாக இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
3. எலும்புகளின் வலிமைக்கும், அடர்த்திக்கும் புரதம் மிகவும் முக்கியமானது. உடலில் போதுமான அளவு புரதச்சத்து இல்லையென்றால் எலும்புகள் வலுவிழந்து முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
4. மயக்கம் வருவது போல தோன்றுவது மற்றும் சோர்வாக உணர்வது போன்றவை புரதச்சத்து குறைபாட்டால் தான்.
5. உடலில் போதிய அளவு புரதச்சத்து இல்லை என்றால், சில சமயங்களில் நீங்கள் காரணமே இல்லாமல், பெரிதாக எந்த ஒரு வேலையும் செய்யாமல் கூட சோர்வாக உணர்வீர்கள்.
6. நமது சருமம் உருவாகக் காரணம் திசுக்கள் தான். அதற்கு முக்கியமான ஒன்று புரதம் என்கின்ற ஊட்டச்சத்து. சருமத்தில் பிரச்சினைகள் தோன்றுவதன் மூலம் உடலில் புரதச்சத்து குறைவாக இருப்பதை உணரலாம்.
7. புரதம் குறைவாக இருந்தால், முடியின் வேர்கள் வலுவிழந்து எளிதாக முடி உதிரும். இதனால் முடி உடையவும் செய்யும்.
புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளை சரி செய்துகொள்ள முடியும்.

பொதுவாக ஒருவர், வாரம் மூன்று முட்டை வரை சாப்பிடலாம். முட்டையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. ஓட்ஸில் புரதம் நிறைந்திருக்கிறது. ஓட்ஸ் இட்லி அல்லது ஓட்ஸ் உப்புமா செய்தும் சாப்பிடலாம். காலை உணவை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் இதனை முழுமையான சத்தான காலை உணவாக சாப்பிடலாம். தயிர், சீஸ் போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவற்றில் கொழுப்பும் அதிகமுள்ளதால் அளவாக உட்கொள்ளவும். முளைக்கட்டிய தானியங்கள், கடல் உணவுகள், கொண்டைக் கடலை, சோயா, பால், பீன்ஸ், சீஸ், பாதாம், மீன், கோழி இறைச்சி (நாட்டுக்கோழி சிறந்தது), ப்ரோக்கோலி, பருப்பு வகைகள், சிறுதானியம், சூரியகாந்தி விதை, கடலை ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உணவில் சேர்த்து கொண்டு புரத குறைபாட்டை சரி செய்யலாம்.
Note: அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும். இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொதுப்பயன்பாட்டுக்கு மட்டுமே. மருத்துவ ஆலோசனைகளுக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்.