உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக இருக்கும் நோய், இந்த கல்லீரல் கோளாறுகள்தான். இதன் விளைவாக வருடத்திற்கு 14 லட்சம் மக்கள் இறக்க நேரிடுகிறது. உலக மக்கள்தொகையில் பெரும்பாலானோர் ஹெபடைடிஸ் B மற்றும் C நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கல்லீரல் கோளாறுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்திவிடும் என்றிருந்தாலும், கல்லீரலை பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் பரவலாக இல்லை என்றே கூறலாம். மற்ற உடல் உறுப்புகளான இதயம், சிறுநீரகம், மூளை போன்ற உறுப்புகளைப் பாதுகாப்பதற்குத் தரும் முக்கியத்துவத்தை கல்லீரலுக்கு மக்கள் வழங்குவதில்லை.
கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்தக்கூடிய சில உணவுகளை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். வைரஸ் காரணமாக கல்லீரலில் உண்டாகும் வீக்கமே கல்லீரல் அழற்சி. இந்த நோய் மது வகைகள், மருந்துகளாலும் உண்டாகின்றது.
1. குளிர்பானங்கள்
நீங்கள் நினைத்துப் பார்ப்பதைக் காட்டிலும், அதிகப்படியான ஆபத்தை விளைவிக்கக்கூடியவை இந்த குளிர்பானங்கள். சர்க்கரை அதிக அளவில் இதில் சேர்க்கப்படுகிறது. இதனால் உடல் பருமனாவதோடு கல்லீரல் ஆரோக்கியமும் கெட்டுவிடும். குளிர்பானங்களை தொடர்ச்சியாக குடித்து வருவீர்களானால் கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேலும் குளிர்பானங்கள் அதிகம் குடித்தால் பற்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
2. சர்க்கரை
உணவில் சர்க்கரையை அதிகம் சேர்த்துக் கொள்வது கல்லீரலுக்கு ஆபத்தை தரும். சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட இனிப்பு வகைகளை சாப்பிடுவதால் ஃபேட்டி லிவர் நோய் உண்டாகும். ஆகவே கூடியவரையில் சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.

3. மதுபானம்
மது அருந்துவதால் கல்லீரல் நோய், இதயநோய்கள், வயிற்றுப் புண், பால்வினை செயல் பிறழ்ச்சி, மனநோய் மற்றும் பிற உடல் உபாதைகளும் ஏற்படும். மதுபானம் அருந்துவதால் ஃபேட்டி லிவர் நோயின் தீவிரம் அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தினால் உடல் ஆரோக்கியம் சீராகி கல்லீரலும் உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கக்கூடிய நச்சுக்கள் அனைத்துமே கல்லீரலில்தான் சென்று தேங்கிவிடும். எந்த உணவாலும் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இதை பின்பற்றுங்கள். சிப்ஸ், அப்பளம் போன்ற எண்ணெயில் தயார் செய்யப்பட்ட பாக்கெட் உணவுகளை பெருமளவில் தவிர்த்துவிடுங்கள். இதில் அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு என உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. பாக்கெட்டுக்களில் பதப்படுத்தப்பட்ட எல்லா உணவுப் பொருள்களிலும் வெள்ளைச் சர்க்கரை, தரம் குறைவான எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன. புதிதாக நீங்கள் மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள விரும்பினால் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும்.

5. கொழுப்பு
கல்லீரலின் முதல் எதிரி கொழுப்புதான். துரித உணவுகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கொழுப்புச் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த கொழுப்புகள் உடல் எடையை அதிகரிக்க செய்யும். ஃபேட்டி லிவர் நோயை உண்டாக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு மிக்க உணவுகள் மூலமாக உடலில் சேரும் அதிக பட்ச கொலஸ்ட்ரால், கல்லீரலின் இயக்கத்தை வெகுவாக பாதித்து சேதப்படுத்திவிடும்.