தடுப்பூசிகளை பொறுத்தவரை சிலவற்றை ஊசி மூலமாகவும், சிலவற்றை மருந்து போல வாய் வழியாகவும் கொடுத்து பார்த்திருப்போம்.. அதே போல சில தடுப்பூசிகளை மட்டும் ஒரே முறையில் இல்லாமல் பல முறை குறிப்பிட்ட கால இடைவெளியில் கொடுப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் எல்லா தடுப்பூசிகளும் ஒரே மாதியானவை அல்ல என்பது தான்!
தடுப்பூசிகளை பொறுத்தவரை பல வகைகள் இருக்கின்றன. இதனால் எல்லா தடுப்பூசிகளும் ஒரே மாதிரியாகச் செய்யப்படுவதில்லை; செயல்படுவதும் இல்லை. தடுப்பூசி வகை மற்றும் நோயைப் பொறுத்து எந்த ஆன்டிஜென்கள் மற்றும் எத்தனை ஆன்டிஜென்கள் பயன்படுத்த வேண்டும் என்பது வேறுபடும்! ஆன்டிஜென் பற்றி தெரிந்துகொள்ள இந்த தடுப்பூசி-101 கட்டுரையை படியுங்கள்!
முக்கியமான 5 தடுப்பூசி வகைகளை இங்கே காண்போம்!

1நேரடி, வீரியக்குறைப்பு தடுப்பூசி
Live and Attenuated Vaccines – இந்த வகை தடுப்பூசிகள் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே போடப்படும். ஏனெனில் இந்த வகையில் பலவீனப்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட பாதிப்பில்லாத ஆனால் ஒரு முழு, நேரடி வைரஸைப் பயன்படுத்துவார்கள். இதனால் இது உண்மையான வைரஸை போலவே, மேலும் மேலும் உருவாகி உடல் முழுக்க பரவும். உண்மையான நோய் தொற்று போலவே தான் என்பதால் வலுவான நோய் எதிர்ப்பு பதிலை நம் உடலில் தூண்டுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் தான் உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை எடுத்தவர்கள், புற்றுநோய் சிகிச்சைக்கு உட்பட்டவர்கள் போன்ற பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வகை தடுப்பூசிகளைப் போடக்கூடாது. பலவீனமான வைரஸ் தான் என்றாலும் இவர்களது உடலால் அவற்றை எதிர்த்துப் போராட முடியாது.
இந்த வகையில் எம்.எம்.ஆர் (தட்டம்மை, ரூபெல்லா) மற்றும் வெரிசெல்லா (சிக்கன் பாக்ஸ்) தடுப்பூசிகள் அடங்கும்.
2செயலற்ற தடுப்பூசிகள்
Inactivated Vaccines – இந்த வகையிலும் முழு வைரஸும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை உயிரற்றவை. இவை ஆய்வகத்தில் செயலிழக்க வைக்கப்படுகின்றன அல்லது கொல்லப்படுகின்றன. உயிரற்றவை என்பதால் இவற்றால் பெருகி உடல் முழுவதும் பரவ முடியாது. அதனால் நமது எதிர்ப்புச் சக்தியைத் தூண்ட இந்த வகை தடுப்பூசிகள் அதிக அளவு கொடுக்கப்பட வேண்டும். இந்த வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு போலியோ தடுப்பூசி. அதனால் தான் இவை பல முறை கொடுக்கப்படுகின்றன.
3சப்யூனிட் தடுப்பூசிகள்

சப்யூனிட் தடுப்பூசிகளில் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதற்குக் கிருமியின் ஒரு துண்டு அல்லது ஒரு துளி புரதம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்டிஜென்களை மட்டுமே பயன்படுத்துவார்கள். இதில் முழு வைரஸ் அல்லது பாக்டீரியாக்களைப் பயன்படுத்தாததால், பக்க விளைவுகள் நேரடி அல்லது செயலற்ற தடுப்பூசிகளைப் போல இருக்காது. அதனால் தடுப்பூசி பலனளிக்கப் பல அளவுகள் கொடுக்கப்பட வேண்டும். DTaP மற்றும் Tdap தடுப்பூசிகளின் பெர்டுசிஸ் ( whooping cough ) பகுதி இதில் அடங்கும்.
4ஒருங்கிணைந்த தடுப்பூசிகள்
இந்த தடுப்பூசிகள் ஒரு வகை சர்க்கரை போன்ற பூச்சுகளைக் கொண்ட பாக்டீரியாக்களின் குழுவிலிருந்து நம்மைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக ஒரு நோய் தோற்று ஏற்படும் போது நமது நோய் எதிர்ப்பு மண்டலம் ஆன்டிஜென்களை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்த அடுக்கு அவற்றை மறைத்து விடும். ஒருங்கிணைந்த தடுப்பூசிகள் (Conjugate Vaccines) பூச்சுகளுடன் ஆன்டிஜென்களை பிணைக்கின்றன, இதனால் நமது உடலால் எதைத் தேடுவது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். தொற்று ஏற்பட்டால் பாக்டீரியாவைத் தேடுவதற்கும் அழிப்பதற்கும் இவை பயன்படும்.
மெனிங்கோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசி இந்த வகை தான். இது மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியாவிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும்.
Also Read: கொரோனா உயிரிழப்பை தடுக்கிறது சூரியனில் இருந்து வெளிவரும் வைட்டமின் – D! புதிய ஆராய்ச்சி முடிவு!!
5டாக்ஸாய்டு தடுப்பூசிகள்

சில சமயங்களில் நமக்கு வைரஸ் அல்லது பாக்டீரியா மூலம் பெரிதாகப் பாதிப்பு இருக்காது. அதற்குப் பதில் அவை நம் உடலில் உருவாக்கும் நச்சு பொருட்களால் தான் பாதிப்பு இருக்கும். இந்த டாக்ஸாய்டு தடுப்பூசிகளில் அந்த நச்சுப்பொருளின் பலவீனப்படுத்தப்பட்ட வெர்ஷன் பயன்படுத்தப்படும். இதன் மூலம் அந்த நச்சுப்பொருள் நமக்குத் தீங்கு விளைவிக்கும் முன்பே அதை அடையாளம் கண்டு போராட உடல் கற்றுக்கொள்ளும். டி.டி.ஏ.பி மற்றும் டி.டி.ஏ.பி தடுப்பூசிகளின் டெட்டனஸ் பகுதி இதில் அடங்கும்.
Also Read: தவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்!
தடுப்பூசிகள் கொடுக்கப்படும் வழிமுறைகள்
அடுத்து, தடுப்பூசியை நம் இஷ்டப்படி எல்லாம் போட முடியாது. தடுப்பூசியைப் போடுவதற்கு என சில வழிமுறைகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சில தடுப்பூசிகள் தசைகளில் 90 டிகிரி கோணத்தில் செலுத்தப்பட வேண்டும். சிலவற்றைத் தோலில் உள்ள தசைக்கு இடையிலான கொழுப்பு திசுக்களில் 45 டிகிரி கோணத்தில் கொடுக்க வேண்டும். பெரியவர்களுக்குக் கையிலும், அதே சமயம் குழந்தைகள் பெரும்பாலும் தொடை தசைகளில் ஊசி போடுவார்கள். சில தடுப்பூசிகள் ஊசி மூலம் போடப்படுவதில்லை. அதற்கு பதிலாக, அவை மூக்கு வழியாக அல்லது வாய்வழியாகக் கொடுக்கப்பட வேண்டும்.
ஒருவேளை தடுப்பூசிகளை தவறாகக் கொடுத்துவிட்டால் அவை குறைவான செயல்திறன் கொண்டவையாகவோ அல்லது தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தவோ வாய்ப்புள்ளது. அதனால் சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதே போல எந்தவொரு தடுப்பூசியையும் ஒருபோதும் நரம்பு வழியாக அதாவது நேரடியாக இரத்த ஓட்டத்தில் கொடுக்க மாட்டார்கள்!