சில தவறான பழக்கங்கள் தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பெரும் காரணியாக இருக்கிறது. அதிலும், நம் எடையை சீராக வைக்க, நீங்கள் சில ஆரோக்கியமான பழக்கத்தை தினசரி கடைபிடிக்க வேண்டும். அதேபோல சில பழக்கங்களை கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும். சரியான உணவு மற்றும் உறக்கம் இருக்குமானால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். உடல் எடையை குறைக்க நீங்கள் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னென்ன கெட்ட பழக்க வழக்கங்களால் உடல் எடை அதிகரிக்கிறது என்று பார்க்கலாம்.
அளவான உறக்கம்
தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை உறங்குவது அவசியம். அதிலும் 11-3 வரையிலான உறக்கமே சிறந்த உறக்கம். ஆழ்ந்த உறக்கம் இருந்தால் உங்களுக்கு பசி கட்டுப்பாட்டோடு இருக்கும், அதோடு உணவையும் சீராக எடுத்துக்கொள்ள முடியும். இரவு நேரத்தில் நீங்கள் நன்கு தூங்கி எழுவதால், அடுத்த நாள் முழுவதும் நீங்கள் மிகவும் சுருசுருப்பாகவும், புத்துணர்வோடும் இருப்பதை உணர முடியும்.
உடல் எடையை விரைவில் குறைக்க விரும்பினால் உணவை அளவாக சாப்பிட வேண்டும். தட்டு பெரியதாக தோன்றினால், சிறிய தட்டு பயன்படுத்தலாம். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாம். காய்கறிகளை நன்றாக உட்கொள்ளுங்கள். சரிவிகித உணவாக எடுத்துக்கொள்ளும் வேளையில் உடலும் சீராகவே இருக்கும்.
உணவுப் பழக்கம் தவறாக இருக்கும்போது அல்லது சீராக இல்லாதபோது உடல் எடை குறைய வாய்ப்பில்லை. அதிகமான வேலைப் பளு காரணமாக சில சமயங்களில் உணவை தவற விட்டுவிடுவீர்கள். சரியான நேரத்தில் சாப்பாடு எடுத்து கொள்வதுதான் சிறந்தது.
நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நமக்கு எவ்வளவு கலோரிகள் தேவை, நாம் தினமும் எவ்வளவு கலோரிகள் உள்ள உணவை சாப்பிடுகிறோம் என்றும் பார்த்து உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.
வீட்டு சாப்பாடு
முடிந்தவரை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்திடுவது நலம். இயற்கையான உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சாலச் சிறந்தது. கடைகளில் சாப்பிடும் உணவில் எவ்வளவு சத்து இருக்கிறதென்று உங்களுக்கு தெரியாது. ஹோட்டல்களில் சாலட் சாப்பிட்டாலும், அதில் சேர்க்கப்படும் எண்ணெய் உங்கள் உடல் எடையை அதிகரிக்கவே வழி வகுக்கும்.
மேலும் தினமும் நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்று உடற்பயிற்சிகளை மேற்கொள்வது சீரான உடலமைப்பிற்கும், புத்துணர்ச்சிக்கும் வழிவகுக்கும். உணவுகளை நன்றாக மென்று உண்ண வேண்டும். சரிவிகித உணவு நலம் தரும்.