உடலின் அநேக உறுப்புகளும் சரியாக இயங்க உடற்பயிற்சி முக்கியமான ஒன்றாகும். ஆனால், பெரும்பாலானோர் உடற்பயிற்சி விஷயத்தில் சற்று கவனக்குறைவாகவே இருக்கின்றனர். இப்படி தினசரி பயிற்சி செய்யாததால் உடல் நலத்துக்குக் கேடு விளைகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.
இன்று உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைப்பதற்கான பயிற்சி என்று மட்டும் எண்ணியே பலர் செய்து கொண்டிருகின்றனர். உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமான பயிற்சி அல்ல. உடற்பயிற்சி உடலின் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி.
உடற்பயிற்சி உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்ல, உடலில் பல நோய்கள் வராமல் தடுப்பதற்கான பயிற்சி. உடலைக் கட்டமைப்பு ரீதியிலும், தொழிற்பாட்டு ரீதியிலும் பலப்படுத்துவதற்கான பயிற்சி. இவ்வாறு பலவிதமாக உடற்பயிற்சியையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
உலகளவில் 140 கோடி பேர் உடற்பயிற்சியின்மையால் கடுமையான நோய் ஏற்படக் கூடிய அபாயத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு 2011-க்குப் பின் சற்று ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 140 கோடி என்பது உலக மக்கள் தொகையின் கால் பங்கு ஆகும். அதாவது உலக மக்கள் தொகையில் 4 பேரில் ஒருவர் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும், அந்த ஒருவருக்கு நோய் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இப்படி அலட்சியம் செய்வதால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘தி லான்சைட் குளோபல் ஹெல்த் (The Lancet Global Health)’ என்ற அறிவியல் நாளிதழில் உலக சுகாதார நிறுவனம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அதில் வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிடங்கள் நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதாரண உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் சுமார் 75 நிமிட நேரம் கடினமான உடற்பயிற்சியான ஓடுதல், குழு விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களும், பெண்களும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான ஆய்வு ஒன்றை உலக சுகாதார நிறுவனம் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 168 நாடுகளில் 19 லட்சம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தி அந்த ஆய்வு முடிவை கட்டுரை வடிவில் வெளியிட்டுள்ளது.