Homeநலம் & மருத்துவம்தவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்!

தவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்!

மருத்துவ நுண்ணுயிரியலாளர் ஒருவர் கொரோனா ஆபத்தை ஏற்படுத்தும் 14 விஷயங்கள் பற்றி அளித்துள்ள விளக்கம்.

-

NeoTamil on Google News

நீங்கள் வீட்டிலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பலமுறை 20 நொடிகளுக்கு கைகளை கழுவுகிறீர்கள். நீங்கள் தனிமையில் தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இல்லையேல், கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து உள்ளது. டாக்டர் மோனிகா ஸ்டூசென், மருத்துவ நுண்ணுயிரியலாளர் (Dr. Monika Stuczen, a medical microbiologist) ஆபத்தை ஏற்படுத்தும் 14 விஷயங்கள் பற்றி விளக்கமளித்துள்ளார்.

Contents hide

1
கொரோனா தாக்குதல் நமக்கு வராது என்று நினைப்பது

அரசாங்கத்தின் ஆலோசனையை பின்பற்றாமல், கொரோனா வைரஸ் பாதிக்காது என்று நினைத்தால், நீங்கள் மற்றவர்களையும் ஆபத்தில் சிக்கவைக்கப் போகிறீர்கள் என்று பொருள். இந்த வைரஸ் அனைவரையும் பாதிக்கக்கூடியது. இப்படித்தான் தென் கொரியாவில் ஒரு பெண் பல நூறு பேருக்கும் பரப்பிவிட்டார். பிறகு சில நாட்களிலேயே நோய் தொற்றியோரின் எண்ணிக்கை பல ஆயிரங்களாக ஆனது. இது புதிய வைரஸ். உடல் அதற்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்று சரியாக தெரியாது. நீங்கள் அறிகுறியற்றவராக இருக்கலாம். அறிகுறிகள் தெரியவே 6-7 நாட்களுக்கு மேலாகும். நமக்கு வராது என்று தான் இன்று பலரும் நினைத்துக்கொண்டு தான் வெளியில் நடமாடுகிறார்கள்.

2
தொடர்ந்து நீங்கள் பலருடன் நெருக்கமான தொடர்பில் இருப்பது; அருகில் சென்று பேசுவது

பாதிக்கப்பட்ட நபர் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும் நபர்களுடன் நிச்சயமாக தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் உடனடியான தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

3
நீங்கள் உங்கள் வயதை பற்றி எந்த அச்சமும் இன்றி வெளியில் நடமாடுவது

80 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இறப்பு விகிதம் 14.8 சதவிகிதம் மற்றும் 70 வயதிற்குட்பட்ட நோயாளிகளுக்கு 8 சதவிகிதம் என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிசிடிசி) தெரிவித்துள்ளது. இது 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு 3.6 சதவீதமாகவும், 50-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது. 49 வயதிற்குட்பட்ட அனைவரின் இறப்பு விகிதம் 0.5 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தது. எனவே தெளிவாக, வயது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

4
நீங்கள் நெரிசலான இடங்களுக்கு இனிமேலும் போவது

பல்பொருள் அங்காடிகள், பொது போக்குவரத்து, உணவகங்கள், விடுதிகள் போன்றவைகளில் நுழைந்த பிறகு உங்கள் கைகளைக் கழுவுங்கள். கைகளுக்கு சானிடைசர் பயன்படுத்துங்கள். உங்களால் முடிந்தால் ரப்பர் கையுறைகளை அணியுங்கள். உங்கள் முகத்தைத் தொடவே கூடாது.

5
பலரும் பயன்படுத்தும் பொருட்களை தொடுவது

பொது போக்குவரத்து, படிகளின் ஓரம் இருக்கும் கைப்பிடிச் சட்டம், கதவு தாழ்ப்பாள், சுவிட்சுகள், டாய்லெட் ஃப்ளஷ்கள், லிப்ட் பொத்தான்கள் போன்றவற்றை தொட நேர்ந்தால் மீண்டும் உங்கள் கைகளை கழுவவும். உங்கள் முகத்தைத் தொடாதீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் வசிப்போரின் செல்போன்களை தொடுவது நிச்சயம் நன்மை தருவதாக தோன்றவில்லை.

6
இப்போதும் நீங்கள் ஹேண்ட்ஷேக் செய்வது

யாருக்கும் கைகளை கொடுக்காதீர்கள். உங்கள் குழந்தைகளின் முகத்தின் அருகே கைகளை கொண்டு செல்லாதீர்கள். உங்களுக்கு அறிகுறி இருப்பின், இந்த வைரஸ் கட்டுக்குள் வரும் வரை அவர்களை தொடுவதை தவிருங்கள்.

7
நீங்கள் இன்னும் ஜிம் கருவியைப் பயன்படுத்துவது

பல ஜிம்கள் மூடப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பலர் ஒவ்வொரு நாளும் ஜிம் கருவிகளைத் தொடுகிறார்கள். வைரஸ்கள் அந்த பொருட்களின் மேற்பரப்பில் பல மணி நேரம் உயிர்வாழும்.

8
கடைகளில் உடைகள், கடிகாரம், வாசனை திரவியம், மேக்கப் பொருட்களை Trial பார்ப்பது

கடைகளில் வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த பொருட்களை தொட்டு முன்னரே பயன்படுத்தி இருந்தால் அடுத்தவருக்கு பரவ வாய்ப்பு அதிகம்

9
நீங்கள் ATM பயன்படுத்துவது

ஏடிஎம் இயந்திரங்களின் தொடுதிரை அல்லது பொத்தான்களை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் தொடுகிறார்கள். அவர்கள் எங்கிருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கடைகளில் பயன்படுத்திவிட்டு மீண்டும் கடைக்காரரிடம் இருந்து வாங்கும் போதும் அதிக கவனம் அவசியம். கைகளுடன் கார்டையும் கழுவி விடுங்கள்.

10
நீங்கள் தவறான உணவுப் பழக்கத்தை கொண்டிருப்பது

இது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. கோவிட் -19 க்கு உடல் எவ்வாறு பதிலளிக்கும் என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைப் பொறுத்தது. வைட்டமின்கள் C மற்றும் E நிறைந்த ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். ஆரஞ்சு, சாத்துக்குடி, தக்காளி, முளைகட்டிய தானியங்கள், சப்போட்டா, மாம்பழம் போன்றவைகளையும் எடுத்துக்கொண்டு சரிவிகித உணவை உண்ணலாம். கேரளாவில் பாதிக்கப்பட்டோருக்கு வறுத்த மீன் மற்றும் முட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

11
சில நண்பர்கள் தானே… சந்தித்துவிட்டு வருவோம் என்று நினைப்பது

குடும்பமாகவே இருந்தாலும் அறிகுறிகள் லேசாக இருக்கும் போதே தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம். நண்பர்களுடன் சந்திப்பானாலும் இப்போது தவிர்க்கப்படவேண்டும். சீனாவும், தென்கொரியாவும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவந்ததன் காரணமே தனிமைப்படுத்தியது தான். இதை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இன்று வரை அழுத்தமாக நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் தான் தொடர்ந்து பரவுவதாக WHO மற்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

12
நீங்கள் வேறொரு ஊருக்கு அல்லது சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என நினைப்பது

நாட்டின் குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு (அல்லது வேறொரு ஊருக்கோ, மாநிலத்திற்கோ, நாட்டிற்கு) தப்பிப்பது அல்லது பயணம் செய்வது பலரை ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில் பயணத்தின் போது வைரஸை தொற்றக்கூடும். நாடு விட்டு நாடு கொரோனா வைரஸ் பரவியதே பயணங்களினால் தான். பயணிகளால் இந்த வைரஸ் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தொடர்ந்து பரவி வருவதால் தான் இந்தியா வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.

13
சொந்த ஊரில் இருக்கும் உங்கள் பெற்றோரைப் பார்க்கச் செல்வது

பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை பார்க்க செல்வது அவர்களை பேராபத்தில் சிக்கவைக்கும். இது அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் வைக்கிறீர்கள்.

14
வதந்தி என தெரியாமலே நம்பிவிடுவது

கோவிட் -19 தொடர்பான ஆலோசனைகள் அல்லது செய்திகளை நீங்கள் தொடர்ந்து பேஸ்புக் அல்லது ட்விட்டர், மற்றும் WhatsApp ல் படித்துவிட்டு அவையெல்லாம் உண்மை என உறுதியாக நம்பிவிடுவது. இது உங்களை தேவையில்லாமல் கவலையடையச் செய்வது மட்டுமல்லாமல், செய்தி போலியானதாக இருக்கலாம்.

மேலே கண்ட தவறுகள், இந்த இணைப்பில் உள்ள கட்டுரையை தழுவி மேலும் சில தகவல்களை ஆராய்ந்து சேர்த்து எழுதப்பட்டது. இணைப்பில் உள்ள கட்டுரையை எழுதியவர் Dr. Monika Stuczen, a Medical Microbiologist. ஆதலால் இது வதந்தி இல்லை. 😊

வாழ்க வளமுடன்!

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

Popular

error: Content is DMCA copyright protected!