மனிதர்களுக்கு இருக்க கூடிய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று இந்த முதுகு வலி. அதிலும் கொரோனா காலத்தில் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்தே தங்கள் அலுவலக வேலையை செய்து வருகிறார்கள். பெரும்பாலோனோருக்கு உட்கார்ந்து வேலை செய்வதற்கு ஏற்ற வசதியான சூழல் இருப்பது இல்லை. அலுவலகத்தில் அதற்கேற்ற பிரத்யேகமான டேபிள் மற்றும் சேர்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் வீட்டில் அது போன்ற சூழல் இருப்பதில்லை. இருந்தாலும் அவை சரியான விகிதத்தில் இருப்பதில்லை.
முதுகு வலி எதனால் வருகிறது?
நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறபோது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறது. முதுகுப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள் ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளே இதற்கு முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன. பொதுவாக, முதுகுவலிக்கு 90% முதுகெலும்பில் உண்டாகும் பிரச்சினை காரணமாக இருக்கலாம். தினமும் இருசக்கர வாகனங்களில் தொலைதூரம் பயணிப்பது, குண்டும் குழியுமான சாலைகளில் பயணிப்பது, அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது, உடற்பயிற்சி பழக்கமின்மை, உயர்ந்த இடத்திலிருந்து குதிப்பது, திடீரெனக் குனியும்போது அல்லது திரும்பும் போது முதுகுவலி உண்டாகலாம். சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் முதுகு வலி பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடலாம்.
முதுகு வலியைத் தடுக்க:
- நிமிர்ந்து நடக்க வேண்டும், கூன் விழாமல் நடப்பதே நல்லது.
- அலுவலகத்தில், நிமிர்ந்து உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும், முதுகுதண்டு வளையாமல் இருக்க வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது, தேவை ஏற்பட்டால் முதுகுக்கு கீழ் பகுதியில் சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
- எந்த வேலையையும் மணிக் கணக்கில் தொடர்ந்து ஒரே நிலையில் அமர்ந்தவாறு செய்ய வேண்டாம். வேலை செய்யும்போது, ஒரே மாதிரியான நிலையில் உட்கார்ந்திருக்கும் நிலையிருந்தால் உடலின் அமர்ந்திருக்கும் நிலையை அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்.
- நீண்ட நேரம் வேலை செய்ய நேர்ந்தால், வேலைக்கு நடுவில் சிறிதளவு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
- நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங் போன்ற ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகுவலி வராமல் தடுக்கும்.
- பெண்கள் உயரமான காலணிகளை அணிவதனால் முதுகுவலி உண்டாகலாம்.
- மன அழுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது.
- கால்ஷியம், வைட்டமின் டி, வைட்டமின் பி 12, வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உணவில் உள்ள கால்ஷியம் சத்தை உடல் தக்கவைத்து கொள்வதற்கு வைட்டமின் டி அத்தியாவசியம்.
- உடல்பருமன் ஏற்படுவதாலும் முதுகுவலி ஏற்படலாம்.
- எலும்பையும் தசையையும் வலுப்படுத்தும் கால்சியம், புரதம் மிகுந்த பால், முட்டை, கொண்டைக் கடலை, சோயா, உளுந்து போன்ற உணவு பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் முதுகுவலியை தவிர்க்கலாம்.