இயற்கையாகவே இந்த உலகம் முடிவில்லாத எண்ணற்ற வண்ணங்களின் கலவையாகும். சில வண்ணமயமான உயிரினங்கள் இங்கே உங்களுக்காக.
1. மாண்ட்ரில் (Mandrill)

நீல மற்றும் வெள்ளை கன்னங்களுடன், சிவப்பு வண்ணத்தில் நீண்ட மூக்குடன் காணப்படும் மாண்ட்ரில் ஒரு வண்ணமயமான பாலூட்டி. அவற்றின் பின்புறத்தில் நீலம், சிவப்பு மற்றும் ஊதா நிற தோலுடன் தங்கள் முகங்களுடன் பொருந்துகின்ற அளவில் வண்ணமயமாக இருக்கின்றது. இவை தவிர மஞ்சள் நிற தாடியுடன் உடலின் எஞ்சிய பகுதிகள் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இது பூமத்திய ரேகை பகுதியிலுள்ள ஆப்பிரிக்காவில் வாழ்கின்றது.
2. கம்பளிப்பூச்சி (Wattle-cup caterpillar)

இனிப்பு ரேப்பர்களில் மூடப்பட்டிருப்பதைப் போல தோற்றமளிக்கின்றன இந்த கம்பளி பூச்சிகள். இதன் உடலின் முழுவதும் இருக்கும் கூர் முனைகள் தேனீக்கள் கொட்டுவதை விட மூன்று மடங்கு வலியை உண்டாக்கும். இது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கிடைக்கும்.
3. மயில் மான்டிஸ் இறால் (Peacock mantis shrimp)

கடலின் மிகவும் ஈர்க்கக்கூடிய உயிரினங்களில் ஒன்று, இந்த மயில் மான்டிஸ் இறால். இதன் ஒவ்வொரு சென்டிமீட்டரும் ஒரு நிறத்தை வெளிப்படுத்துகிறது. பச்சை, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் காணப்படும் இவை, வெப்பமண்டல பெருங்கடல்களின் பாறைப் பிளவுகளின் கீழ் வாழ்கின்றன.
4. காது இல்லாத பல்லி (Greater earless lizard)

மூன்று முதல் ஏழு சென்டிமீட்டர் வரை நீளமுள்ள அவை, பொதுவாக டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ மற்றும் அரிசோனாவில் உள்ள பாறைகள் நிறைந்த வாழ்விடங்களில் வசிக்கின்றன. இனப்பெருக்க காலத்தில் பெண்கள் இளஞ்சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமான வண்ணங்களில் காணப்படும். இனச்சேர்க்கை காலத்தில், ஆண்களின் தோல் சிவப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் நிறமாக மாறும்.
5. நீல ஆக்டோபஸ் (Blue-ringed octopus)

கடலில் மிகவும் பிரகாசமான வண்ண உயிரினங்களில் ஒன்றாக இருக்கும் இந்த சிறிய ஆக்டோபஸ் உலகின் மிக ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். இவற்றின் உமிழ் நீரிலேயே விஷம் உள்ளது. வெறும் 12 முதல் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள இவை பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் பவளப்பாறைகளின் பிளவுகள் உள்ளே காணப்படுகின்றன.
6. கோல்டியன் பின்ச் பறவை (Gouldian finch)

ஆஸ்திரேலியாவின் மிகவும் வண்ணமயமான பறவைகளில் இதுவும் ஒன்றாகும். 1992 ஆம் ஆண்டில் குயின்ஸ்லாந்தில் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் இந்த இனங்கள் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டன. பிரகாசமான நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் ஊதா ஆகிய வண்ணங்கள் இவற்றை அழகாக்குகின்றன.
7. மாண்டரின் மீன் (Mandarin fish)

பசிபிக் பெருங்கடலில் வாழ்கின்ற இவற்றின் உடலில் ஆரஞ்சு, சிவப்பு அல்லது மஞ்சள், ஊதா நிறங்கள் கலந்து காணப்படுகின்றன.
8. மயில் சிலந்தி (Peacock spider)

இதன் உடலில் பளபளக்கும் ஊதா, பச்சை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் பிரகாசிக்கின்றன. ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியை கவர்வதற்கு நடனமும் ஆடுகின்றன.
9. சிவப்புக் கண்கள் மரத் தவளை (Red-eyed tree frog)

பகலில் உறங்கும்போது இவை தங்கள் சிவப்பு கண்களை மூடியே இருக்கின்றன. பெரும்பாலும் பச்சை வண்ணத்தில் காணப்படும் இவற்றின் கால்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். தூங்கும்போது இவற்றின் உறக்கத்தை கலைத்தால் சிவப்பான அதன் கண்கள் மூலம் வேட்டையாடுபவர்களை அச்சுறுத்தும்.
10. ஸ்கார்லெட் மக்கா (Scarlet Macaw)
ஸ்கார்லெட் மக்கா, இது ஒரு பெரிய கிளி இனம். இது 32 அங்குலம் வரை வளருகிறது. முக்கியமாக இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் மேல் இறக்கையில் மஞ்சள் நிற பட்டையுடனும், நீல நிற இறக்கைகளுடனும் காணப்படுகிறது. ஸ்கார்லெட் மக்கா அமேசான் பேசின் தென்அமெரிக்காவை சேர்ந்தது. ஆனால், மத்திய அமெரிக்கா முழுவதும் இதைக் காணலாம்.
