படங்களை உடனே பார்ப்பதற்கு முன் இந்நிகழ்வு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை தெரிந்து கொண்டு பிறகு பார்த்தால் இன்னும் பரவசம் அடையலாம்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிக அழகிய தேசிய பூங்காக்களில் ஒன்றான யோசிமிட்டி தேசிய பூங்காவில் (Yosemite National Park, USA) விழும் ஒரு அருவி புகைப்பட ஆர்வலர்களின் சொர்க்கபுரியாகும். இதனைப் பார்ப்பவர்கள் அனைவரும் பூமியானது எவ்வளவு அழகிய காட்சிகளைக் கொண்டுள்ளது என வியப்பது நிச்சயம்.
டிசம்பர் முதல் ஏப்ரல் வரை யோசிமிட்டி தேசிய பூங்காவில், எல் கேபிடன் (El Capitan) எனப்படும் பெரும் கிரானைட் பாறையின் கிழக்கு விளிம்பை நோக்கி பனி பனி நீரோடைகள் உருகி கீழே விழுகிறது. குளிர்ந்த நீர் விழும் இந்த அமைப்பு பார்ப்பதற்கு குதிரைவால் போன்ற தோற்றத்தை கொண்டிருப்பதால் இது நீர் குதிரைவால் நீர்வீழ்ச்சி (Horsetail falls) என அறியப்படுகிறது.
இங்கு பிப்ரவரி மாதத்தில் ஒரு சில நாட்களுக்கு மட்டும் மேலும் ஒரு சிறப்பான அதிசயம் நிகழ்கிறது. சில நாட்களுக்கு மட்டும், கொட்டும் அருவியில் சூரிய ஒளி பட்டதும் எரிமலைக் குழம்பு (Lava) போல் தோன்றும் அந்த அதிசயம் தான் அது. இதனால், பொதுவாக “நீர்வீழ்ச்சி” என்று அறியப்படும் இது, அப்போது மட்டும் “நெருப்பு வீழ்ச்சி” என்று அழைக்கப்படுகிறது.
வருடந்தோறும் நிகழும் இந்நிகழ்வு, உலகம் முழுவதிலிருந்தும் இயற்கை விரும்பிகள் மற்றும் புகைப்படக்காரர்களை ஈர்க்கிறது. குளிர்ச்சியுடனான, சிவப்பு – ஆரஞ்சு ஒளியைக் காணும் வாய்ப்பிற்காக ஏங்க வைக்கிறது. இந்த “குளிர்ந்த நெருப்பு” நிகழ்வு பொதுவாக பிப்ரவரி கடைசியில் 7 முதல் 10 நாட்களுக்கு நீடிக்கும் – ஆனால் நிகழ்வு நிச்சயம் என எந்த உத்தரவாதமில்லை.
இந்த அதிசயம் நடக்க, கீழே காணும் அனைத்து இயற்கை நிகழ்வுகளும் ஒத்திசைக்க வேண்டும்.
- யோசிமிட்டியில் பனி இருக்க வேண்டும்.
- வெப்பம் அந்த பனி உருகுவதற்கு போதுமான அளவு சூடாக இருக்க வேண்டும்.
- பனி உருகி நீர்வீழ்ச்சி உருவாக வேண்டும்.
- கலிபோர்னியாவில் வறட்சி என்றால், இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இருக்காது. அதனால் குதிரைவால் நீர்வீழ்ச்சி, “நெருப்பு வீழ்ச்சியாக” நம் கண்ணுக்கு தெரியாது.
- மேலும், மேகம் இல்லாத வானம் தேவை – கொஞ்சம் மேகம் இருந்தாலும் இந்த கண்கவர் காட்சியை அனுபவிக்க முடியாமல் செய்து விடும்.
- இறுதியாக, மறையும் சூரியன் சரியான கோணத்தில் நீர்வீழ்ச்சியில் பட வேண்டும்.
- இவ்வளவும் தாண்டி நடக்கும் இந்த நிகழ்வு 10 நிமிடத்திற்கு மேல் நீடிப்பதில்லை.
இது நடக்கும் நேரத்தில் பார்வையாளர்கள் அங்கு இருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன் நடந்த நெருப்பு வீழ்ச்சியின் போது வெறும் 400 பேருக்கு மட்டுமே இதைக்காணும் அதிர்ஷ்டம் இருந்தது. பலரால், கடும் வானிலை காரணமாக இதைக் காண சரியான நேரத்துக்கு வர முடியவில்லை.
இந்த வாரம், ஏராளமான பனிப்பொழிவு காரணமாக பனி அடுக்கடுக்காக உறைந்து போயுள்ளது. அப்போது நிகழ்ந்த அந்த அதிசயத்தை இப்போது படங்களில் பாருங்கள்.
Featured Image Credit: Instagram @abc7la