இன்றைய தேதியில் உலக அளவில் போக்குவரத்துறை தான் அதிமுக்கியமாக பார்க்கப்படுகிறது. தொழில்துறை, சுற்றுலா என அனைத்திற்கும் மைய நரம்பு போக்குவரத்து தான். பெரும்பாலான நாடுகள் இதெற்கென பெருந்தொகைகளை செலவழித்துவரும் வேளையில் ரஷியாவில் இருந்து சீனாவிற்கு வெறும் எட்டு நிமிடத்தில் செல்லும் கேபிள் கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது. நம்ம ஊர் ரோப் கார் தான் என்றாலும் இதன் பயண தூரம் அதிகம். இரண்டு நாடுகளுக்கு இடையே அமைக்கப்படும் முதல் கேபிள் கார் என்ற பெருமையை இது பெறுகிறது.

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹெய்ஹி (Heihe) யில் இருந்து ரஷியாவின் ப்ளாகோவெஷ்சென்ஸ்க் (Blagoveshchensk) நகரத்திற்கு இடையே ஓடுகிறது ஆமூர் நதி. வருடத்தின் பாதி நாட்களில் இந்த நதி பனிக்கட்டியால் சூழப்பட்டிருக்கும். இதற்கு மேலே தான் இந்த கேபிள் கார் பயணிக்க இருக்கிறது. பயணிகள் இந்த இரு நகரத்தையும் கண்டவாறே பயணிக்கலாம். டச்சு வடிவமைப்பு நிறுவனமான UNStudio தான் இந்த பிரம்மாண்டத்தை வடிவமைத்துள்ளது.

ரஷிய கரையில் இந்த கேபிள் கார் பயணத்தைத் துவங்கும் இடத்தில் சொகுசுவிடுதி மற்றும் உணவகம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறை இந்த கார் இயக்கப்படும். ஒருமுறைக்கு குறைந்தபட்சமாக 60 பேர் பயணிக்கலாம். பயணிகள் தங்களது உடமைகளை எடுத்துவரவும் அனுமதி உண்டு. இந்த தொழில்நுட்ப சாதனையை நிகழ்த்தியிருக்கும் UNStudio நிறுவனத்தின் தலைவர் பென் வான் பெர்கல் (Ben van Berkel),”இந்த கேபிள் கார் இரு நாடுகளை மட்டுமல்லாது இரு கலாச்சார விழுமியங்களை ஒன்றிணைக்கிறது. மற்ற வழி போக்குவரத்துகளோடு ஒப்பிடும்போது இதில் பயண நேரம் மிகக்குறைவு. இதுதான் போக்குவரத்தின் எதிர்காலம்” என்றார்.

ரஷியா – சீனா மட்டுமல்லாது அம்ஸ்டர்டாம், கோத்தன்பர்க், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய இடங்களிலும் கேபிள் கார்களை UNStudio நிறுவனம் வெற்றிகரமாக நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷியா – சீனா இடையே நடைபெற்றுவரும் இந்த நவீன போக்குவரத்து பணிகள் 2020 ஆம் ஆண்டு முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.