உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. மழையோடு சேர்த்து மொத்தம் 11 அணிகள் இத்தொடரில் விளையாடுகின்றன. அநேகமாக லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் மழையும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இறுதிப்போட்டிக்கு கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது. லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரையிறுதிக்குள் நுழையும் அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்னர் இந்த ஆண்டு தான் ராபின் ரவுண்ட் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. இதனடிப்படையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும். லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தைப்பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா நாக்கவுட் சுற்றுக்குள் சென்றுவிட்டது. இந்தியா மீதமிருக்கும் இரு போட்டிகளில் ஒன்றில் வென்றாலும் உள்ளே என்பதால் கிட்டத்தட்ட இந்தியாவின் நாக்கவுட் சுற்று வாய்ப்பு உறுதிதான். நியூசிலாந்தைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியுடனான போட்டியில் வென்றால் அவர்களுக்கான அரையிறுதி டிக்கெட் வழங்கப்பட்டுவிடும். ஒருவேளை தோற்றால் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும். தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன. எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது என பார்ப்போம்.
இங்கிலாந்து
உலகக்கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைய ஒரே வாய்ப்புதான் இருக்கிறது. ஜூலை 3 ஆம் தேதி நியூசிலாந்தை வீழ்த்தியே ஆகவேண்டும். இல்லையென்றால் பெட்டிபடுக்கையை கட்ட வேண்டியதுதான்.
நியூசிலாந்து
ஜூலை 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

பாகிஸ்தான்
ஜூலை 5 ஆம் தேதி வங்கதேசத்தை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
நியூசி – இங்கிலாந்து போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற வேண்டும்.
வங்கதேசம்
இன்று நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டும். அதேபோல் பாக்கிஸ்தானிற்கு எதிரான போட்டியிலும் வெற்றிபெற வேண்டும்.
நியூசி – இங்கிலாந்து போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற வேண்டும்.

ஆக நான்காவது இடத்திற்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. யார் அந்த வாய்ப்பை பெறுவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.