உலககோப்பை தொடரின் 23வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள டௌன்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இரு அணிகளுமே தலா நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்திருக்கிறது. நாக்கவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இருக்கின்றன. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லேவிஸ் இருவரும் களம் இறங்கினர்.

அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட கெயில் டக்கில் வெளியேறி மே.இ.தீவு ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். ஆனால் அதன் பின்னர் களம் இறங்கிய ஷாய் ஹோப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 116 ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய எவின் லேவிஸ் 70 ரன்கள் அடித்து ஷகிப் அல் ஹசன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் கிரீசுக்கு வந்தார் நிக்கோலஸ் பூரன். வந்த வேகத்திலேயே அதிரடியாக 25 ரன்கள் அடித்து ஷகிப் அல் ஹசன் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதற்கடுத்து வந்த ஹெட்மயர் வந்த முதல் பந்திலிருந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். நாலாபுறமும் பந்தை விளாசிய ஹெட்மயர் 50 ரன்னில் முஸ்தாஃபிசுர் ரகுமான் பந்தில் அவுட் ஆக, மைதானத்திற்குள் வந்த காட்டடி ரஸல் அதே முஸ்தாஃபிசுர் ஓவரில் டக்அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஹோல்டர் 33 ரன்னிலும் ஷாய் ஹோப் 96 ரன்னில் முஸ்தாஃபிசுர் பந்தில் அவுட் ஆகினார். மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்களை குவித்தது.

மேற்கு இந்திய தீவுகளை எதிர்த்து 322 ரன்கள் எடுக்கவேண்டும். இதெல்லாம் நடக்குற காரியமா? என்று கன்னத்தில் கைவைத்துவிட்டனர் வங்கதேச ரசிகர்கள். ஆனால் இரண்டாம் இன்னிங்க்ஸ் துவங்கிய வேகம் ரசிகர்களுக்குள்ளும் பரவி உற்சாகப்படுத்தியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் சௌவுமியா சர்கார் மற்றும் தமீம் இக்பால் இருவரும் பொறுமையாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 52 ஆக இருந்த போது ரஸ்ஸல் வீசிய பந்தில் கெயிலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சர்க்கார். அடுத்து அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷகிப் அல் ஹசன் உள்ளே வந்தார். சிறிது நேரத்திலேயே இக்பால் ரன்னவுட்டாகி பெவிலியன் திரும்ப பேட்டிங் செய்ய வந்த முஷ்பிகுர் ரஹீம் ஒரு ரன்னில் வெளியேறினார்.
அடுத்துதான் மேற்கு இந்திய தீவுகளின் சோதனை காலம் வந்தது. லிட்டன் தாசும் ஷகிப் அல் ஹசனும் கைகோர்த்தனர். ஓவருக்கு ஒரு பவுண்டரி. வாய்ப்பு கிடைத்தால் இரண்டு என கணக்கு வைத்து ஆடினார்கள் இருவரும். 322 தானே அடிச்சிடலாம் என்ற தொனியில் ஆடிய இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டார்கள். ஏற்கனவே அந்த பிட்சில் ஸ்விங் இல்லை. தோதாக வெஸ்ட் இண்டீசிடம் ஸ்பின்னர்களும் இல்லை. எல்லோரும் பேசராக இருந்ததை ஷகிப்-லிட்டன் சரியாக பயன்படுத்திக்கொண்டனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் தடுமாறிப்போனார்கள். ஆனால் எந்த பிளானும் கைகொடுக்கவில்லை. களத்தில் நிலைத்து ஆடிய இருவரும் அடுத்தடுத்து கியரை மாற்றி ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். இதனால் வங்கதேச அணி 322 என்ற பெரிய இலக்கை 41.3 ஓவரிலேயே அடித்து அசத்தியது.

கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷகிப் 124 ரன்களும், லிட்டன் தாஸ் 94 ரன்களும் குவித்தது அணியை வெற்றிபெறச் செய்தனர். இந்த தொடரில் இரண்டாவது சதத்தை விளாசிய ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.