இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் லீக் போட்டிகள் இந்த வாரத்தோடு முடிவடைகின்றன. அரையிறுதி சுற்றுக்குக்கான அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில் மீதமுள்ள லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று லீட்சில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளுமே நாக்கவுட் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை எனினும் ஆறுதல் வெற்றியைப் பெற ஆப்கானிஸ்தானும், தொடரை வெற்றியோடு முடிக்கும் நோக்கில் வெஸ்ட் இண்டீசும் களம் கண்டன.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ்அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களமிறங்கினர். இதில் கிறிஸ் கெய்ல் 7 ரன்னில் கேட்ச்சாகி வெளியேறினார். அவர் பங்கேற்கும் கடைசி உலகக்கோப்பை போட்டி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அடுத்து இணைந்த இவின் லீவிஸ் மற்றும் ஷாய் ஹோப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அரைசதம் அடித்த இவின் லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய நிகோலஸ் புரான் 58 ரன்களுக்கும் ஜேசன் ஹோல்டர் 45 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது. கடைசியில் பிராத்வெய்ட் 14 ரன்னுடனும், பாபியன் ஆலென் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். மிடில் ஆர்டரில் இறங்கிய கரீபியன் பேட்ஸ்மேன்கள் காட்டிய அதிரடியில் கடைசி பத்து ஓவர்களில் 111 ரன்களைக் குவித்தது அந்த அணி.

சொதப்பிய ஆப்கானிஸ்தான் ஒப்பனர்கள்
பேஸ் பவுலர்கள் அதிகம் உள்ள வெஸ்ட் இண்டீசை முதல் இருபது ஓவர்கள் சமாளித்தாலே மைதானம் ஆப்கானிஸ்தானிற்கு வெற்றியை வழங்கியிருக்கும். ஆனால் கேப்டன் குல்பதின் என்ன அவசரத்தில் வந்தாரோ தெரியவில்லை 5 ரன்னில் அவுட். அடுத்து ஜோடி சேர்ந்த இக்ரம் அலி மற்றும் ரமத் ஷா நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். நிதானம் காட்டிய இருவரும் அரைசதத்தை பூர்த்தி செய்தனர். 62 ரன்னில் ரஹ்மத் வெளியேற, நஜிபுல்லா சாட்ரான் அலியுடன் இணைந்தார். அபாரமாக ஆடிய 86 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதனால் 18 மற்றும் அதற்கு குறைவான வயதில் உலகக்கோப்பை போட்டியில் அரைசதம் எடுத்த வீரர் என்ற சச்சினின்(18 வயது 323 நாட்கள்) 27 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் இக்ரம் அலி (18 வயது 278 நாட்கள்). சச்சின் 1992 உலகக்கோப்பையில் 84 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

அலி அவுட்டான சிறிது நேரத்திலேயே சாட்ரான் 31 ரன்களில் வெளியேறினார். அதன்பின் அஸ்கார் தவிர யாரும் நிலைத்து ஆடவில்லை. முகமது நபி 2 ரன்னிலும், சமியுல்லா ஷின்வாரி 6 ரன்னிலும், அஸ்கார் ஆப்கன் 40 ரன்களிலும், தவ்லத் ஜட்ரன் 1 ரன்னிலும், ரஷித்கான் 9 ரன்னிலும், சையத் ஷிர்ஜத் 25 ரன்னிலும் என அடுத்தடுத்து அவுட்டாகி வெஸ்ட் இண்டீசின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசியில் முஜீப் ரகுமான் மட்டும் 7 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராத்வெய்ட் 4 விக்கெட்டுகளும், கெமார் ரோச் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் கெய்ல் மற்றும் ஒஷானே தாமஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 77 ரன்களை எடுத்த ஷாய் ஹோப்பிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இப்படியாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெளியேறின.