உலகக்கோப்பை தொடரின் 35 வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் இலங்கையும் களம் கண்டன. தொடரைவிட்டு ஏற்கனவே வெளியேறிவிட்ட தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றிக்காக இப்போட்டியில் களமிறங்கியது. இலங்கையைப் பொறுத்தவரை அடுத்துள்ள மூன்று போட்டிகளிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு கணிசமாக உண்டு என்ற நிலையில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டுபிளேசி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து இலங்கையின் துவக்க ஆட்டக்காரர்களான திமுத் கருணரத்னேவும், குசால் பெரேராவும் களமிறங்கினர்.

விக்கேட்டுகள் சரிவு
ககிசோ ரபாடா வீசிய முதல் பந்திலேயே டுபிலேசியிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார் கருணரத்னே. அடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ பெரேராவுடன் கைகோர்த்து ஆட இலங்கை ரசிகர்கள் சற்றே ஆசுவாசமடைந்தனர். ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. இருவரையும் பிரிட்டோரியஸ் அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்தார். அப்போது துவங்கிய இலங்கை அணியின் சரிவை யாராலும் மீட்டெடுக்க முடியவில்லை. சீட்டுக்கட்டுப்போல் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி 203 ரன்களை மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க வீரர்களான பிரிட்டோரியஸ், மாரிஸ் தலா மூன்று விக்கெட்டுகளையும், ககிசோ ராபாடா இரண்டு விக்கெட்டுகளையும், டுமினி மற்றும் பெஹலுவாக்கியோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

எளிமையான இலக்கு
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரரான டீகாக் 15 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். மலிங்காவின் பந்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்ப அணியின் கேப்டன் டிவிலியர்ஸ் உள்ளே வந்தார். அப்போது சேர்ந்த ஆம்லா – டுபிளேசி இணையை இலங்கை வீரர்களால் பிரிக்கவே முடியவில்லை. நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர் இருவரும். இவர்களுடைய சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 37.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டுபிளேசி 96 ரன்களும், ஆம்லா 80 ரன்களும் குவித்தது வெற்றிக்கு வித்திட்டனர். டிவைன் பிரிட்டோரியஸிற்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் இலங்கைக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன. இதில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கும் அணிகள் தோற்றால் இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இவற்றையெல்லாம் மீறி இலங்கை அரையிறுதிக்குள் நுழையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.