உலககோப்பைத் தொடரின் 34 வது லீக் போட்டியில் இந்தியாவும் மேற்கு இந்திய தீவுகளும் களம் கண்டன. அரையிறுதிக்கு மிக அருகில் இருக்கும் இந்திய அணி வாய்ப்பை மேலும் வலுப்படுத்த இப்போட்டியில் ஜெயிக்கவேண்டும். ஆனால் மேற்கு இந்திய தீவுகளுக்கு இது வாழ்வா சாவா போட்டி. இதில் தோற்றால் அரையிறுதிக்கு அந்த அணிக்கு தூரத்தில் இருக்கும் சிறுவாய்ப்பும் பறிபோய்விடும். இப்படியான பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத போட்டியில் இந்தியா 125 ரங்கல் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகளை ஊதித்தள்ளியிருக்கிறது.

ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என இரு அணிகளுமே எதிர்பார்த்தது. ஆனால் இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறத் தொடங்கினர். ஒப்பனர்களாக இறங்கிய ரோஹித்தும் – ராகுலும் துவக்கத்தில் பொறுமையாக ஆடினர். ரோஹித் ஷர்மா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு இன்னிக்கு இருக்கு கச்சேரி என ரசிகர்கள் டிவிக்கு அருகில் வந்து உட்கார்ந்தபோது அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கீமா ரோச்சின் பந்தில் ரோஹித் ஷர்மா கீப்பர் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் பந்து பெட்டில் பட்டதா? பேடில் பட்டதா என்பதை இங்கி பிங்கி பாங்கி போட்டு மூன்றாம் நடுவர் உடனடியாக தீர்வளித்தார். இதன்மூலம் 18 ரன்களுடன் ரோஹித் பெவிலியன் திரும்பினார். அடுத்து ராகுலுடன் கைகோர்த்த கோலி வழக்கம்போல தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அமைதி… அமைதி… அமைதியோ அமைதி என்ற ரீதியில் ஆடிக்கொண்டிருந்த ராகுல் 48 ரன்கள் இருந்த போது ஹோல்டர் வீசிய பந்தில் ஸ்டம்புகள் சிதற அவுட்டானார். அடுத்து தமிழகத்தின் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சென்ற போட்டியைப்போலவே கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு ஏமாற்றம் அளித்தார் ஷங்கர். 14 ரன்களோடு அவர் வெளியேற அடுத்தவந்த கேதார் ஜாதவும் 7 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 140-4 என்ற நிலையில் தோனி களமிறங்கினார். போட்டியின் துவக்கத்தில் 300 ரன்களுக்கு மேலாக இலக்கு இருக்கும் என எதிர்பாத்த ரசிகர்கள் இந்தியா 200 ஐத் தொடுமா என்ற சந்தேகம் பிராதனமாக எழுந்தது. இதனை கோலி-தோனி இணை தகர்த்தது. இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கோலியின் எதிர்பாராத அவுட் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பை கொண்டுவந்தது. 72 ரன்களில் கோலி வெளியேற இந்தியாவின் அதிரடி புயல் பாண்டியா உள்ளே வந்தார்.

தோனியுடன் இணைந்த பாண்டியா சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். லூஸ் பால்களை பவுண்டரிகளாக விரட்டி கடைசி நேர ரன்குவிப்பில் முக்கிய பங்காற்றினார் பாண்டியா. ஆனால் 46 ரன்களோடு பாண்டியா வெளியேற, அடுத்து யாருமே எதிர்பார்க்காத விதமாக ஷமி உள்ளே வந்தார். காட்ரல் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்கில் வெளியேறிய ஷமிக்கு பிறகு குல்தீப் வந்தார். அதுவரை பொறுமைகாத்த தோனி கிளவுஸை இறுக்கி பெரிய ஓவர் ஒன்றிற்கு தயாரானார். உசேன் தாமஸ் வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோரை 268 ஆக மாற்றினார் தோனி. இறுதிவரை அவுட்டாகாமல் இருந்த தோனி 56 ரன்களை எடுத்தார்.
தெறிக்கவிட்ட ஷமி
269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் துவக்க வீரர்களாக கெயிலும், ஹோப்பும் உள்ளே வந்தனர். பேட்டிங்கோ, பவுலிங்கோ வெஸ்ட் இண்டீசை நம்ப முடியாது. திடீரென 300 ரன்களை விக்கெட் இழப்பின்றி அடிக்கும் ஆற்றலும், கெயில் என்ற அரக்கனும் அங்கே மேட்சை எப்போது வேண்டுமென்றாலும் மாற்றிவிடுவார்கள் என எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் இந்திய பவுலர்கள் அதற்கெல்லாம் நேரத்தையே கொடுக்கவில்லை. ஷமி ஆரம்பத்திலேயே கெயிலையும் ஹோப்பையும் பத்திரமாக பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். நிக்கோலஸ் பூரன் மற்றும் அம்ப்ரிஸ் சிறிது நேரம் சமாளித்து அவுட்டானார்கள். அடுத்துவந்த யாரும் சொல்லிக்கும்படியான ரன்களை அடிக்கவில்லை. இதனால் 34.2 வது ஓவரில் மேற்கு இந்திய தீவுகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் சஹால் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பாண்டியா மற்றும் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.