இந்தியர்கள் ஒரு நீண்ட இரவைக் கடந்திருக்கிறார்கள். தங்கள் கண்முன்னே உலகக்கோப்பைக் கனவு பறிபோவதைப் பார்த்திருக்கிறார்கள். இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த இரவின் அந்தகாரம் அனைவரின் மனதிலும் பரவியிருக்கும். தென்னமெரிக்க கண்டத்தில் கால்பந்து எப்படியோ அப்படித்தான் இந்தியாவில் கிரிக்கெட். இங்கே கிரிக்கெட் என்பது மதம். அதனாலேயே இந்த வீழ்ச்சி துயர்மிக்கதாக இருக்கிறது. தோல்வி தீர்மானிக்கப்பட்டதாக இருந்திருந்தால் இத்தனை சோகம் கவிழ்ந்திருக்காது. வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்ற நிலையில் இந்திய பறிகொடுத்த ஒரே விக்கெட் நான்கு வருட இந்தியர்களின் கனவை சுக்கு நூறாக்கியிருக்கிறது. சந்தேகமே இல்லாமல் அது தோனியின் ரன்னவுட்.

இந்தியா 100 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஜடேஜாவுடன் தோனி கைகோர்த்த போது சற்றே நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டார்கள். கிட்டத்தட்ட உலககோப்பை கனவை இழந்திருந்த மக்களை மீண்டும் புதுநம்பிக்கை பாய்ச்சினார்கள் இருவரும். சீட்டுக்கட்டைப்போல் சரிந்த விக்கெட்டுகளுக்குப் பின்னால் இந்தியர்களின் மீதமிருந்த ஒரே நம்பிக்கை இந்த இருவர் மட்டும்தான். தூரத்தில் எட்டமுடியாத இடத்தில் இருந்த இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து பயணித்த இருவரும் கடைசியில் ஆட்டமிழந்தது இந்தியாவை நிலைகுலைய வைத்தது. ஜடேஜா சிக்சருக்கு பந்தை விரட்ட நினைத்து கேட்சான போதும், ரசிகர்கள் தோனியிடம் நம்பிக்கை வைத்தார்கள்.

அவுட்சைட் வந்த அடுத்த பந்தை 70 மீட்டர் சிக்சருக்கு தூக்கி ஆட்டம் இன்னும் இந்தியாவின் கையில் என்ற தோனிக்கு அடுத்தபந்தே அவுட் கொடுக்கப்பட்டது. இந்தியர்களின் இதயத்தில் சுடர்விட்ட கடைசி நம்பிக்கையும் பெவிலியன் நோக்கி திரும்பியது. அதுவரை சாதாரணமாகத் தெரிந்த எண்கள் பின்னர் பிரம்மாண்டமாக உருவெடுத்தன. இந்தியா ஆல் அவுட். நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

தோனியின் அந்த ஒரு ரன்னவுட் மட்டும் இல்லாதிருந்தால் இன்றைய நாள் இந்தியர்களுக்கு கொண்டாட்டத்தின் நாளாக, மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் ஒரு நாளாக இருந்திருக்கும். அத்தனை நெருக்கடியிலிருந்தும் தப்பித்து தனியாளாக முன்னேறியவனின் பேட் கோட்டிற்கு சில அங்குலம் முன் இருக்கும்போதே ஸ்டம்புகள் சிவப்பு விளக்குகளை காட்டிவிட்டன. கிரிக்கெட்டில் அடுத்த 100 வருடங்களுக்கு ஞாபகம் வைத்துக்கொள்ளப்படும் ரன்னவுட்டை மார்டின் கப்தில் செய்து வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டார். கண்கள் முழுவதும் ஏக்கத்தோடும் கண்ணீரோடும் வெளியேறிய ரசிகர்கள் யாரும் இந்திய அணியின் மீது கோபம் கொள்ளவில்லை. பெஞ்சுகளை உடைக்கவில்லை. உருவ பொம்மைகளை எரிக்கவில்லை. ஏனெனில் இந்திய அணி எப்போதோ அதன் கோடானுகோடி ரசிகர்களை வென்றுவிட்டது.