கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது இங்கிலாந்தில் தான் இருக்கிறது. கடந்த மாதம் துவங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த இந்தியா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் கால் பதித்திருக்கின்றன. நாக்கவுட் போட்டியாக நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியா – நியூசிலாந்து முதல் போட்டியிலும், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியிலும் மொத இருக்கின்றன.

இன்று முதல் போட்டி
இந்தியா – நியூசிலாந்து மோதும் முதல் அரையிறுதிப்போட்டி ஓல்ட் டிராபோர்டில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும். அதனால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. சரி இதுவரை இந்தியா உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் எப்படி விளையாடியிருக்கிறது?
அரையிறுதிப்போட்டியில் இந்தியா
இதுவரை 6 முறை உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மூன்று முறை அதில் வெற்றிபெற்றிருக்கிறது. நியூசிலாந்தைப் பொருத்தவரை 7 முறை அரையிறுதிக்கு முன்னேறி அதில் ஒருமுறை மட்டுமே வெற்றிபெற்றிருக்கின்றனர். நடப்பு தொடரில் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய நியூஸி. கடைசியில் சொதப்பியது. பாகிஸ்தானின் ரன்ரேட் குறைவாக இருந்த காரணத்தினால் தப்பித்து ஒருவழியாக அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி. அதே சமயத்தில் இந்திய அணி இங்கிலாந்திடம் நடந்த போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியுடனான போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனால் இந்தியாவின் கை இப்போட்டியில் ஓங்கியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பலமும் பலவீனமும்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 5 சதம் உள்பட 647 ரன்கள் எடுத்து ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். அவர் இன்னும் 27 ரன்கள் எடுத்தால் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த தெண்டுல்கரின் (673 ரன்கள்) சாதனையை முறியடிப்பார். கேப்டன் விராட்கோலி (442 ரன்கள்), தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (360 ரன்கள்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இந்திய அணியின் மிடில் வரிசை மற்றும் பின்கள வரிசை வீரர்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டால் அதிக ரன் குவிக்க முடியும்.
பந்து வீச்சில் பும்ரா (17 விக்கெட்), முகமது ஷமி (14 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (11 விக்கெட்), குல்தீப் யாதவ் (6 விக்கெட்) ஆகியோர் எதிரணிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறுகிறார்கள். டோனி 223 ரன்கள் எடுத்து இருப்பதுடன் விக்கெட் கீப்பிங்கில் முத்திரை பதித்து வருகிறார். ஹர்திக் பாண்ட்யா 194 ரன்கள் மற்றும் 9 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டர் பணியை திறம்பட செய்து வருகிறார்.
நியூசிலாந்து அணியிலும் நீஷம், போல்ட், சவுத்தி ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்திய பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிப்பதைப்பொருத்து வெற்றி தோல்வி அமையும்.

பிளேயிங் லெவன்
கடைசிப் போட்டியில் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டு சஹாலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதேபோல முகமது ஷமிக்கும் ஓய்வு தரப்பட்டது. இந்த இருவரையும் அணிக்குள் எடுத்துவந்தால் பேட்டிங்கில் ஒரு ஆள் குறையும். தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜாவிற்கு பதிலாக இவர்கள் இடம்பெற்றால் மொத்தம் 5 பவுலர்கள் இந்திய அணியில் இடம்பெறுவார்கள். அதே சமயம் நியூசிலாந்து போன்ற அணியுடன் விளையாட தேர்ந்த பேட்டிங் வரிசை வேண்டும் என்பதும் வல்லுனர்களின் கருத்து. அணியில் யார் யாருக்குப்பதிலாக இறங்குகிறார்கள்? இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையுமா? என்பதைப்பொருத்திருந்து பார்ப்போம்.