இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நாக்கவுட் சுற்றுக்குள் நுழையும் அணிகளைத் தேர்வு செய்யும் மிக முக்கிய போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் பெர்மிங்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் கேதார் ஜாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் புவனேஷ்வர் குமார் இடம் பெற்றனர். இதனையடுத்து இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

வங்கதேச கேப்டன் மொர்டாசா வீசிய முதல் ஓவரிலேயே மிட்விக்கெட்டில் சிக்ஸரை தெறிக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ரோஹித். அவரை 9 ரன்னில் அவுட்டாகும் வாய்ப்பு கிடைத்தும் இக்பால் அதனைத் தவறவிட்டார். இதற்கு இக்பால் பலரின் வசைகளை வாங்கிக் கட்டிக்கொண்டார். இந்த வாய்ப்பை ரோஹித் சரியாக பயன்படுத்திக்கொண்டார். அடுத்தமுனையில் ராகுல் பொறுமையே பெருமை என ஆடி ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்தில் ரோஹித்தைப்பார்த்து தைரியமாக ஷாட்களை தேர்ந்தெடுத்தார். இந்த இணை புலிக்குட்டிகளை தடுமாற வைத்தது. அபாரமாக ஆடி நடப்பு உலககோப்பை தொடரில் நான்காவது சதத்தை விளாசிய ரோஹித் சிறிது நேரத்திலேயே அவுட்டானார்.
அணியின் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தபோது கோலி உள்ளே வந்தார். எப்படியும் ஒரு நானூறு என ரசிகர்கள் நினைந்துக்கொண்டிருந்த போது கோலி 26 ரன்களிலும், ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்கோர் ஏற்றத்தில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் நம்பிக்கை தரும் விதமாக ஆடினார். அதிர்ச்சிதரும் விதமாக பாண்டியா டக்கில் வெளியேற தோனி உள்ளே வந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த பண்ட் 48 ரன்களில் அவுட்டாகி தனது அரைசதத்தை தவற விட்டார். அதன்பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைக்கவில்லை. விக்கெட்டுகள் சரியவே இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 314 ரன்கள் குவித்தது. வங்கதேச ஆணி சார்பில் முஸ்தபிசூர் ரகுமான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

315 ரன்களை இலக்காக கொண்டு சவுமியா சர்க்கார் மற்றும் தமீம் இக்பால் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த இணை நிதானம் காட்டினாலும் ரன்களை குவிக்க தவறியது. ஒருபுறம் இந்திய பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். ஷமி வீசிய ஓவரில் தமீம் 22 ரன்களில் போல்டானார். அதன்பின்னர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷகிப் அல் ஹசன் பேட்டிங் செய்ய வந்தார். நல்ல நிலையில் ஆடிக்கொண்டிருந்த சர்க்கார் 33 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் வெளியேறினார். அடுத்துவந்த ரஹீம் 24 ரன்களிலும், லிட்டன் தாஸ் 22 ரன்களுடம் வெளியேறி வங்கதேசத்தின் கனவை தகர்த்தனர்.

ஆனால் போட்டி இன்னும் முடியவில்லை என அறிவுறுத்தும்படி சைபுதீனுடன் கைகோர்த்தார் சபீர். திடீரென ஷமி ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்து இந்திய ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தனர் இருவரும். அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருந்தால் எட்டக்கூடிய இலக்கு தான் என்ற நிலை. ஓவருக்கு ஒரு பவுண்டரி இவர்களின் பேட்டில் இருந்து பறந்தது. இந்தியாவின் ஆபத்பாண்டவன் பும்ராவை அழைத்தார் கேப்டன் கோலி. சபீர் காலி. 36 ரன்களில் பெவிலியன் திரும்ப இடையில் யாரோ வந்து அவுட்டானார்கள். ஆமாம் அது, மொர்டாசா. ஏனெனில் அவுட்டான வேகம் அப்படி. ஆனால் மற்றொரு முனையில் சைபுதீன் வெளுத்துக்கொண்டு தான் இருந்தார். ஆனால் அவருடன் இணைந்த ரூபேலின் ஸ்டம்புகளை பும்ரா பதம் பார்த்தார். அடுத்த பந்தில் முஸ்தபிசூர் ரஹ்மானிற்கு யார்க்கர் என்றால் என்ன என பாடம் எடுத்தார் பும்ரா. தட்சணையாக அவர் விக்கெட்டை வாங்கிக்கொண்டார். இதன்மூலம் வங்கதேசத்தின் சேசிங்கிற்கு மங்களம் பாடி முடித்தார் பும்ரா. சைபுதீன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் குவித்திருந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். புலிக்குட்டிகளை பூனைக்குட்டிகளாக்கிய ரோஹித் ஷர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.