நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து நியூசிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறது.

ஆகாயத்தில் இருந்து வந்த பந்து
போட்டி துவங்குவதற்கு முன்பு இங்கிலாந்தின் ரெட் ஈவில்ஸ் எனப்படும் படைப்பிரிவை சேர்ந்தவர்கள் வானத்திலிருந்து பாரசூட் வழியாக மைதானத்திற்குள் இறங்கினர். இறுதிப்போட்டிக்கான பந்தை அவர்கள் தான் நடுவரிடம் வழங்கினர். இதனைப்பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
நியூசிலாந்து முதல் பேட்டிங்
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹென்றி நிக்கோல்ஸ், மார்ட்டின் கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்ட்டின் கப்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹென்றி நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். குறிப்பாக கேன் வில்லியம்சன் தொடக்கத்தில் 24 பந்தில் நான்கு ரன்களே அடித்திருந்தார். அதன்பின் நேரம் செல்ல செல்ல இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட்டாக நிக்கோலசும் 55 ரன்னில் வெளியேறினார். அதற்கடுத்து வந்த யாரும் நிலைத்து ஆடவில்லை. இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
242 ரன்கள் எடுத்தால் கோப்பை
இங்கிலாந்து அணியின் ஒப்பனர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி கோப்பையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. அரைசதம் கண்ட பட்லர் 59 ரன்களில் அவுட்டாக மற்ற வீரர்கள் யாரும் கிரீசில் நிலைக்கவில்லை. ஆனால் அடுத்த முனையில் நின்றிருந்த ஸ்டோக்ஸ் அதிரடி காட்டினார். இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 தேவை பட்ட நிலையில் இங்கிலாந்து அணியால் 14 ரன்கள் எடுத்து 241 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் போட்டி டை ஆனது.

சூப்பர் ஓவர்
போட்டி டை ஆனதைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் முறை அறிவிக்கப்பட்டது. அதன்படி இங்கிலாந்து அணியின் சார்பில் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் பேட்டிங் செய்ய வந்தனர். போல்ட் வீசிய இந்த ஓவரில் இங்கிலாந்து 15 ரன்களை எடுத்தது. அதேபோல் நியூசிலாந்து அணியில் களமிறங்கிய கப்தில் மற்றும் நீஷம் ஆகியோர் அதே 15 ரன்கள் எடுக்க சூப்பர் ஓவரும் டை ஆனது. ஆனால் அதிக பவுண்டரிகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் இங்கிலாந்து 22 பவுண்டரி அடித்திருந்தது. நியூசிலாந்து 14 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்ததால் இங்கிலாந்து தனது 44 வருட அவப்பெயரை நீக்கிக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. ஆட்டநாயகனாக ஸ்டோக்சும் தொடர் நாயகனாக வில்லியம்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.