இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டம் லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணியில் இரு மாற்றமாக திரிமன்னே, ஸ்ரீவர்தனா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அவிஷ்கா பெர்னாண்டோ, ஜீவன் மென்டிஸ் இடம் பிடித்தனர். இதனையடுத்து இலங்கை அணியின் கருணா ரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இலங்கை அணிக்கு தொடக்கத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கருணா ரத்னே 1 ரன்னிலும், குசால் பெரேரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ அதிரடி காட்டினார். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பவுலராக பார்க்கப்படும் ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் பறக்கவிட்டார். அவரது இன்னொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் விளாசினார். அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த அவிஷ்கா பெர்னாண்டோ 49 ரன்னில் இருக்கும்போது அப்பர்கட் ஆட முயன்று விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் பின்னர் குசல் மென்டிசும், முன்னாள் கேப்டன் மேத்யூசும் கைகோர்த்தனர்.
இதன்பின்னர் இலங்கை பேட்டிங்கை மொயின் அலி மற்றும் ஆதில் ரஷித் கவனித்துக்கொண்டனர். ரஷித்தின் ஓவரில் தடுமாறிக்கொண்டிருந்த குசல் மென்டிஸ் அவுட்டாக, அடுத்து வந்த ஜீவன் மென்டிசும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். ஆனால் கடைசிவரை மேத்யூஸ் நிலத்து ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்த மேத்யூஸ் 85 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
எளிமையான இலக்கு
நடப்பு உலககோப்பை தொடரில் இங்கிலாந்து மிகவும் வலிமை வாய்ந்த அணியாக இருக்கிறது. ஆகையால் இந்த இலக்கெல்லாம் ஜிலேபி மாதிரி இருக்கும் அவர்களுக்கு என நினைத்தவர்களுக்கேல்லாம் முதல் ஓவரிலேயே பதில் சொன்னார் மலிங்கா. ஓவரின் இரண்டாவது பந்திலேயே பேர்ஸ்டோவை பெவிலியனுக்கு அனுப்பி மாஸ் காட்டினார் மலிங்கா. சிறிது நேரத்திலேயே ஜேம்ஸ் வின்சையும் கூட அனுப்பிவைத்து ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்றினார் மலிங்கா. அடுத்துவந்த கேப்டன் மார்கன் 21 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜோ ரூட் (57), ஜோஸ் பட்லர் (10) ஆகிய அபாயகரமான பேட்ஸ்மேன்களையும் மலிங்கா வீழ்த்த ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதன் பிறகு இலங்கை வெற்றியை தங்களது எல்லைக்குள் இழுத்துவந்தது. அடுத்த 3 விக்கெட்டுகளை தனஞ்ஜெயா டி சில்வா வரிசையாக வெளியேற்றினார். இதனால் இலங்கை வீரர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். கடைசி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மட்டும் போராடினார். ஆனால் அவருக்கு சரியான கூட்டணி கிடைக்கவில்லை. 57 ரன்னில் எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த பென் ஸ்டோக்ஸ் உதனா ஓவரில் 2 சிக்சரும், பிரதீப்பின் பந்து வீச்சில் 2 பவுண்டரியும் துரத்தியடித்து எதிரணியை பயமுறுத்தினார்.

ஆனால் மறுமுனையில் கடைசி விக்கெட்டாக நின்ற மார்க்வுட் ரன்னின்றி கேட்ச் ஆக, இலங்கை அணி வெற்றியை சொந்தமாக்கியது. முடிவில் இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களுடன் (89 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 4 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றிய மலிங்கா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.