உலகக்கோப்பை தொடரின் 32வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கோடு இரு அணிகளும் களம் கண்டன. உலகக்கோப்பை வரலாற்றில் 27 வருடங்களாக ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியதே இல்லை. இந்த மோசமான ரெக்கார்டை முறியடிக்க இங்கிலாந்து போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகம் இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்கவில்லை ஆஸ்திரேலியாவின் பவுலர்கலான மிட்ச்சல் ஸ்டார்க்கும்,பெஹரண்டாபும். இந்தப்போட்டியிலும் ஆஸியே வெற்றிபெற்று சாதனையை தக்கவைத்துக்கொண்டது. மேலும் அரையிறுதி சுற்றுக்குள்ளும் நுழைந்துவிட்டது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸி. சார்பில் துவக்க வீரர்களாக பின்ச் மற்றும் வார்னர் களமிறங்கினர்.

davidwarner aaronfinch odi
Credit:India Today

நிதான ஆட்டம்

நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஓப்பனிங் இணை இந்த இவர்கள் தான். இவர்களின் அனுபவமும் அதிரடியும் எதிரணிகளை மிரளச்செயகிறது. நேற்றைய போட்டியிலும் இந்த இணை ஆஸி.க்கு சிறப்பான துவக்கத்தை அளித்தது. இந்த தொடரில் மூன்றாவது முறையாக 100 ரன் பார்ட்னர்ஷிப்களை கடந்திருக்கிறது. வார்னர் 53 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் வந்த கவாஜா பொறுமை காட்டினார். மறுமுனையில் பின்ச் அதிரடியாக ஆடிவந்தார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்தனர். காவாஜா 23 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்தில் போல்ட் ஆனார். பின்னர் பின்ச்-உடன் ஸ்மித் கைகோர்த்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை இவர்கள் இருவரும் சொல்லி அடித்தனர். அபாரமாக ஆடிய பின்ச் சதமடித்தார். இந்த தொடரில் அவரடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். ஆர்ச்சர் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்த பின்ச் பெவிலியன் திரும்ப ஆஸ்திரேலியாவின் ரன்குவிப்பு வேகம் குறையத் துவங்கியது.

Aaron-Finch-against-England-in-the-ICC-Cricket-World-Cup-2019
Credit:Falken Sports

ஸ்மித் 36 ரன்களும் அலெக்ஸ் கேரி 38 ரன்களும் எடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. இதனால் ஆஸி. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 285 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஆர்ச்சர், மொயின் அலி, ஸ்டோக்ஸ் மற்றும் வுட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதிர்ச்சியளித்த வின்சி 

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ மற்றும் வின்ஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஓவரின் இரண்டாவது பந்திலேயே வின்ஸ் டக்கில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இங்கிலாந்தின் தோல்விக்கு அப்போதே பிள்ளையார்சுழி போடப்பட்டுவிட்டது. அதன்பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் கேப்டன் இயான் மார்கன் ஆகிய இருவரையும் வந்தவேகத்திலேயே டக்கவுட்டிற்கு அனுப்பிவைத்தார் மிட்ச்சல் ஸ்டார்க். சிறிது நேரத்திலேயே பேர்ஸ்டோ பெஹரன்டாப் பந்தில் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.

Australias-Mitchell-Starc-left-celebrates-taking-the-wicket-of-Englands-captain-AP
Credit:Times Now

60 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்தை மீட்க வந்தார்கள் ஸ்டோக்சும் பட்லரும். நிதானமாக ஆடி 71 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த இந்த இணையைப் பிரித்தார் மார்க்கஸ் ஸ்டோய்னஸ். பட்லர் 25 வெளியேற, வோக்ஸ் உள்ளே வந்தார். இந்த இணையும் ஆஸி. வீரர்களுக்கு சவாலாக அமைந்தது. ஆட்டத்தில் அதிரடியைக் கூட்டிய இவர்கள் இங்கிலாந்து ரசிகர்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்தனர். ஆனால் ஸ்டார்க் வீசிய அற்புதமான யார்க்கரில் ஸ்டம்புகள் சிதற 89 ரன்களில் வெளியேறினார் ஸ்டோக்ஸ்.

starc
Credit: India Today

அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் போட்டியை 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதில் ஆஸ்திரேலிய அணி சார்பில் பெஹன்ட்ராப் 5 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 4 மற்றும் ஸ்டோய்னஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். சதமடித்து அசத்திய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.