ருத்ரதாண்டவம் ஆடிய இயான் மார்கன் – ஆப்கானிஸ்தான் பரிதாப தோல்வி

Date:

நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்த உலகக்கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வலிமைவாய்ந்த இங்கிலாந்து அணியை கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என இணையம் முழுவதும் பேசப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நடக்க வாய்ப்பில்லை என்று எதுவும் கிடையாது. டாசை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

cricket-wc-2019-eng-wis
Credit:Hindustan Times

ஆப்கானிஸ்தான் தரப்பில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் மொயின் அலி அணியில் சேர்க்கப்பட்டனர். முதல் இன்னிங்க்சைத் துவங்கிய இங்கிலாந்து வீரர்களான வின்சி மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி காட்டிய இந்த இணையை பிரித்தார் தவ்லத் சாட்ரான். வின்சி 26 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்தார் ஜோ ரூட். பெயருக்கு தகுந்தாற்போல் வேர் போல நிலைத்து ஆடினார். மற்றொரு முனையில் இருந்த பேர்ஸ்டோ நாலாபுறமும் பந்தை சிதறடித்தார்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நயிப் அந்த அணியின் மிஸ்டரி ஸ்பின்னரான ரஷித் கானிடம் பந்தைக் கொடுத்தார். மிஸ்டரி பந்திலும் ஹிஸ்டரி படைப்போம் என இங்கிலாந்து வீரர்கள் சூடமேற்றி சத்தியம் செய்திருந்தார்கள் போலும். தன் கரியரிலேயே இவ்வளவு ரன்களை ரஷித் கான் கொடுத்திருக்க மாட்டார். அவர் பந்தை இப்படி அடித்தவர்கள் யாரும் இல்லை. 9 ஓவர்கள் வீசிய ரஷித் 110 ரன்களை வாரி வழங்கினார். இதெல்லாம் ட்ரைலர் தான் கண்ணா.. மெய்ன் பிக்சர் இனிமே தான் என பேர்ஸ்டோ அவுட்டான போது சொல்லியிருப்பார் என்று நினைக்க தோன்றும் அளவுக்கு இருந்தது மார்கனின் வருகை.

morgan
Credit:MSN

மரண அடி மார்கன்

ஒரு சின்ன டீம் மாட்டுனா இப்படியா செய்யுறது என இங்கிலாந்து ரசிகர்களே ஆப்கானிஸ்தானை பார்த்து பரிதாபப்படும் நிலை வரும்வரை மரண அடி அடித்தார் மார்கன். பேஸ் பவுலரா சிக்ஸர், ஸ்பின்னரா அப்போ கண்டிப்பா சிக்ஸர் என பேட்டை அனாயாசமாக சுழற்றினார் மார்கன். 71 பந்துகளை சந்தித்து 148 ரன்களை விளாசித்தள்ளினார். இதில் 17 சிக்சர்களும் அடக்கம். இதன்மூலம் ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் இயான் மார்கன். இதற்கு முன்னர் ரோஹித் ஷர்மா அடித்த 16 சிக்சர்களே உலக சாதனையாக இருந்தது. ஆப்கானிஸ்தான் பவுலர்களை அடித்து துவைத்து காயப்போட்டுவிட்டு தான் பெவிலியன் போனார் மார்கன். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடியால் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 397 ரன்களைக் குவித்தது.

உறுதியான தோல்வி

சேஸிங் என்பது எப்போதும் மனவலிமை சார்ந்தது. இங்கிலாந்திற்கு எதிராக அதுவும் 398 ரன்களை எடுப்பது பகுஜன் சமாஜ்வாதி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதை விட கடினம். இருந்தாலும் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடியே ஆகவேண்டும் என்ற விதி இருந்ததால் ஆப்கானிஸ்தான் ஓப்பனிங் வீரர்கள் களத்திற்கு வந்தனர். நூர் அலி சாட்ரான் டக்கில் வெளியேறினார். அடுத்துவந்த ரஹமத் ஷா மற்றும் கேப்டன் குல்பதின் நயிப் பொறுமையாக ஆடினர். இங்கிலாந்தை 50 ஓவர் வீசச்செய்துவிடவேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு இருந்தது போல. ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் அதற்கெல்லாம் அவகாசமே அளிக்கவில்லை. நயிப் 37 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த அஷ்மதுல்லா ஷஷேதி சிறப்பாக நிலைமையை சமாளித்தார். பாட்னர்ஷிப்பை உருவாக்கிக்கொண்டிருந்த ரஹமத்-ஷஷேதி இணையை பிரித்துவிட்டார் ஆதில் ரஷித்.

eng-v-afg-1-784x441
Credit:Latestly

46 ரன்களில் ரஹமத் வெளியேறினார். பின்னர் ஷஷேதி உடன் கைகோர்த்தவர் அஸ்கார் ஆப்கன். 94 ரன்களை குவித்த இந்த இணை அணியின் ஸ்கோர் 198 ஆக இருந்தபோது பிரிந்தது. ஆப்கன் 44 ரன்களிலும், ஷஷேதி 77 ரன்களிலும் வெளியேற அடுத்துவந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 50 ஓவர் முடிவில் அந்த அணியால் 247 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆப்கான் பவுலர்களை பந்தாடிய இயான் மார்கனுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!