உலககோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நோக்கில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சீஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி ஜேசன் ராய் மற்றும் ஜன்னி போர்ஸ்டோ துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ அபார துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். ராய் 60, பேர்ஸ்டோ 106 ரன்கள் எடுத்தனர். பின்னர் ரூட் பேர்ஸ்டோ உடன் இணைந்தார். ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த பேர்ஸ்டோ தொடர்ந்து இரண்டாவது உலகக்கோப்பை போட்டியில் சதம் அடித்தார். அதன்பின்னர் மார்கன் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் கிரீசில் வெகுநேரம் நிலைக்கவில்லை. நியூசிலாந்து அணி கடைசி 20 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியது. அதை சமாளித்து ரன் குவித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் மட்டுமே எடுத்தது. துவக்கத்தில் 350 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும் நியூஸி. பவுலர்கள் ஆட்டத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கடின இலக்கு
306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து துவக்க வீரர்களான நிக்கோலஸ் மற்றும் கப்தில் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே நிக்கோலஸ் டக்கில் வெளியேற, கப்தில் 8 ரன்களுக்கு தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த டெய்லர் மற்றும் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பத்து ஓவர்கள் நிலைத்த இந்த இணை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் இங்கிலாந்தின் பக்கம் ஆட்டம் திரும்பியது. அதற்கடுத்துவந்த நியூஸி பேட்ஸ்மேன்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையைக்கட்டினர். லாதம் மட்டும் தனியாக போரடி 57 ரன்களில் எடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 45 ஓவர்களுக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி போட்டியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் வுட் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். சதமடித்த பேர்ஸ்டோவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இங்கிலாந்தின் இந்த வெற்றிமூலம் அவரது அரையிறுதி கனவு நிறைவேறியுள்ளது. நியூசிலாந்து அணியும் கிட்டத்தட்ட உள்ளே வந்துவிட்டது. இதில் பாகிஸ்தான் அணியின் நிலைமைதான் மிக மோசம். அடுத்து வர இருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் பாகிஸ்தான் உள்ளே வரலாம். இதெல்லாம் நடக்கிற கதையா என்கிறீர்களா?