உலககோப்பைத் தொடரின் 27 வது லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து ஆஸ்திரேலியா களம்கண்டது. வங்கதேசத்தின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் போட்டி என்பதால் இப்போட்டி இரு அணி ரசிகர்களாலும் பரபரப்பாக பார்க்கப்பட்டது. நாட்டிங்காம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் வழக்கம் போல பின்ச் மற்றும் வார்னர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த இருவரும் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடி வந்தனர். லூஸ் பால்களை மட்டும் குறிவைத்து வெளுத்தனர் இருவரும். சிறப்பாக ஆடிவந்த வார்னர் தனது அரைசதத்தை கடந்தார். அதன் பின்னர் அதிரடியை காட்டிய பின்ச் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. அரைசதத்தை கடந்த பின்ச் 51 ரன்களில் இருந்த போது சவுமியா சர்க்கார் வீசிய பந்தில் ரூபெல் உசேனிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் வார்னருடன் ஜோடி சேர்ந்த உஸ்மான் குவாஜா வங்கதேச பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தார். அபாரமாக விளையாடிய வார்னர், உலகக் கோப்பையில் 2-வது முறையாக சதம் விளாசி அசத்தினார். அத்துடன் ஒருநாள் அரங்கில் தனது 16-வது சதத்தை பூர்த்தி செய்த வார்னர் 147 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸர், 14 பவுண்டரிகள் விளாசி 166 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். உஸ்மான் குவாஜா 89 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். 49-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக தடைபட்டது. பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது. வங்கதேச தரப்பில் சௌமியா சர்கார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வெந்த தேசம்
382 ரன்கள் அதுவும் வங்கதேசம்? அடபோங்கப்பா என்று தான் ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர். வங்கதேச ஒப்பனர்களான சவுமியா சர்க்கார் மற்றும் தமிம் இக்பால் இணை பெரிதாக சோபிக்கவில்லை. சர்க்கார் 10 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். ஆனால் அடுத்துவந்த ஷகிப் நிலைமையை சற்றே சமாளித்தார். ஷகிப் – தமிம் ஜோடி நிலைத்து ஆடி ரன்களை குவித்து வந்தது. சிறப்பாக ஆடிய தமீம் தனது அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷகீப் அல் ஹாசன் 41 ரன்களில் ஸ்டைனிஸ் பந்தில் வார்னரிடம் கேட்ச் ஆனார். அதனைத் தொடர்ந்து அந்த அணியின் விக்கெட் கீப்பரான ரஹீம் களமிறங்கினார். மறுமுனையில் தமீம் இக்பால் 68 ரன்களில் இருந்த போது ஸ்டார்க் பந்தில் போல்ட் ஆனார். இதனால் இந்த அணிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து வந்த லிடன் தாஸ் (20) ஜாம்பா சுழலில் சிக்கினார். பின் முஷ்பிகுருடன் இணைந்த மகமதுல்லா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த இணை ஆஸ்திரேலிய பவுலிங்கை பதம் பார்த்தது. கடைசி 5 ஓவர்களில் வங்கதேச அணி வெற்றி பெறுவதற்கு78 ரன்கள் தேவைப்பட்டது. பேட்ஸ்மேன்கள் இருவரும் செட் ஆகியிருந்ததால் அப்போதும் வங்கதேசத்தின் வெற்றிவாய்ப்பு தூரத்தில் பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அதில் மண்ணள்ளிப்போட்டார் ஆஸ்திரேலிய வீரர் குல்டர் நைல். மகமதுல்லா மற்றும் சபீர் அகமதை அடுத்தது அவுட்டாக்கி வெற்றியை ஆஸி. பக்கம் இழுத்துவந்தார் நைல்.

அதன் பின்னர் களமிறங்கிய எந்த வீரரும் ஆஸி. பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரஹீம் தனது ஏழாவது சதத்தினை பூர்த்தி செய்தார். இருந்தும் இவரால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 333 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் போட்டியை ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக வார்னர் தேர்ந்தெடுக்கபட்டார்.