உலககோப்பை தொடரின் 31 வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது வங்கதேசம். இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை இழந்திருக்கும் நிலையில் இப்போட்டி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்வதற்காக இரு அணிகளுமே தீவிரம் காட்டின. ஈரப்பதம் அதிகமிருந்ததால் 10 நிமிடம் கழித்து டாஸ் போடப்பட்டது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

வங்கதேசம் பேட்டிங்
வங்கதேச அணிக்கு லிடன் தாஸ் (16), தமீம் இக்பால் (36) ஆகியோர் சுமாரான துவக்கம் அளித்தனர். அதற்கடுத்து களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் நிலைத்து ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஆடுகளம் சுழற்பந்திற்கு சாதகமாக இருந்தபோதிலும் இந்த இணை சிறப்பாக விளையாடியது. ஷகிப் அல் ஹசன் அரைசதம் எடுத்து, நடப்பு உலககோப்பை தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். அரைசதத்தோடு ஷகிப் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த சவுமியா சர்கார் (3) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். பின் வந்த மகமதுல்லா (27) ஓரளவு கைகொடுத்து அவுட்டானார்.
விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் முஷ்பிகுர் ரஹீம் சிறப்பாக ஆடி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவருக்கு மொஷாதீக் சரியான பார்ட்னராக அமைய இறுதிக்கட்டத்தில் அந்த அணி துரிதமாக ரன்களை சேர்த்தது. அதிரடி காட்டிய ரஹீம் 83 ரன்களும் மொஷாதீக் 35 ரன்களும் எடுத்து அவுட்டாக வங்கதேசம் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்தது. அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜீப் உர் ரஹ்மான் அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றினார்.
ஆப்கானிஸ்தான் திணறல்
இதையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரஹமத் ஷா, குல்பதின் நைப் களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் அதிரடி காட்டிய இந்த இணையில் ரஹமத் ஷா 24 ரன்னில் ஷகிப் அல் ஹசன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய ஷஹிடி 11 ரன்னில் மொஷடக் ஹசைன் பந்தில் அவுட் ஆக, அவரை தொடர்ந்து களம் இறங்கிய அஸ்கர் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் குல்புதின் நைப் 47 ரன்னில் ஷகிப் அல் ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடரந்து களம் இறங்கிய முகமது நபி அதிர்ச்சி அளிக்கும் விதமாக டக்அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து அஸ்கரும் 20 ரன்னில் ஷகிப் அல் ஹசன் சுழலில் சிக்கினார்.

அடுத்து பேட்டிங் செய்ய வந்த சன்வாரி மட்டும் 49 ரன்கள் எடுத்தார். அவருக்கு வேறு யாரும் பார்ட்னர்ஷிப் கொடுக்க முன்வராததால் ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 200 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் வங்கதேசம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 5 விக்கெட்டுகள் மற்றும் அரைசதம் அடித்த ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.