நடப்பு உலகக்கோப்பைத் தொடரின் மிக முக்கியமான ஆட்டமான இந்தியா – இங்கிலாந்து போட்டி நேற்று பெர்மிங்கமில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிராகாசிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தியா தோற்று மெயினையே ஆப் செய்துவிட்டது. இதனால் இங்கிலாந்து தரவரிசைப்பட்டியலில் நான்காம் இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்தின் இந்த வெற்றி பாக். மற்றும் வங்கதேச அணிகளை உலககோப்பை தொடரை விட்டே வெளியேற்றியிருக்கிறது.

முன்னதாக போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஜய் சங்கருக்குப் பதிலாக அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்டிற்கு இப்போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். முதல் விக்கெட் பாட்னர்ஷிப்பிற்கு இந்த இணை 160 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவின் பந்தில் ராய் 66 ரன்களில் வெளியேறினாலும் அந்த அணிக்கு சிறந்த துவக்கத்தை கொடுத்தார். பின்னர் பேர்ஸ்டோவும் ஜோ ரூட்டும் கைகோர்த்தனர். சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ சதமடித்தார். இவரது விக்கெட்டை ஷமி எடுத்து அசத்தினார். கிரீசுக்கு வந்த மார்கன் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் வந்தது முதலே இந்திய பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். மறுமுனையில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த ரூட் 44 ரன்களில் நடையைக்கட்டினார். இதனால் அந்த அணியின் ரன்குவிப்பு வேகம் குறைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களைக் குவித்தது.
இமாலய இலக்கு
338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். கேஎல் ராகுல் டக்கில் வெளியேறினார். இதன்பின்னர் கோலி – ரோஹித் ஜோடி நிதானமாக ஆடியது. இது இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதமாக இருந்தாலும் கோலியின் அவுட் (66) அணியின் சரிவைத் துவங்கி வைத்தது. தொடர்ந்து தனது முதல் உலககோப்பை போட்டியில் பேட்டிங் செய்ய பண்ட் வந்தார். மறுமுனையில் நிதானம் காட்டிய ரோஹித் இந்த தொடரில் மூன்றாவது சதம் எடுத்தார். ஆனால் சதமடித்த சிறிது நேரத்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். பாண்டியாவும் – பண்டும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். 32 ரன்களில் பண்ட் கேட்ச் ஆகி வெளியேற, தோனி உள்ளே வந்தார். இந்த இணை களத்தில் இருக்கும்வரை இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. பாண்டியா அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். ஒருபுறம் தேவைப்படும் ரன் ரேட் பத்தை நெருங்கியது.

ஆனால் பாண்டியா 45 ரன்னில் இருந்தபோது வின்சியிடம் கேட்ச் ஆகி வெளியேறவே ஆட்டம் இங்கிலாந்தின் கைவசம் போனது. தோனியும் எந்தவித பரபரப்பும் காட்டாமல் ஆடி ரசிகர்களை கடுப்பேற்றினார். வந்த கேதார் ஜாதவ் சிங்கிள் எடுத்தால் போதும் என்ற மன நிலையில் ஆட இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 31 ரங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்தப்போட்டியில் தோற்றாலும் இந்தியாவிற்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் எளிதாக அரையிறுதி சுற்றுக்குள் இந்தியா நுழையும்.