சந்தேகமேயில்லாமல், ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளில் பாஜக சந்திக்கும் மிகப்பெரும் நெருக்கடி சீனா திட்டமிட்டு நடத்திய இந்த கல்வான் பள்ளத்தாக்கு (GALWAN VALLEY) தாக்குதல்தான்.
ஏன் இந்த திடீர் தாக்குதல்? 20 இந்திய வீரர்களின் உயிர் தியாகத்திற்கு பிரதமர் மோடியின் மவுனம் எப்படி பதிலாகும்? என்ன செய்யப் போகிறது இந்திய அரசாங்கம்? சீன இறக்குமதிகளைப் புறக்கணிக்கலாமா? சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவை கூட்டு சேர்க்கலாமா? அனைத்து இந்தியர்களையும் கடந்த ஒரு வாரமாக சூழ்ந்துள்ள கேள்விகள் இவைதான்.

இந்நிலையில் ஜூன் 29, 2020 அன்று டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு.
ஏன் இந்த கோபம்?
ஆசியாவைப் பொறுத்தவரை ஒருநாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பிறநாடுகள் தலையிடக்கூடாது என்பது இப்போதுவரை ஆசிய நாடுகள் கடைபிடிக்கும் விதியாகும். ஆனால் மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை மனித உரிமைகள் என்பன எல்லாவற்றுக்கும் மேலானவை. எங்கெல்லாம் இவ்வுரிமைகள் மீறப்படுகின்றனவோ அங்கெல்லாம் மேற்கிலிருந்து கண்டன அறிக்கைகள் பறக்கும். சீனாவின் சின்சியாங் (Xinxiang) முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் கம்யூனிச திணிப்பு பற்றியோ, ஹாங்காங் அதிகார மீறல்கள் பற்றியோ, தென் சீனக் கடல் எல்லை விவகாரம் பற்றியோ இதுவரை இந்தியா சீனாவிற்கு எதிராக எக்கருத்தும் தெரிவித்ததில்லை. இங்கே தைவான் விவகாரம் மட்டும் விதிவிலக்கு. அப்படியிருக்க இந்தியாவின் மீது சீன அதிபரின் இந்த கோபம் எதற்கு?

“ஊகான்-மாமல்லபுரம் ஆகிய இரண்டு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பிற்கும் பிறகு இருநாட்டு உறவில் இப்படியொரு சறுக்கல்”.
பூர்வ ஜென்மப் பகை
அமெரிக்காவின் தலைமையில் மேற்கத்திய விதிகள் அடங்கிய சர்வதேச ஐ.நா. கூட்டமைப்பை, சீனாவின் தலைமையில் சீன கம்யூனிச விதிகளால் நிரப்புவதே கம்யூனிச சீனாவின் குறிக்கோளாகும். இதை மிகவும் தாமதமாகப் புரிந்துகொண்ட அமெரிக்கா சீனாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டது. வறுமை ஒழிப்பு, சமத்துவம், பொருளாதார வசதி இதுதானே மக்களுக்குத் தேவையான சஞ்சீவி மருந்து? அதைத்தான் செய்கிறோம். ஆனால் அதற்கு சர்வாதிகாரச் சிகிச்சையே சரி என்பார்கள் சீனர்கள். ஆசியாவிற்கு மக்களாட்சி பொருந்தாது என்பது அவர்களின் எண்ணம்.
Also Read: அணு ஆயுத போர் ஏற்பட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் தெரியுமா?
இதற்கு முற்றிலும் எதிராக நிற்பது இந்தியா. ஆம், மக்களாட்சி இந்தியா. நம்முடைய அரசியலைமைப்பின் நோக்கமும் இதுதான். சீனாவிற்கு மாற்றாக ஆசியாவில் ஒரு சர்வ வல்லமை பொருந்திய நாடாக அனைவரும் பார்ப்பது இந்தியாவைத்தான். எனவே சீனாவின் தற்போதைய கோபம் பூர்வ ஜென்மப் பகையாகும்.

கொரோனா வைரஸ் உண்டாக்கிய அவப்பெயரைப் திசை திருப்ப இந்தியாவை தேர்வு செய்தது சீனா. வலிமையான நாட்டுக்கு வலிமையான ராணுவத்துடன் பாதுகாப்பான எல்லையும் முக்கியம். சீனாவின் கல்வான் உரிமை கோரல் இத்தகையது தான். கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு உரிமை பறிக்கப்பட்டபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து இங்கே நினைவு கூறத்தக்கது, “அக்சய் சின்னை (AKSAI CHIN) இந்தியா மீட்டெடுக்கும்” என்பதே அது. அக்சய் சின் தற்போது சீன கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு உள்துறை அமைச்சரின் இந்த கருத்து நிச்சயம் சீனாவால் கவனிக்கப்படாமல் போகாது.
இந்தியாவிற்கு செக்
சீனாவை கலங்கவைத்த 8 இந்திய நடவடிக்கைகள் இவை தான்…
- அதிகரிக்கும் இந்திய-அமெரிக்கா உறவு
- BRI-க்கு இந்தியாவின் எதிர்ப்பு
- இந்தியா உரிமை கோரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் அரபிக்கடலில் நுழைவதற்காக சீனா கொண்டுவரும் CPEC முதலீட்டுக்கு இந்தியாவின் எதிர்ப்பு
- எல்லை விரிந்த லடாக் யூனியன் பிரதேச அறிவிப்பு
- இந்தியப் பங்குச்சந்தையில் சீனாவிற்கு முட்டுகட்டை இட்டது
- QUAD எனப்படும் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளின் இந்திய-பசிபிக் பெருங்கடல் பாதுகாப்பு கூட்டமைப்பு
- தைவானின் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்திய MP-க்கள் பங்கேற்றது
- லடாக்கில் இந்தியாவின் பாதுகாப்பு கட்டுமானம்.
என சீனாவை கலங்கவைக்கும் 8 நடவடிக்கைகள் உட்பட இந்திய நடவடிக்கைகள் ஏராளம்.
Also Read: மூன்றாம் உலகப் போர் வந்தால் அதற்கு இந்தக் கடல் தான் காரணமாக இருக்கும்!
எனவே இந்தியாவை, சீனாவிற்கு மாற்றாக நினைக்கும் பிற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் சீனா சொல்வது இதுதான். “என்கிட்ட மோதாதே” ஆசியாவில் இந்தியாவின் நட்பு நாடுகளான நேபாளம், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவை தனிமைப்படுத்துவதன் மூலம் நம்முடைய வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் சீனா செக் வைத்துள்ளது.
Also Read: 1971 போரில் பாகிஸ்தானை ஏன் இந்தியா எதிர்த்தது தெரியுமா?
பாகிஸ்தானை ஒரு பொருட்டாக இந்தியர்களும் நம் அரசாங்கமும் ஒருபோதும் நினைத்ததில்லை. அதே மனப்பாங்கில் சீனாவை நாம் எதிர்கொள்ள முடியாது. நம்முடைய ராணுவம் இருமுனைப் போர்களை நினைவில் கொண்டே மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் சீனாவுடனான இந்தியப் போர் என்பது ஆசியாவுக்கே அபத்தமாகும். மேலும், நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசை தாக்க பாஜக விடம் உள்ள ஒரே ஆயுதம் 1962 போர்தான். அதே போல இந்துத்வா கொள்கையும் எதிர்கால தாக்குதலுக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதில் மோடி அரசாங்கம் மிக கவனமாக இருக்கிறது.
சீனாவின் செய்தி நமக்கு புரிந்தது. ஆனால் சீனாவுக்கும் சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை நோக்கும் பிற நாடுகளுக்கும் பிரதமர் மோடியின் செய்தி என்ன என்பதை இனி வரும் நாட்களே சொல்லும்.