இந்தியாவில் இன்று மற்றும் நாளை இரவு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. நிலவு, பூமி மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் உண்டாகிறது. அப்போது பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் என்கிறோம். இதனை நிலவு மறைப்பு என்றும் அழைக்கிறார்கள். சூரியனின் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் நிலவு தெரியாது. ஆனால் இன்று நடைபெற இருப்பது பகுதி சந்திர கிரகணம். அதாவது பூமி சரியாக நிலவினை இன்று மறைக்காது. 149 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவ்வாறு நிகழும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின் இந்தியாவில் 2021ஆம் ஆண்டுதான் அடுத்த முழுமையான கிரகணம் தோன்றும்.
இந்த பகுதிநேர சந்திர கிரகணம் எப்படி உருவாகிறது என்பதைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.
இந்தியாவில் நள்ளிரவு சரியாக 1.32 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி, அதிகாலை 3:01 மணிக்கு உச்சம் அடைந்து, மாலை 4.30 மணிக்கு முடிகிறது. சுமார் 5 மணி நேரம் வரையில் சந்திரகிரகண காலம் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனை வெறுங்கண்ணால் பார்க்கலாம். இதனால் எந்த தீங்கும் வராது என்கிறார்கள் வானியல் ஆராய்ச்சியாளர்கள். இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பகுதி, அட்லாண்டிக் பகுதி, இந்திய பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காண முடியும்.
கிரகணத்தின்போது செய்யக்கூடாதவை
பொதுவாக இந்தியாவில் கிரகணத்தின் போது சில விஷயங்களை மக்கள் தவிர்க்கின்றனர். கிரகணத்தின் போது கடவுள் வழிபாட்டை தவிர்ப்பது, உணவு உண்ணாமை, கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் பண்டைய காலந்தொட்டே புழக்கத்தில் இருந்திருக்கிறது. கிரகணம் முடிந்த பிறகு நீராடிய பின்னர் கடவுளை வழிபடவேண்டும். இதனால் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.

இன்று நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் பல முக்கிய கோவில்கள் கிரகண நேரத்தில் நடை சாத்தப்பட இருக்கிறது.