டி.வி.எஸ் நிறுவனத்தின் புதிய அப்பாச்சி ஆர்.டி.ஆர் 200 Fi E100 பைக் விற்பனைக்கு வர இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கர்நாடகம், மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் முதற்கட்டமாக விற்பனைக்கு வரும் இந்த பைக்கின் விலை 1.2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எத்தனால் நிரப்பும் பங்குகள் இல்லை. ஆனால் இந்த பைக் விற்பனை அறிமுக வ்ழாவில் பேசிய இந்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி,” எரிபொருள் அமைச்சகம் இனிவரும் காலங்களில் எத்தனால் மற்றும் பியூட்டேன் ரக பங்குகள் வைக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த பைக் உலகம் முழுவதும் சுமார் 35 லட்சம் பைக்குகள் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்துவரும் வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க உலகின் வளர்ந்த, வளரும் நாடுகள் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மேலும் அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் கச்சா எண்ணெயின் விலையை கணிக்க முடியாததாக மாற்றியிருக்கிறது. அத்தோடு, மரபுசார் வளங்களை அதிகம் பயன்படுத்துவதை இயற்கையின் வீழ்ச்சி நோக்கிய பயணமாகவே பார்க்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதெற்கெல்லாம் ஒரே தீர்வு மரபுசாரா மற்றும் மாற்று எரிபொருள் நோக்கி நகர்வதே ஆகும். சூரிய ஒளி, எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் ரக கார்களை நோக்கி உலகின் கவனம் திரும்பத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இந்த அப்பாச்சி பைக்கின் மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட போதே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. புற வடிவமைப்பில் முந்தய அப்பாச்சி பைக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனினும் எத்தனால் லோகோ கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்
பைக்கின் பெட்ரோல் டேங்க் அதிகபட்சமாக 12 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 21 bhp பவரைத் தரவல்ல சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டார்க்கைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 18 Nm கிடைக்கும். 12V பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்புறமாக மோனோ டியூப் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 129 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த பைக்கில் இருக்கும் அலாய் வீல்ஸ் இதற்கு மிகப்பெரிய ப்ளஸ்.

தாவரங்களிலிருந்து எத்தனால் பெறப்படுவதால் இதனை எரிபொருளாக உபயோகிக்கும் போது வெளிவரும் புகையில் நச்சுப்பொருட்களின் அளவு குறைவாகவே இருக்கும். உதாரணமாக எத்தனால் பயன்படுத்தும்போது நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கரியமில வாயுவின் அளவு சொற்ப அளவிலே இருக்கும். அத்தோடு கார்பன் மோனாக்சைடு மற்றும் சல்பர் ஆகியவற்றின் அளவும் மிகக்குறைவாகவே உள்ளது. அதன்காரணமாகவே இந்த பைக் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அரசு விமானங்களுக்கு பியூட்டேனை எரிபொருளாக பயன்படுத்தவும் அரசு முயற்சி எடுத்துவருவதாக கட்கரி தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.