செல்போன் என்பது மனிதர்களுக்கு ஆறாம் விரலாக மாறிவிட்டது. தகவல் தொடர்பு சாதனம் என்பதெல்லாம் கடந்து உலகத்தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. இணையம் மூலமாக வீட்டின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்கிறோம். ஸ்விக்கி, சொமாட்டோ. உபர் என பேச்சிலர்களுக்கு படியளக்கும் நிறுவனங்கள் தொடங்கி பயணம், ரீசார்ஜ் என சகலத்திற்கும் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. செல்போன் மோகம் இளைஞர்களைக் காட்டிலும் குழந்தைகளிடம் அதிகமாக இருக்கிறது. குனிந்த தலை நிமிராமல் அத்தனை பவ்யமாக செல்போன்களில் மூழ்கியிருக்கும் அனைவருக்கும் புதிய அதிர்ச்சி ஒன்றை மருத்துவர்கள் அளித்திருக்கிறார்கள். அதிக நேரம் குனிந்த நிலையில் செல்போன் உபயோகித்தால் தலையின் கபாலத்தில் கொம்பு முளைக்கும் என அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்த ஆய்வு.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சன்ஷைன் கடற்கரைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் ஷஹார் (David Shahar) மற்றும் மார்க் சேயர்ஸ் (Mark Sayers) என்ற இரு விஞ்ஞானிகள் தான் இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு இவர்கள் enlarged external occipital protuberance என்னும் தலைப்பில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை பல அதிர்ச்சியான தகவல்களை முன்வைக்கிறது. 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களை ஆய்வில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். இதில் பங்கேற்றவர்களில் 40% பேருக்கு தலையின் மண்டை ஓட்டில் பின்புறமாக எலும்பு வளரும் சாத்தியம் அதிகமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
என்ன காரணம்?
குனிந்து செல்போன்களை உபயோகிக்கும்போது உடலின் எடை முழுவதும் தலைப்பகுதிக்கு செல்கிறது. இதனால் பின்தலையில் கபால எலும்பிற்கு கீழே 3 முதல் 5 மில்லிமீட்டர் வரையிலான எலும்பு வளர்ச்சி பெறுகிறது. இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட டேவிட் பேசும்போது “இளைஞர்கள் அதிகமாக செல்போன்களை தலையை கவிழ்த்த நிலையிலேயே உபயோகிக்கிறார்கள். இதனால் எலும்பு வளர்ச்சி பெறுவதோடு கடுமையான தலைவலியையும் கொடுக்கும். என்றார்.

ஆய்வில் டேவிட்டோடு பங்கெடுத்த சேயர் ” எதிர்காலத்தில் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும். மேலும் இது முதுகுத்தண்டு இயக்கத்தையும் பாதிக்கும் என்றார். இனியாவது வீட்டில் குழந்தைகளிடம் செல்போனைக் கொடுக்கும் முன்பு கொஞ்சம் யோசியுங்கள்.
Also Read: குழந்தைகள் நன்றாக சாப்பிட்டும் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கான 7 காரணங்கள்